Sonntag, Februar 08, 2009

மாதவிடாய் நிற்றல்

- டொக்டர்.எம்.கே.முருகானந்தன் -

அந்தப் பெண் பயந்தடித்துக் கொண்டு ஓடி வந்தாள். மாத விடாய் வர வேண்டிய தினத்துக்கு வரவில்லையாம். 10 நாட்கள் பிந்திவிட்டதாம். பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள். தங்கினால் வெட்கக் கேடு.

இன்னொரு பெண்ணின் பிரச்சனை மிகவும் அந்தரங்கமானது. கணவனுடன் சேர்ந்திருக்க விருப்பமுள்ள போதும், சேர்ந்திருக்கும் போது அவளுக்கு முடிவதில்லை. சற்று வேதனை. பொறுத்துக் கொண்டாலும், கணவனுக்கு இதமாக இல்லை என அதிருப்திப்படுகிறான்.

மற்றொருத்திக்கு மேலெல்லாம் எரிவு, படபடப்பு, பதற்றம், சினம், காரணம் சொல்ல முடியாத வியர்வை, உடல் உழைவு.

இவர்களுக்கெல்லாம் என்ன பிரச்சனை?

இவர்கள் வயது 50க்கு சற்று கூட அல்லது குறைய. மாதவிடாய் முற்றாக நிற்பதோடு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்.

முதற் பெண்ணுக்கு சிறுநீர்ப் பரிசோதனை செய்தபோது கர்ப்பம் தங்கவில்லை என்பது உறுதியாகிற்று.

மாதவிடாய் முற்றாக நிற்பதற்கு முந்தைய காலங்களில் இவ்வாறு பிந்தி வருவது சகசம். நாற்பது வயதை அண்டிய காலங்களிலேயே மாதவிடாய் குழப்பங்கள் சிலரில் ஆரம்பித்து விடும்.

ஆரம்பத்தில் 8 நாள் 10நாள் என முந்தி முந்தி வரும். ஆயினும் நாட் செல்லச் செல்ல பிந்தத் தொடங்கும். 10, 15 நாட்கள் என ஆரம்பித்து 2,3 மாதத்திற்கு ஒரு தடவையென தாமதமாவதுண்டு.

ஆனால் எல்லோருக்கும் அப்படித்தான் நடக்கும் என்று சொல்ல முடியாது. திடீர் என எவ்வித ஆர்ப்பாட்டம் இன்றி நின்று விடுவதும் உண்டு. மோசமான நிலையில் குருதி இறைத்து சத்திரசிகிச்சை வரை போவதும் உண்டு.

எவ்வாறாயினும் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களில் 24 மாதங்களுக்கும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 12 மாதங்களுக்கும் தொடர்ந்து வராதிருந்தால் மட்டுமே மாதவிடாய் முற்றாக நின்று விட்டதென நிச்சயமாகக் கூறலாம். சாத்தியங்கள் குறைவாயினும் அதுவரை கரு தங்காது என அறுதியாகக் கூற முடியாது. இவ்வயதில் கருத்தடை முறையாக ஆண் உறை பாவிப்பது பொருத்தமாக இருக்கும்.

இரண்டாவது பெண்ணுக்கு மாதவிடாய் முற்றாக நின்றுவிட்டதால் உறுப்பின் மென்சவ்வுகள் முதிர்ந்து அவளது பிறப்புறுப்பு சற்று இறுகிவிட்டது. அத்துடன் அதற்கு ஈரலிப்பையும் வழவழுப்பையும் தரும் சுரப்பிகளின் செயற்பாடு குறைந்ததால் வரட்சியாகி விட்டது. இதனாலேயே உறவு சுகமாக இருக்கவில்லை.

இதற்காக கணவனும் மனைவியும் கடுகடுப்பாகி சினத்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை. வரட்சியையும், இறுக்கத்தையும் தணிக்கக் கூடிய கிறீம் வகைகள் இருக்கின்றன. இவற்றை உபயோகிப்பதின் மூலம் குடும்ப வாழ்வில் மீண்டும் வசந்தம் வீசவைக்கலாம்.

மூன்றாவது பெண்ணுக்கு ஏற்பட்ட வியர்வை, பதற்றம், படபடப்பு, தூக்கக் குறைவு, முதலானவை மாதவிடாய் நிற்கும்போது நிகழும் ஹோர்மோன் குறைபாடுகளால் ஏற்படுவது. நோயாளிக்கு மிகுந்த துன்பத்தைக் கொடுக்கும் இவ்வறிகுறிகள் வீட்டில் உள்ள ஏனையவர்களால் பொதுவாக உணரப்படாதவை.

'என்ன சின்ன விசயங்களுக்கெல்லாம் பெரிய Fuss பண்ணுகிறா' என அவர்களை எண்ண வைக்கும்.

தினசரி உடற்பயிற்சி, தியானம், சுவாசப் பயிற்சி, குளிர்ச்சியான சூழல் போன்றவை இவ்வறிகுறிகளைத் தணிக்க உதவும். Evening primrose oil, Soya, மற்றும் சில கிழங்கு வகைகளிலிருந்து பெறப்படும் இயற்கை பொருட்கள் அவ்வறிகுறிகளைத் தணிக்கின்றன என நம்பப்படுகிறது.

இவற்றால் முடியாதபோது ஹோர்மோன் மாத்திரைகளை சில காலம் உட்கொள்ள வேண்டி வரலாம்.

மாதவிடாய் முற்றாக நிற்றல் என்பது ஒரு நோயல்ல. வாழ்க்கைச் சக்கரத்தின் தவிர்க்க முடியாத ஒரு பகுதி. ஆயினும் அதன் போது ஏற்படும் உடல் ரீதியானதும், உளரீதியானதுமான பல மாற்றங்கள் சில பெண்களுக்கு மிகுந்த துன்பத்தை அளிக்கின்றன.

மேற்கூறிய மாற்றங்களைத் தவிர சிறுநீர் சம்பந்தமான சில பிரச்சனைகளும் மிகுந்த இடைஞ்சலை ஏற்படுத்துகின்றன.

அடிக்கடி சிறுநீர் கழித்தல், இரவில் இதற்காக அடிக்கடி எழும்புவதால் தனதும், வீட்டில் உள்ளவர்களினதும் தூக்கத்தையும் குழப்பல், சிறுநீரை அடக்க முடியாமல் தன்னிச்சையின்றிச் சிந்துதல், இருமும்போதும், தும்மும்போதும், முக்கும்போதும் தன்னையறியாது சிறுநீர் சிந்துதல் போன்றவை சில்லறைப் பிரச்சனைகள் போல் தோன்றினாலும், நோயாளிக்கும் வீட்டினருக்கும் சிரமங்களையும் மனவிரிசல்களையும் ஏற்றபடுத்தக் கூடியளவு சிக்கலானது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

எலும்புத் தேய்வு (Osteoporosis), இருதய நோய்கள் போன்ற வேறு சில பாதிப்புகளும் மாதவிடாய் முற்றாக நின்றபின் பெண்களுக்கு வருவதற்கான சாத்தியங்கள் அதிகம்.

தலை முடி உதிர்ந்து மென்மையாகி சோபை இழப்பது மாதவிடாய் நின்ற பின் ஏற்படும் மற்றொரு பிரச்சனையாகும்.


'வயதாகிவிட்டது. என்ன செய்வது? போறமட்டும் இவற்றையெல்லாம் பொறுத்துக் கொள்ள வேண்டியதுதான்' என விரக்தியோடு வாழ வேண்டியதில்லை. பெண்ணாய்ப் பிறந்த பாவம் என கழிவிரக்கம் கொள்ள வேண்டியதில்லை.

நீங்களும் மற்றவர்கள் போல மகிழ்வோடு வாழலாம். வசந்தங்கள் மீண்டும் வரும்.

இவற்றைக் குணமாக்க மருத்துவம் இருக்கிறது. ஒரு சிலவற்றை முற்றாகக் குணமாக்க முடியாவிட்டாலும் பிரச்சனைகளின் தாக்கங்களைத் தணித்து நலமாகவும் மகிழ்வாகவும் வாழ வழிகள் இருக்கவே செய்கின்றன.

நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான். தயக்கத்தை விட்டு உங்கள் பிரச்சனைகளை மருத்துவருடன் வெளிப்படையாகக் கலந்துரையாடுங்கள். வெளிப்படையாக என்பதை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

Quelle - டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

Donnerstag, April 17, 2008

கருத்தரிப்பின் போது

கருத்தரிப்பின் போது உங்கள் உடம்பில் ஏற்படும் மாற்றங்கள்.

கருத்தரிப்பின் போது உங்கள் உடம்பில் ஏற்படும் மாற்றங்கள் பெண்பாலுறுப்புகளில் மட்டுமன்றி மற்றைய உறுப்புகளிலும் ஏற்படுகின்றன. அவ்வாறு ஏற்படும் மாற்றங்கள் யாவும் பிரசவமான ஆறு கிழமைகளுக்குள் பழையபடி முன்போல் மாறிவிடுகின்றன. உங்கள் உடலுறுப்புகளில் ஏற்படும் மாற்றங்கள் எல்லாம் (பிரதானமாக) கருக்கொடியிலிருந்து (Placenta) சுரக்கும் இயக்கு நீர்களினால் ஏற்படுவன. இம்மாற்றங்களில் பெரும்பாலானவை கருத்தரிப்பு ஏற்பட்ட உடனேயே தொடங்கி கர்ப்பகாலம் முடிவாகும் வரை தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கும். இவ்வாறு ஏற்படும் மாற்றங்களில் அதிகமானவை பெண் பாலுறுப்புகளில் ஏற்படும் மாற்றங்களே.

கருப்பை (Uterus)
இது சாதாரண பெண்களில் (கரு அற்ற நிலையில்) 50-60 கிராம் எடையுடையஇ அநேகமாக கெட்டியான ஒரு உறுப்பாக உள்ளது. கருத்தரித்த பின்னர்இ இது மெலிவான ஒரு உறுப்பாக மாறி ஒரு குழந்தைஇ கருக்கொடிஇ குழந்தையைச் சுற்றியுள்ள பனிக்கொடி என்பவற்றை ஏற்றுக்கொள்ளக்கூடிய உறுப்பாகின்றது. அதன் முழு எடை 1 கி;.கிராமிற்கு மேல் இருக்கும். இதன் உள் அளவு 500-1000 தடவை கரு அற்ற நிலையிலிருந்து கூடியுள்ளது! இவை பிரதானமாக கருப்பையிலுள்ள திசுக்கள் நீள்வதாலும் மிகை வளர்ச்சியினாலும் (இயக்கு நீர்களினால்) ஏற்படுவன. வழக்கமாக தலைகீழாக வைக்கப்பட்ட பேரிக்காய் உருவத்திலிருந்து உருண்டையான உருவமாக 3ம் மாதத்திலும் நீள் வட்டமாக கர்ப்ப முடிவிலும் இருக்கும்.

கருப்பை வாய் (Cervix)இது கரு அற்ற நிலையில் இருக்கும் கெட்டியான தன்மையிலிருந்து மெதுவான தன்மையை அடைகின்றது. இதன் நிறமும் சற்று நீல நிறச் சாயலை அடைகின்றது. இவை இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் ஏற்படுவன. அது மட்டுமன்றி கருப்பை வாய் முழுவதும் ஊதுகின்றது. கருத்தரிப்பு ஏற்பட்ட உடன் ஒருவித சளிக்கட்டி (Mucus) இதன் வாயை அடைகின்றது. இது பிரசவம் தொடங்கிய பின் வெளியேறுகின்றது. இது சற்று இரத்தத்துடன் சேர்ந்து பிரசவத் தொடக்கத்தில் இரத்தக் கசிவாக (Show) வெளி வருகின்றது. கர்ப்ப கால முடிவில் கருப்பை வாய் இன்னும் மெதுமையாகி, இலகுவாக விரிவடையக் கூடியதாக மாறுகின்றது. இதனால் பிரசவத்தின் போது முழுமையாக விரிவடைந்து குழந்தை வெளியேற உதவுகின்றது. இம் மாற்றங்கள் எல்லாம் பிரதானமாக கருப்பை இயக்கு நீரினால் ஏற்படுகின்றன.

யோனிக்குழல். (Vagina)இதன் உள் வரி மென் சவ்வு (Mucosa) கருத்தரித்த பின்னர் கடினமாகிறது. இதன் இரத்த ஓட்டமும் அதிகரிக்கின்றது.இதன் விளைவாக இதிலிருந்து சுரக்கும் திரவம் (Secretions) அதிகரிக்கின்றது. இதனால் யோனிக்குழலின் நிறமும் மாற்றமடைகின்றது. சளி கட்டிபடுதல் யோனிக்குழலின் அணுக்கள் விரிவடைதல் அணுக்களைச் சேர்த்து வைக்கும் இணைப்புத் திசுக்கள் (Connective tissues) தளர்தல் என்பன மூலம் யோனிக்குழலின் நீளம் அதிகரிக்கின்றது. அத்துடன் இதன் சுவர்கள் விரிவடையவும் உதவுகின்றது. இவ்வாறு விரிவடைவதனால் இதன் மூலம் குழந்தை (சில வேளைகளில் 4-5 கி.கி குழந்தைகள் கூட) பிறக்கக் கூடியதாக உள்ளது.

கருப்பை வாயிலிருந்தும் யோனிக் குழலிருந்தும் உற்பத்தியாகும் திரவங்கள் கூடுதலால் கருவுற்ற பெண்களில் அதிகம் வெள்ளைபடுதல் ஏற்படுகின்றது. “வெள்ளை படுதல்” என்பது யோனிக்குழல் மூலம் வரும் திரவத்தை குறிப்பது. இது சாதாரண சுரப்புஇ கருவுற்றிருக்கும் போது ஏற்படும் மாற்றங்களால் கூடுதலாக ஏற்படுகின்றது. இதனால் ஒரு தீங்கும் ஏற்படாது. இது வெள்ளை நிறமாகவும் சற்றுத் தடிப்புள்ளதாகவும் இருக்கும். இது அமிலத்தன்மை வாய்ந்தது. யோனிக்குழலில் உள்ள ஒரு தீமையற்ற லக்டொபசிலஸ் (Lactobacillus) என்னும் நுண்கிருமியால் ஏற்படுவது. சில வேளைகளில் இம் மாற்றங்களால் துன்பம் விளைவிக்கக் கூடிய கிருமிகளும் யோனிக்குழலில் ஏற்படும். இவை கருத்தரிப்பின் போது ஏற்படும் மிதமிஞ்சிய யோனிக்குழல் கிருமி நோய்களுக்குக் காரணமாகின்றன. (இவற்றைப் கற்றி “கருத்தரிப்பின போது ஏற்படும் நோய்த் தொற்றுக்கள்” என்ற அத்தியாயத்தில் பார்க்கவும்.

மார்பகங்கள். (Breasts)மார்பகங்கள் பெரிதாகி அவற்றின் முலைக் காம்புகளும் பெரிதாகின்றன. அவற்றின் நிறமும் மாற்றமடைகின்றன. (மேலும் கருமை அடைகின்றன.) அவை சற்று அதிகமாக நிமிர்ந்தும், சிலிர்ப்பும், தொடு வலியுணர்ச்சியும் ஏற்படுகின்றன. முலைக் காம்புகளிலிருந்து ஒரு வகையான திரவம் ஊறும். இதை களிம்புப் பால் அல்லது சீம்பால் என்று கூறுவார். இது 12 கிழமைகள் மட்டில் தொடங்கும். மார்பகங்களை சற்று அழுத்தினால் இத்திரவத்தை வெளியேற்றலாம்.

இருதயமும் இரத்தக் குழாய்களும்(Heart and Blood Vessels)கருத்தரிப்பு முடிவடையும் காலத்தில் (பிரசவத்திற்கு முன்னர்) உங்கள் இரத்த ஓட்டம் 40 வீத மட்டில் அதிகமாகி இருக்கும். இது உங்கள் பெருக்கும் கருப்பை இரத்தக் குழாய்கள் என்பவற்றைத் தாக்குப்பிடிப்பதற்காக ஏற்படுகின்றது. உங்கள் இரத்தத்திலுள்ள சிவப்பணுக்களும் அதிகரிக்கின்றன (1ஃ3 பங்கு). இது பிரதானமாக குழந்தைக்கு தேவைப்படும் பிராண வாயுவையும் இரும்புச் சத்தையும் கொண்டு செல்வதற்காகவே ஏற்படுகின்றது. சாதாரண கருத்தரிப்பின் போது உங்களுக்கு தேவையான இரும்புச்சத்து 1000மி.கி அளவுடையது. இது கூடிய சிவப்பணுக்கள் குழந்தைஇ கருக்கொடி என்பன மட்டுமன்றி பிரசவத்தின் போது ஏற்படும் இரத்த ஒழுக்கையும் தாக்குப் பிடிப்பதற்காகத் தேவைப்படுகின்றது. (பிரசவத்தின் போது 500 மி.லீ அளவுள்ள இரத்தம் சாதாரணமாக வெளியேறும்.) இரும்புச்சத்தை போதிய அளவு எடுக்காவிட்டால் (சாப்பாட்டு மூலமோ அல்லது மாத்திரை மூலமோ ) உங்களில் இரும்புச் சத்துக் குறைவான இரத்தசோகை (யுயெநஅயை) ஏற்படும். இரத்தத்தைக் கட்டி படச் செய்யும் பொருட்களும் (உறைதல் காரணிகள் - (Clotting factors) அதிகமாகின்றன. இதனால் கருத்தரிப்பின போது இரத்தம் அதிகமாக ஓடுவதற்கும் கட்டிபடுவதற்கும் இடையிலுள்ள நிலைஇ மிக நுண்மையான சமப்படுத்தல் சற்று மாறுபட்டுஇ இரத்தம் கட்டி படும் பக்கமாக மாறுகின்றது. இதன் காரணமாக கருத்தரிப்பின் போதும் பிரசவமான ஆறு கிழமைகளுக்குள்ளும் இரத்தக் கட்டி ஊந்படுதல் இது இரத்தக் குழாய்களை அடைத்தல் இக்கட்டி பிரிந்து போய் நுரையீரலிலுள்ள நாளங்களை அடைப்பது என்பன அதிகரிக்கின்றன. கருத்தரிப்பில் ஏற்படும் மாற்றங்களை தாங்குவதற்காக இருதயமும் இரத்தக் குழாய்களும் அளவுக்கு சற்று அதிகமாகவே மாற்றங்கள் அடைகின்றன. இரத்த ஓட்டம் 40-50 வீதம் அதிகரிக்கின்றது. இருதயத் துடிப்பு 1 நிமிடத்திற்கு 10-15 அதிகரிக்கின்றது. இக் கூடிய இரத்த ஓட்டம் இரத்தக் குழாய்களில் எற்படும் புற எதிர்பாற்றலால் சமப்படுத்தப்படுகின்றது. கருத்தரித்தலின் போது ஏற்படும் இரத்த அழுத்த நோய்கள் உள்ளவர்களை தவிர்த்து மற்றவர்களில் இரத்த அழுத்தத்தில் அதிக மாற்றம் ஏற்படுவதில்லை.

உடம்பின் அதிகமான பாகங்களுக்கு பிரதானமாக சிறுநீரகங்களுக்கும்இ உடம்பை மூடியிருக்கும் தோலிற்கும் இரத்த ஓட்டம் அதிகமாகின்றது. இது இரத்தக் குழாய்கள் (பிரதானமாக மிகச் சிறிய குழாய்கள்) விரிவடைவதற்கும் (னுடையவந) அதனால் உடம்பிலுள்ள சுடு வெளியேறுவதற்கும் ஏதுவாகின்றது. (இச்சுடு உடம்பில் ஏற்படும் வளர்சிதை வினை மாற்றத்தால் (ஆநவயடிழடளைஅ) ஏற்படுகின்றது). இதனால் ஏற்படும் கழிவுப்பொருட்களை சிறுநீரகங்களும் தோலும் வெளியேற்றுகின்றன. கருத்தாரிப்பவர்கள் உடம்பு சுடாய் இருக்கிறது என்று கூறுவதற்கு இதுதான் காரணம். அத்துடன் அதிகமாக வியர்ப்பதற்கும் இது காரணமாகின்றது. இதனால் மூக்கடைப்பும் முரசிலிருந்து இரத்தக் கசிவும் எற்படக் கூடும்.

சுவாச மண்டலம் (Respiratory System ) பிரிப்புத்தசை (உதரவிதானம், Diaphragm – நெங்சக்கும் வயிற்றுக்கும் இடையில் உள்ள திசுக்களாலான ஒரு சுவர்) மேல் உயர்வதாலும் அதன் அசைவு குறைவதாலும் (வளரும் கருப்பை தடை செய்வதால்) நீஙடகள் மூச்சு விடும் போதுஇ உங்களால் மூச்சு விடுதலை உணரக்கூடியதாக உள்ளது. சுhதாரணமாக மூச்சு விடுதல் ஒருவராலும் உணரப்படுவதில்லை. (நுரை ஈரல் நோயாளிகளைத் தவிர.) நீங்கள் சற்று ஆழமாகவும் மூச்சு விட வேண்டி ஏற்படும். சில வேளைகளில் இதைத் தவறாக மூச்சுக் குழலிலோ நுரை ஈரலிலோ ஏதோ பிழை என்று பரிசோதனை செய்பவர்களும் உண்டு. ஆனால் இதில் ஒரு பிழையும் இல்லை என்ற முடிவையே தரும்.

கர்ப்பத்தினால் ஏற்படும் பிராண வாயுவின அதிக தேவை (சுவாசப்பை சுவாசக்குழல் என்பன வழக்கம் போல் வேலை செய்தாலும்) கிருமி நோய்கள் தொற்றினால் இவை மிகவும் அபாயகரமான நிலைமையை ஏற்படுத்தக்கூடும். ஆகவே உடனடியான சிகிச்சை அளிப்பது மிக அத்தியாவசியமாகின்றது.

Quelle - http://www.tamilhealth.net/index.php?option=com_content&task=view&id=58&Itemid=92

Montag, September 18, 2006

மாதவிடாய் ரென்சன் - தீர்வு என்ன?

- ஜனனி

பெண்கள் திடீரென்று சில நாட்களாகக் காரணமில்லாமல் எரிந்து விழுவது, வயிற்று வலி, தலைவலி, கோபப்படுவது, டிப்ரஷன், டென்ஷன் இவையனைத்தும் மாதவிடாயின் முன்பு அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளின் பிரதிபலிப்பு. ஹார்மோனின் வேலைகள்தான். Premenstrual Syndrome.. அதாவது, மாதவிடாயின் சில நாட்களுக்கு முன்பு ஏற்படும் சில அசௌகரியங்கள் அதற்கு பின்பு இருக்கும் மருத்துவ உண்மைகள், அதற்கான தீர்வுகள் பற்றி விளக்கமளிக்கிறார் மகப்பேறு மருத்துவர் கீதா ஹரிப்பிரியா!

சினை முட்டையை உற்பத்தி செய்கிற ஒவ்வொரு பெண்ணும், மாதவிடாய்க்கு முன்பு சில மாற்றங்களை அனுபவிக்கிறாள். மார்பக வலி, வீக்கம், தலைவலி, மனச்சோர்வு, தசைப்பிடிப்பு, எரிச்சல் போன்ற அறிகுறிகள் மாதவிடாய்க்கு முன்பு இருக்கும். இதனை மருத்துவம் Premenstrual Syndrome என்கிறது. அதிக சதவிகிதப் பெண்கள் உடலால் மட்டுமின்றி மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் தொடர்ந்து சில நாட்கள் அவர்களுடைய இயல்பு வாழ்க்கைப் பெரிதும் பாதிப்படைகிறது. முன்பெல்லாம் இதைச் சகித்துக் கொண்டு இயல்பு வாழ்க்கையைத் தொடரவேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால், இன்றைய மருத்துவத்தில் இதற்குத் தேவையான மருந்துகள் வந்தாகிவிட்டது. மாதவிடாய்க்கு முந்தைய நாட்களில், அவதிகள் காரணமாக பெண்கள் தங்கள் வேலைக்கோ, குடும்ப உறவுகளிலோ எந்தவித இடையூறுகளும் வராமல் ஜாலியாகச் சமாளிக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பு, பெரும்பாலான பெண்கள் மார்பகங்களில் கனமான உணர்வு அல்லது மார்பக வலி இருப்பதை அனுபவித்திருப்பார்கள். இதற்கு அடிப்படைக் காரணம், ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகமாவதுதான். செல் அணுக்களில் நீர் தேங்கலால், உடலில் வெயிட் போட்டு விட்டது போல கனமான உணர்வு தோன்றுகிறது. தலைவலி சர்வ சாதாரணமாகப் பலருக்கும் இருக்கும். இளம் பெண்களின் ஒற்றைத்

தலைவலிக்குக் காரணம், இந்த ஹார்மோனல் இம்பேலன்ஸ் தான். மேலும் பீரியட்ஸ் சமயத்தின் சில நாட்களுக்கு முன்பு முகப்பருக்கள் வரத் தொடங்கும். ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன், என்ட்ரோஜன் ஹார்மோன் அளவை மாற்றி, முகப்பருக்களைப் பருக்க வைத்துவிடும். உடலில் ஏற்படும் இந்தப் பிரச்னைகளின் பிரதிபலிப்பு உடல் சோர்வையும், மனப்பிரச்னைகளையும் கொடுக்கும். காரணமில்லாமல் எரிந்து விழுதல், அமைதியின்மை, மனக்கவலை, திடீரென்று அழுதல் என்று ஒரு கட்டுப்பாடு இல்லாமல் தங்கள் உணர்ச்சிகளை மற்றவர்களிடம் பிரதிபலிப்பார்கள்... வீட்டில் உள்ளவர்களும், கணவர்களும் இந்த நேரத்தில் அவர்களைப் புரிந்து கொண்டு அன்பாக நடந்து கொள்வதே அவர்களுக்குச்செய்யும் மிகப் பெரிய உதவியாக இருக்கும். பெண்களின் இந்தப் பிரச்னையைப் புரிந்து கொள்ளாமல், அவர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு சண்டை போட்டால், அவர்களுடைய உடல்நலம் தேவையில்லாமல் பாதிக்கப்பட்டு விடும்.

மாதவிலக்கு ஏற்படுவதற்கு ஓரிரு நாட்கள் முன்பு அடிவயிற்றிலும், பக்கவாட்டிலும் சற்று கனமான உணர்வு, சூடு தெரியும். இதை வைத்தே தீட்டு ஏற்பட இருக்கிறது என்பதைப் பெரும்பாலும் எல்லாப் பெண்களும் அறிந்திருப்பார்கள். இதற்குக் காரணம் கருப்பையிலும், கரு முட்டையிலும் ஏற்படும் அதிக இரத்த ஓட்டம்தான். சிலருக்கு வயிற்று வலி படாய்ப்படுத்தும். திடீரென்று ஏற்படும் வயிற்றுவலி, சிலரை மயக்கமடையக் கூடச் செய்துவிடும். வலியால் சுருண்டு விடுவார்கள். நாக்கு வறண்டு போதல், வியர்வை, தலைசுற்றல் கூட இருக்கலாம். மாதவிலக்கு ஏற்பட்டவுடன் வலி படிப்படியாகக் குறையலாம். கையால் பிசைவது போல வலி இருந்தால் அது கருப்பை அதிகமாக சுருங்கி விரிவதால்தான் இருக்கும். கருப்பையின் உட்சுவர் சீராகச் சிதையாமல், தாறுமாறாகச் சிதைவதால் சிலருக்கு வலியை ஏற்படுத்தலாம். தாங்கமுடியாத வலி இருந்தால் மட்டுமே மருத்துவரின் ஆலோசனையின்படி வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்ளவேண்டும்.

ஒரு சில பெண்களுக்கு கருப்பையில் கட்டிகள், கரு முட்டைப் பையில் நீர்க்கட்டிகள் போன்றவை இருந்தால் கொஞ்சம் சீரியஸ் கவனம் தேவை. கருப்பையின் உட்சுவர் திசுக்கள் கருப்பையினுள் வளர்வதுண்டு. அதேபோல, சினைக்குழாய், சினை முட்டைப்பை, வயிற்றுப் பகுதி போன்ற பகுதிகளாக வளர்ந்து ‘எண்டோமிட்ரியோஸிஸ்’ எனப்படும் தொந்தரவுகளுக்கு ஆளாகலாம். எண்டோ மிட்ரியோஸிஸ் தீவிரமடைந்து சிறு குடலைப் பாதிக்கும்போது தான் மாதவிடாயின் போது வாந்தி, பேதி ஏற்பட்டுவிடுகிறது. எனவே, மாதவிடாயின் போது இதுபோன்ற தீவிர பிரச்சினைகள் இருந்தால், அதைத் தள்ளிப் போடக் கூடாது. இதனால்கூட மாதவிடாயின் போது தீராத வலி ஏற்படும். இதுபோன்ற பிரச்னைகளுக்கு சிகிச்சைகள் அவசியம்!

பொதுவாகத் தீட்டுக் கோளாறுகள் என்று நீங்கள் மருத்துவரை அணுகினால் அவர் ஹார்மோனல், இம்பாலன்ஸ் என்று தான் குறிப்பிடுவார். இந்த ஹார்மோனல் இம்பாலன்ஸ் என்பது, ஈஸ்ட்ரோஜன், புரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களின் குறையினைக் குறிக்கிறது. இந்த ஹார்மோன்களின் செயல்பாட்டை, மூளையின் அடிபாகத்தில் உள்ள பிட்யூட்டரி எனப்படும் சுரப்பி கட்டுப்படுத்துகிறது. அதுமட்டுமல்ல, இந்த பிட்யூட்டரி சுரப்பியின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவது, ‘ஹைம்போதலாமஸ்’ எனப்படும் மூளையின் ஒரு பகுதி, இந்தப் பகுதி, உடலின் தேவையை அறிந்து அவ்வப்போது பிட்யூட்டரிக்கு கட்டளையிட்டுக் கட்டுப்படுத்தும்! சாதாரணமாக ஏற்படும் மன பயம், அதிர்ச்சி போன்றவை மாதவிலக்கால் சற்று மாற்றங்களை ஏற்படுத்தக் காரணமாக இருப்பது, இந்த ‘ஹைபோதலாமஸ்’ எனும் பகுதி தான்! பொதுவாக, தீட்டுக் கோளாறுகளுக்கு மருத்துவர் அளிக்கும் பரிசோதனைச் சீட்டுகளைப் பாருங்கள், இந்த ஹார்மோன்களின் நிர்ணயப் பரிசோதனையாகத்தான் இருக்கும். பொதுவாக, மாதவிடாய் ஏற்படவும், முட்டை நல்ல ஆரோக்யமாக வெளிவர... சினைமுட்டைப்பை, பிட்யூட்டரி, ஹைப்போதலாமஸ் மற்றும் கருப்பை போன்றவற்றின் ஒத்துழைப்பு ஒன்றுக்கொன்று சீராக இருக்க வேண்டும். இதில் எந்த ஒரு உறுப்பில் கோளாறு ஏற்பட்டாலும் தீட்டுக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

மாதவிலக்கின் முன்பு ஏற்படக்கூடிய இந்த அறிகுறிகளில் ஏற்படும் பிரச்னைகளை உட்கொள்ளும் உணவின் மூலமாகத் தீர்வுக் காணலாம். சரி... என்ன செய்யலாம்?

கொழுப்புச் சத்துள்ள உணவுகள் PMS (Pre menstrual syndome) அறிகுறிகளை அதிகப்படுத்தும். குறைவான கொழுப்புள்ள உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும்.

உப்பு அதிகம் சேர்ந்த ஊறுகாய், நொறுக்குத்தீனி வகைகளை ஒதுக்கிவிட வேண்டும்.

PMS இன்போது ஸ்வீட், ஐஸ்க்ரீம்களை ஒரு பிடி பிடித்தால் நன்றாக இருக்குமே என்று படும். சாக்லெட், சிப்ஸ் போன்றவற்றை ஒரு வெட்டு வெட்டத் தோன்றும். இருந்தாலும் இனிப்புக் குறைவாக உள்ள உணவுகளைச் சாப்பிடுவதே நல்லது.

மாதவிடாய் நாட்களுக்கு ஒரு வாரம் முன்பு, இருபது நிமிட வாக்கிங் பழகிக்கொண்டால் மனரீதியான பாதிப்புகளைக் குறைக்கலாம்.

காபி, டீ போன்ற பானங்களைத் தவிர்க்கலாம். தினமும் இரண்டு கப்பிற்கு மேல் காபி, டீ, குடிக்கும் பெண்கள் சாதாரணப் பெண்களைவிட ஏழு மடங்கு றிவிஷி ஆல் அவதிப்படுவார்கள் என்கிறார்கள், ஆராச்சியாளர்கள். காபியில் உள்ள காஃபின் பதற்றத்தையும் எரிச்சலையும் அதிகப்படுத்தும்.

7_8 மணி நேரம் உறக்கம் கட்டாயம்.

இந்தச் சமயத்தில் வைட்டமின் ஏ,டி அவசியம். இவை அதிகம் உள்ள கேரட், பசளைக்கீரை, பால் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்!

மார்பக வலி, களைப்பு போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெற, வைட்டமின் பி6 உதவும். மீன், கோழி, வாழை, உருளை போன்றவை வைட்டமின் பி6 உள்ள உணவுகள்.

மனஅழுத்தம் நீங்க வைட்டமின் ‘சி’ உள்ள ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை சேர்த்துக் கொள்ளுங்கள்!

இந்த உணவுப் பழக்கங்களை மாதவிடாயின் ஒரு வாரத்துக்கு முன்பும், மாதவிடாயின் போதும் கடைப்பிடித்தல் நல்லது!

றிவிஷி லிருந்து விடுபட குடும்பத்தாரின் சப்போர்ட் ஒவ்வொரு பெண்ணுக்கும் மிக முக்கியம். இதுதான் அவர்களின் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வாக அமையும்!

_ஜனனி
Quelle - Kumutham health (sep-2006)

Freitag, Juli 28, 2006

பெண்களின் மெனோபாஸ் நாட்கள்

நம்மில் பல பெண்களுக்கு, ‘மெனோபாஸ்’ என்றால் ‘மாதவிடாய் நின்றுவிடும்’ என்றுதான் மேலோட்டமாகத் தெரியுமே தவிர, அந்த வயதில் தங்களுடைய உடலில் என்னென்ன மாறுதல்கள் நடக்கிறது.... ஏன் மாதவிடாய் நிற்கிறது... அதனால் எந்தெந்த விஜயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்ற விவரங்கள் பெரும்பாலும் தெரிவதில்லை. அதே போல ‘மெனோபாஸ்’ என்றாலே, வியாதிகள் வரும் நேரம் என்றும் சிலர் பயந்து போவதுண்டு. இந்த பயங்களும் தேவையில்லை.

குழந்தை பருவம், டீன்ஏஜ் பருவம், குழந்தை பெற்றுக் கொள்ளும் பருவம் போல இதுவும் ஒரு பருவம். இந்தச் சமயங்களில் எதிலெதில் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறுவதே இக்கட்டுரை.

மெனோபாஸ் என்றால் என்ன?

நாற்பத்தைந்து வயதுக்கு மேல், பெண்ணின் ஓவரியின் செயல்பாடு குறைந்து, பீரியட்ஸ் முறையற்றதாகி, கடைசியாக சுமார் ஐம்பது வயதில் பீரியட்ஸ் சுத்தமாக நின்று விடுவதற்குப் பெயர்தான் மெனோபாஸ். அதாவது மாதவிடாய் நின்று விடும் நிலைக்குப் பெயர்தான் மெனோபாஸ்!

மெனோபாஸ் ஏற்பட்டதற்குப் பிறகு பெண்களால் கருத்தரிக்க முடியுமா?
மெனோபாஸிற்குப் பிறகு பெண்களால் கருத்தரிக்க முடியாது. ஏனென்றால் கருத்தரிக்கத் தேவையான கரு முட்டை யின் உற்பத்தி குறைவிடும்.

எந்த வயதில் மெனோபாஸ் வரலாம்?

சாதாரணமாக ஐம்பது வயதைக் கடந்தாலே மெனோபாஸ் வந்துவிடும். சிலருக்கு முப்பத்தைந்து வயதுக்கு முன்னாலும்கூட மெனோபாஸ் வரலாம். அதற்கு ப்ரீமெச்சூர் மெனோபாஸ் (Premature Meno Pause) என்று பெயர்.

என்னென்ன காரணங்களால் ப்ரீமெச்சூர் மெனோபாஸ் வருகிறது?

ஓவரியில் ஏதேனும் கட்டி இருந்து, ஓவரியை ரிமூவ் பண்ணியிருந்தாலோ, கீமோ தெரபி, ரேடியோ தெரபி போன்ற ட்ரீட்மென்ட் எடுத்தாலோ, இல்லையென்றால் வைரஸ் இன்ஃபெக்ஷனாலோ, ப்ரீமெச்சூர் மெனோபாஸ் வரலாம்.

ஒரு பெண் மெனோபாஸ் ஸ்டேஜை நோக்கிப் போகும்போது அவளுக்கு என்னென்ன அசௌகர்யங்கள் ஏற்படும்?

1. அதிக வியர்வை (ஹாட் ஃப்ளஷ்) :

ஏ.ஸி.யில் இருக்கும்போதும் நடுத்தர வயதுப் பெண்களுக்கு வேர்த்துக் கொட்டும். இதை ஹாட் ஃப்ளஷ் என்போம்! மெனோபாஸ் அவர்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதன் அறிகுறியே இந்த வியர்வை எல்லாம்... நம் பாட்டி காலத்திலேயே நாற்பதைக் கடந்த பெண்களுக்கும் கூட இப்படித்தான் வியர்த்துக் கொட்டியிருக்கும்... இதில் சங்கடப்பட என்ன இருக்கிறது என்கிறீர்களா!

பாட்டி காலத்தில், பெண்கள் வீட்டு வேலைகளை முடித்து விட்டு, காற்றோட்டமாகத் திண்ணையில் அமர்வார்கள். அவர்களுக்கு, இது ஒரு பெரிய விஷயமாக இருக்காது! ஆனால் நாற்பதைக் கடந்த இன்றைய பல பெண்கள், அலுவலகத்தில் உயர்ந்த பதவியில் இருக்கிறார்கள். அவர்களுக்கு வியர்த்துக் கொட்டினால் அத்தனை நன்றாக இருக்காது. ஆனால் இது போன்ற அசௌகர்யங்களே, மனதளவில் அவர்களுக்குப் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. அதனால் அதிக வியர்வையால் பாதிக்கப்படும் பெண்கள் சிகிச்சைகூட எடுத்துக் கொள்ளலாம்.

2. இரவு நேர படபடப்பு (நைட் ஸ்வெட்ஸ்):

இரவில் திடீரென வியர்த்துக் கொட்டும். மிகவும் படபடப்போடு காணப் படுவார்கள். இதனால் அமைதியான தூக்கம் போய், ஒரு வித சோர்வுக்கு ஆளாவார்கள்.

3. அடிக்கடி மாறும் மூட் (மூட் ஸ்விங்ஸ்) :

அடிக்கடி கோபம், எரிச்சல், அழுகை, விரக்தி என்று எல்லா உணர்ச்சிகளும் மாறி மாறி வரும். (‘‘நாற்பது வயதுக்கு மேல், பெண்களுக்கு திடீர் சோகம் ஏன்?’’ என்பதைப் பற்றி ஏற்கனவே பார்த்தோம்.)

4. வெஜைனா உலர்ந்து போதல் :

ஈஸ்ட்ரஜன் ஹார்மோன் குறைவால், வெஜைனாவின் பாதையை வழுவழுப்பாக வைத்திருக்கும் சுரப்புகள் குறைய ஆரம்பிக்கும். அதனால் வெஜைனா உலர்ந்து போய், தாம்பத்திய உறவின் போது அசௌகர்யமும், வலியும் உண்டாகலாம். தவிர, வெஜைனா பாதையில் வழுவழுப்பு ஏற்படுத்தும் இந்த திரவம்தான், அந்தப் பகுதியின் மென்மையான திசுக்களில், இன்ஃபெக்ஷன் ஏற்படாமல் தடுக்கிறது. ஈஸ்ட்ரஜன் குறைவால் இந்த சுரப்பும் குறையும் போது அங்கே இன்ஃபெக்ஷன் ஏற்பட ஏதுவாகிறது.

மெனோபாஸிற்குப் பிறகு வரும் நீண்ட கால விளைவுகள் என்னென்ன?

பல பெண்களுக்கு எலும்புகள் தேய்ந்து போகலாம்.. இதற்கு, ‘போஸ்ட் மெனோபாசுவல் ஆஸ்டியோ போரோஸிஸ்’ என்று பெயர்.

உங்களுக்கு ஒன்று தெரியுமா? மெனோபாஸிற்குப் பிறகு, பெண்களின் எலும்புகள் தேய்மானமடைந்து விடுவதால், லேசாக அவர்கள் தடுக்கி விழுந்தாலோ அல்லது குண்டுங் குழியுமான இடங்களில் ஆட்டோவில் சென்றாலோ கூட, எலும்புகள் உடைந்து ஃப்ராக்சர் ஏற்படும் அபாயம் இருக்கிறது.

அதனால் எலும்புத் தேய்மானத்திற்கு அவர்கள் ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்டால், இத்தகைய பிரச்னைகளைத் தவிர்க்கலாம். (எலும்புகள் தேய்மானம் அடைவதற்கு முன்பே, டாக்டரின் ஆலோசனைப்படி கால்சியம் மாத்திரைகளையும் எடுத்துக்கொண்டால், இந்தப் பிரச்னைகளைத் தவிர்த்து விட முடியும்!...)

பெண்களின் பிரத்யேக ஹார்மோனான ஈஸ்ட்ரஜன், இருதய பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க ஒரு பாதுகாப்புக் கவசம் போல் செயல்பட்டு வந்தது. மெனோபாசுக்குப் பிறகு ஈஸ்ட்ரஜன் சுரப்பு நின்று விடுவதால், இதயம் மற்றும் இரத்தக் குழாய்களில் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மெனோபாஸ் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகளும் ஏற்படலாம். கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்!

quelle - kumutham health

Dienstag, Juli 04, 2006

மார்பகங்கள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

ரீன் ஏஜில் பிரா தேர்ந்தெடுக்கும்போது ‘கிச்’சென்று இறுகப் பிடிக்கும் சைஸாக இருக்கக் கூடாது. மார்பகம் பெரிதாக வளரும் வயது என்பதால், பிராவின் அளவுக்கு அடங்காத பகுதி, பிதுங்கியது போன்ற நிரந்தர ஷேப்புக்கு உள்ளாகிவிடும். அந்தந்த வயதில் மாறும் மார்பக அளவுக்கு ஏற்ப, பிரா சைஸை மாற்றிக் கொண்டே இருக்கவேண்டும்.

கனமான மார்புள்ளவர்களுக்கு வெயிட்டில் மார்பகம் சீக்கிரமே தழைய வாய்ப்புள்ளது. சரியான பிரா போடாவிட்டால் இந்தத் தொல்லை இன்னும் அதிகம். இவர்கள் போடும் பிரா கனமான மார்பகங்களை கொஞ்சம் தூக்கித் தரும்படியும், சரியாகப் பொருந்தும்படி கொஞ்சம் டைட்டாகவும் இருக்க வேண்டும்.

கனமான மார்புள்ளவர்கள் இரவில் கண்டிப்பாக பிராவைக் கழட்டக் கூடாது. மற்றவர்கள், அதிக டைட் இல்லாத பிரா போட்டுக் கொள்ளலாம். கழட்டி விட்டும் படுக்கலாம்.

பெண்களின் உடல், கர்ப்பகாலத்தில், குழந்தைக்குப் பால் கொடுப்பதற்காக தயாராகும். அதனால் அந்த நேரத்தில் மார்பகம் அளவிலும், வடிவத்திலும் வழக்கத்தைவிட பெரிதாக மாறும். ஆகவே பிரா சைஸை மாற்றி, இறுகப் பிடிக்காதபடி போடுங்கள். முக்கியமாக நிப்பிளைச் சுற்றியுள்ள கறுப்பு நிறம் இன்னும் அதிகமாகும். ஆனால் அதற்காக பயப்படத் தேவையில்லை. இது நார்மல்தான்.

கர்ப்பத்தின்போது மார்பகம் சைஸில் பெரிதாவதால் அதில் கோடுகள் விழ வாய்ப்புண்டு. அதனால் கர்ப்ப காலத்தில் விட்டமின் ‘ஈ’ க்ரீம் தடவிக் கொள்ளுங்கள். சிலருக்கு நிப்பிளின் முனை நீளமாக இருக்காது. இது பால் குடிக்கும்போது குழந்தைக்கு சிரமத்தை ஏற்படுத்தலாம். அதனால் முன்னெச்சரிக்கையாக கர்ப்பத்தின் ஏழாம் மாதத்திலிருந்து குளிக்கும்போது மார்பு முனைகளை லேசாக இழுத்து விட வேண்டும். இதனால் பலன் இல்லையென்றால் டாக்டரிடம் காட்டுங்கள்.

பால் கொடுக்கும் முன்னும், கொடுத்த பிறகும் நிப்பிளைச் சுற்றி, தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்த பஞ்சை வைத்து சுத்தம் செய்ய வேண்டும். இதனால் பால் குடிக்கும் குழந்தைக்கு இன்ஃபெக்சன் வருவது தடுக்கப்படும்.

மெனோபாஸ் வரும் நேரத்தில் மார்பகத்தின் அளவில் மாறுதல் ஏற்படும். மார்பகத்தில் உள்ள கொழுப்பு டிஷ்யூ, அக்குள் பகுதியில் போய் சேரும். இதனால் இந்த வயதுப் பெண்களுக்கு பிளவுஸ், கை பக்கத்தில் மட்டும் பிடிப்பாகிவிடும். இதைத்தடுக்க வெயிட்டைக் குறைக்க வேண்டும். டாக்டரிடம் காட்டி, அவர் சொல்லும் எக்சர்சைஸை விடாமல் செய்ய வேண்டும்.

மெனோபாஸ் தாண்டிய வயதில் சில பெண்களுக்கு மார்பகத்தின் அளவு குறைந்து ஃபிளாட்டாகவும் மாறி விடலாம். இந்த நிலைக்கு ஒன்றும் செய்ய முடியாது. இதற்குத் தகுந்த அளவு பிராவை கச்சிதமாக தேர்ந்தெடுத்து போட்டுக் கொள்ளுங்கள்.

மெனோபாஸ் முடிந்தபின் மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ ஆறு மாதங்களுக்கு ஒரு முறையோ அவசியம் மார்பகத்தை செல்ஃப் டெஸ்ட் செய்து பார்த்துக் கொள்வதோடு டாக்டரிடம் மார்பகப் புற்று நோய்க்கான ‘மேமோகிராம்’ டெஸ்டும் செய்து பாருங்கள்.

ஏதாவது சில காரணங்களால் மார்பகத்தில் சிறிய காயங்கள் ஏற்பட்டால் உடனடியாக கேர் எடுத்து ஆன்டிசெப்டிக் க்ரீம் பூசுங்கள். தேங்காய் எண்ணெய்கூட பூசலாம். காயத்தின் அளவு பெரிதாக இருந்தால் கட்டாயம் டாக்டரிடம் போக வேண்டும். ஏனென்றால் மார்பகம் மிகவும் சென்ஸிட்டிவான உறுப்பு. உடனடியாக இன்ஃபெக்சன் ஏற்பட்டுவிட வாய்ப்புண்டு.

சில பெண்களுக்கு மார்பகத்தில் அங்கங்கே முடிகூட இருக்கும். சிலருக்கு இது பரம்பரை காரணமாக இருக்கலாம். வயதுக்கு வந்த டீன் ஏஜ் பெண்களுக்கும், திருமணமாகி குழந்தை இல்லாத பெண்களுக்கும், மாதவிடாய் சுற்று சரிவர வராத பெண்களுக்கும், இப்படி அதிகம் இருக்க வாய்ப்பு உண்டு. இதற்கு டாக்டரிடம் காட்டி முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பீரியட் நேரத்தில், பொதுவாக ஒரு வாரம் பத்து நாட்களுக்கு முன்னரே மார்பகத்தில் வலி வருவது சாதாரணமான ஒன்றுதான். ஹார்மோன் சுரப்பிகளின் மாறுதல்களால் இப்படி ஏற்படுகிறது. ஸோ, பயப்படத் தேவையில்லை.

குழந்தை பெற்றெடுத்த நிலையில் மட்டுமல்லாமல், சும்மாவே கூட சிலருக்கு நிப்பிளில் திரவக் கசிவு இருக்கும். பிராவிலும் நீர்க் கசிவின் அடையாளம் தெரியும். இதுபோல இருந்தால் உடனடியாக டாக்டரிடம் போக வேண்டும். பின்னாளில் இது கேன்சருக்கு கூட வழி வகுக்கும்.

மார்பகமோ அதன் நுனிப்பகுதியோ வழக்கத்துக்கு மாறாக தங்கள் அமைப்பிலோ, நிறத்திலோ மாறுபட்டிருந்தாலோ, மினுமினுப்பு மற்றும் வீக்கமாக இருந்தாலோ, மார்பகத்தில் அசௌகரியமோ வலியோ ஏற்பட்டாலோ, நிப்பிளில் திரவக் கசிவு இருந்தாலோ, பெண்கள், தங்களது மார்பகத்தை தாங்களே டெஸ்ட் செய்து பாருங்கள்.

பொதுவாக பீரியட்ஸ் முடிந்தபிறகு இந்த டெஸ்ட் செய்து பார்ப்பது நல்லது. கண்ணாடியின் முன் நின்று கையைத் தலைக்கு மேலே தூக்கிக் கொண்டு உள்ளங்கையை மார்பகங்களின் மீது வைத்து வட்ட வடிவில் தடவுங்கள்.

கையில் உருண்டையாக ஏதாவது தட்டுப்பட்டால் பயந்துவிடாதீர்கள். அது கேன்சர் கட்டியாகத்தான் இருக்க வேண்டும் என்பதல்ல. இப்படித் தென்படும் உருண்டைகளில், பத்துக்கு ஒன்பது ஒருவேளை அவை ஆபத்தில்லாத டியூமராகவோ, அடைத்துக் கொண்டிருக்கும் தாய்ப்பால் கட்டியாகவோ அல்லது நீர்க்கட்டிகளாகவோ கூட இருக்கலாம். நீர்க்கட்டி எனில் சுலபமான அறுவைசிகிச்சை மூலமே எளிதில் நீக்கிவிடலாம். ஆனாலும் அவை ஆபத்தில்லாத கட்டியா என்று தெரிந்து கொள்ள ‘மேமோகிராம்’ டெஸ்ட் செய்யவேண்டும்! கான்ஸருக்கான வீக்கம் எனில் சற்றே கடினமாக கையில் தென்படும். ஆனால், இந்த வீக்கங்களில் வலி இருக்காது. இப்படி ஏதாவது நீங்கள் டெஸ்ட் செய்யும்போது தென்பட்டால் எந்த வயதினராக இருந்தாலும் உடனடியாக டாக்டரிடம் போக வேண்டும்.

சிலருக்குத் திடீரென்று மார்பகம், அதிக கனமாகவும், வலியுடனும் மாறும். இதை இன்ஃபெக்சன் என்று கருதி சில டாக்டர்கள் ஆன்டிபயாட்டிக்குகளைத் தருகிறார்கள். ஆனால் கொழுப்புச் சத்து, பால் பொருள்கள் மற்றும் காபி, டீ போன்றவற்றை குறைத்தாலே சிலருக்கு இந்த வலி சரியாகலாம்!

மனித உடலின் ஜீன் றி53 ல் இருக்கும் தவறுகளால்கூட கேன்சர் வர வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. அதோடு புகைப்பிடிக்கும் பழக்கம், வைரஸ் இவைகள் மட்டுமல்லாமல் தவறான உணவுப் பழக்கங்கள் கூட கேன்சர் வர அதிக அளவு வாய்ப்பாகின்றன.

மார்பகத்தில் அறுவை சிகிச்சை என்றால் மார்பகம் முழுவதையும் நீக்குவது என்று அர்த்தமில்லை. இப்போதெல்லாம் லேசர் ட்ரீட்மெண்ட்டும், கீமோதெரபி சிகிச்சையும் மிகவும் சர்வ சாதாரணமாகி விட்டன. அப்படியே மார்பகம் முழுமையும் நீக்கப் பட்டாலும் கூட உங்கள் நார்மல் வாழ்க்கை எந்த விதத்திலும் பாதிக்கப்படப் போவதில்லை. பொதுவாக கைகளின் அடிபாகத்தில்தான் அறுவை சிகிச்சைகள் நடக்கும். ஏனெனில் அங்குதான் கேன்சர் கட்டிகள் சுலபமாக பரவிவிடக் கூடிய வாய்ப்பு அதிகம்.

பெரிய மார்பகங்கள் இருப்பதுதான் மிகவும் பெருமை என்று உலகம் முழுவதிலும் பல பெண்கள் ஆசைப்படுகிறார்கள். இதனால், இதற்காக செயற்கை மார்பகம் பொருத்திக் கொள்வது அதிகமாகி வருகிறது. ஆனால் இப்படி செயற்கை முறையில் பெரிதாக்கப்படும் மார்பகங்களால் அழகு கூடினாலும், தொல்லைகள் ஏற்படவும் வாய்ப்பு அதிகம் உண்டு.

கான்சர் போலவே பயமுறுத்தக் கூடிய ஒரு விஷயம், ‘‘காஸ்டோகான்டிரிட்டிஸ்’’. மார்பகத்தில் கட்டிபோல தென்பட்டு வலி அதிகமாக இருக்கும். இதற்கு லோக்கல் அனஸ்தீசியா கொடுத்து, ஸ்டீராய்ட் ஊசி போட்டாலே வலி சரியாகிவிடும்.

Quelle - kumutham sinekithi-15.6.2006

Sonntag, April 30, 2006

சினைமுட்டைப்பை(ovary) மாற்று சிகிச்சை

ஒரு சகாப்தம் இந்தியாவில்

- Srishiv -இந்தக் கட்டுரையில் சினைமுட்டைப்பை (ovary)மாற்று சிகிச்சை பற்றி பார்ப்போம்,
குறிப்பாக மூன்றாம் உலகநாடுகளாகக்கருதப்படும் இந்தியா, சீனா, சப்பான் போன்ற நாடுகளில் இந்த விஞ்ஞான முன்னேற்றம் மிக மெதுவாகவே இருக்கின்றது.சீனாவில் சென்ற 2002ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் தேதியில் இந்த மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தேறியதைத்தொடர்ந்து, அடுத்த மாதமே நம் இந்தியாவின் தொழில் நகரங்களுள் சிறந்த நகரமான மும்பையில் நடந்தேறியது. மருத்துவர். திரு. பிரவீன் ம்ஹாத்ரே என்பவரின் சீரிய முயற்சியால், டி.எஸ்.கோத்தாரி மருத்துவமணை , மும்பையில் சினைமுட்டைப்பை மாற்று சிகிச்சை நல்லமுறையில் நடந்தேறியது. இந்த சினைமுட்டைப்பையினை டர்னரின் நோய் (Turner's Syndrome)(இது பெண்களிடம் உள்ள ஒரு குரோமோசோம் குறைபாடு, ஒரே ஒரு x குரோமோசோம் மட்டுமே இருத்தல், இதன் விளைவுகள், குள்ளமாகப்பிறத்தல், இதயம் சம்மந்தப்பட்ட நோய்கள் மற்றும் குறைபாடுள்ள அல்லது அளவு குறைந்த வளர்ச்சியுடைய பாலுறுப்புக்களுடன் பிறக்கும் குழந்தை)(இந்த நோய் 2000 குழந்தைகளுள் 1 குழந்தைக்கு வரும் வாய்ப்புள்ளது)தாக்கியிருந்த ஒரு 17 வயது பெண்ணிற்கு மாற்று சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது. இந்த டர்னரின் நோய் தாக்கிய குழந்தைகள் தங்கள் ஆயுளுக்கும் ஹார்மோன் தெரபி என்று கூறப்படும் ஒருவகை மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ளவேண்டியிருக்கும் , இந்த சிகிச்சை புற்றுநோயினை தோற்றுவிக்கவும் அதிக வாய்ப்புகள் உண்டு. இந்த சினைமுட்டைப்பையினை தானமாகக்கொடுத்தவர் அந்த பெண்ணின் 26 வயது உறவுப்பெண் ஒருவர், அவர் இரண்டு குழந்தைக்குத்தாயானவரும் கூட.


அரசாங்க விதிமுறைகளின் படியும், சட்டத்தின் படியும், இந்த மாற்று சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், யார்வேண்டுமானாலும் இந்த சிகிச்சையினை இப்பொழுது செய்துகொள்ளலாம், இதன் மூலம், மாதவிடாய் சுழற்சியின் பிரச்சனைகள், மாதவிடாயே இல்லாதவர்களுக்கும் ஏற்படுத்துதல், கருமுட்டை உற்பத்தி மற்றும் அதன்மூலம் கரு உற்பத்தி, போன்ற பல பிரச்சனைகளைத்தீர்க்கமுடியும். மேலும், சட்டப்படி நம் மூன்றாம் உலக நாடுகளில் உயிரோடு இருக்கும் ஒருவரின் இருதயம் மற்றும் ஈரல் போன்ற உறுப்புகளை வேறொருவருக்கு மாற்றம் செய்யமுடியாது, முதல் உலகநாடுகளான அமெரிக்கா போன்ற நாடுகளில் வேண்டுமானால் பகுதி ஈரல் மாற்று சிகிச்சை என்பது இப்போது சாத்தியத்தில் இருக்கும் ஒன்று. ஆனால், இந்த சினைமுட்டைப்பை மாற்று என்பதில் எந்த ஒரு சட்டச்சிக்கலும் இல்லை, மேலும், ஆரோக்கியமாக 35 வயதிற்குள்ளிருக்கும், ஒன்றிரண்டு குழந்தை பெற்ற எந்த பெண்ணும் தன் இரண்டு சினைமுட்டைப்பைகளுள் ஒன்றினை தாராளமாக தானமாக அளிக்கலாம். அது உறவினராகவோ அல்லது வேற்று ஆட்களாகவோ கூட இருக்கலாம் , இந்த 35 வயது அதிகபட்சமாக ஏன் நிர்ணயிக்கப்படுகின்றது எனில் , 35 வயதிற்கு மேல் பெண்களுக்கு அறுவை சிகிச்சையிலிருந்து ரணம் ஆறி குணம் பெற சற்று தாமதமாகலாம் என்பதாலே இந்த அதிகபட்ச வயது வரம்பு, தானம் பெறுவோருக்கு வயது வரம்பு இல்லை என்றே கூறியிருக்கின்றார் மருத்துவர்.


இன்றைய தேதியில் , விஞ்ஞானம் எவ்வளவுதான் வளர்ந்திருந்தாலும், இன்றும் நம் நாட்டுப்புறங்களில் மாதவிடாய் வராத பெண்களினை இரண்டாம் தரமாக நடத்தும் கொடுமையினை இந்த மாற்று சிகிச்சை மாற்றிக்காட்டும் என்பதில் எந்த ஐயமும் இல்லை, மேலும் இதன்மூலம், மெனோபாஸ் என்று கூறப்படும் மாதவிடாய் நிற்றல் (வயது முதுமை அடையும்கால்) போன்ற நிகழ்வுகளிலிருந்தும் பெண்கள் விடுபெறலாம், இந்த மாற்று சிகிச்சை மூலம் எந்த வயதிலும் ஒரு பெண் குழந்தை பெறலாம், இது இந்த நூற்றாண்டின் ஒரு சிறந்த கண்டுபிடிப்பு என்று கூறினால் அது மிகையாகாது. மாற்று அறுவை சிகிச்சை செயத மருத்துவர் சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்னர் தன் முதுகலை மருத்துவ பட்டப்படிப்பில் சிறப்புப்படிப்பாக இந்த டர்னரின் குறைபாட்டினை தன் ஆய்வுக்கட்டுரைக்காக எடுத்துக்கொண்டு தன் இறுதி முடிவாக சினைமுட்டைப்பை மாற்று சிகிச்சையினை சிபாரிசு செய்தபோது அவரின் ஆசிரியர்கள் அனைவரும் சிரித்தது நம் மருத்துவரின் அறிவியல் ஆர்வத்தினை தூண்டிவிட அனைத்து சிறப்புக்கல்விகளையும் இதற்காகப்பயின்று இறுதியில் இன்று இந்தியாவிலும் ஒரு மாற்று சிகிச்சைக்கு அடிகோலமுடியும் என்று நிரூபித்து சரித்திரத்தில் நீங்காப்புகழ் பெற்றுவிட்டார் மருத்துவர் பிரவீன் ம்ஹாத்ரே. இவரினைத்தொடர்புகொள்ள :
pravinmhatre@hotmail.com
pravinmhatre@indiatimes.com

இந்த ஆராய்ச்சி பற்றி மேலும் அறிய ஆங்கிலச்சுட்டி :
http://www.scienceinafrica.co.za/2003/february/ovary.htm

மேலும் சூன் மாதம் 2005ஆம் ஆண்டில் ஆரோக்கியமான ஒரு பெண் குழந்தையினை தன் இரட்டை சகோதரியிடமிருந்து பெற்ற சினைமுட்டைப்பையின் மூலம் பெற்றெடுத்த ஒரு தாயின் விவரங்களையும் கீழ்காணும் இணைப்பில் காணலாம்.
http://www.nature.com/news/2005/050606/pf/050606-7_pf.html

மேலும் உலகின் முதல் சினைமுட்டைப்பை மாற்று சிகிச்சை பற்றி அறிய கீழ் காணும் சுட்டியினை சுட்டவும்,
http://www.exn.ca/Stories/1999/09/23/55.asp
பின் குறிப்பு : சென்ற கட்டுரை, சினைப்பையைப்பற்றியது, இது சினை முட்டைப்பையைப்பற்றியது, இரண்டையும் போட்டு குழப்பிக்கொள்ளவேண்டாம், அதுவேறு , இதுவேறு, சினைப்பை என்பதை ஆங்கிலத்தில் யூட்ரஸ் என்பர், சினைமுட்டைப்பையை ஓவரி என்றும் அழைப்பர்.

ஸ்ரீஷிவ்...இந்திய தொழில்நுட்பக்கழகம் - குவஹாத்தி

quelle - பதிவுகள் srishiv

Donnerstag, April 13, 2006

செயற்கை கருப்பை - ஒரு வரம்

- ஸ்ரீஷிவ் -

தாய்மை என்பது எவ்வளவு புனிதமானது என்பது, அதனை அனுபவித்த , அனுபவிக்க காத்துக்கிடக்கும் பெண்களுக்கே அதிகம் புரியும், மருத்துவ ரீதியாக இதற்கு ஒன்றுமே செய்யமுடியாது, இது இறைவன் அளித்த சாபம், முன் ஜென்ம வினை என்று நினைத்து தன்னை நொந்துகொண்டிருக்கும் தாய்மார்களுக்கு நான் கூறிக்கொள்ள விழைவது, அந்த காலங்கள் கடந்துவிட்டன தாய்மாரே, இன்று உலகம் தன் அடுத்த பரிமாணத்தினை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது, அதனைச்சுருங்கச்சொன்னால், முடியாது என்று நினைத்திருந்த எத்தனையோ விசயங்களுக்கு இன்று விடை கண்டிருக்கின்றான் மனிதன். தன் விஞ்ஞான மூளையின் மூலமாக, ஒரு காலத்தில் தீர்க்கவே முடியாத நோயாக பெரியம்மையை கூறுவார்கள், இன்று சுத்தமாக அந்த நோய் அழிக்கப்பட்டுவிட்டது, அதுபோல், இனி வரும் நாட்களில் குழந்தை இல்லை என்பதே இல்லை என்று ஆகும் காலம் நாம் வாழும் இந்த ஜென்மத்திலேயே கண்டு செல்வோம் என்றே தோன்றுகின்றது.

இப்பொழுது நாம் தலைப்பிற்கு செல்வோம், குழந்தை பெறுவதில் தாய்மார்கள் பெறும் பிரச்சனைகளை இரண்டு பெரும்பிரிவுகளாகப்பிரிக்கலாம், ஒன்று, தன் உடலில் கருப்பை இருந்து, தன் மாதாந்திர சுழற்சிகள் சரியாகவும் இருந்தபோதும், கணவனின் உயிரணுக்களின் எண்ணிக்கையோ அல்லது மனைவியின் உயிரணுவின் எண்ணிக்கையோ குறைவாக இருப்பின் இந்த பிரச்சனை வரலாம் , அல்லது, இரண்டாவதாக, கருப்பையே பிறவிமுதல் இல்லாமல், கருப்பை இருக்கவேண்டிய இடத்தில் ஒரு வெற்று சதைப்பட்டை மட்டுமே இருந்து , மாதாந்திர சுழற்சிகள் ஏதும் பெறாமல், இவை அனைத்தையும் தாண்டி கருமுட்டை உற்பத்தி செய்யும் உற்பத்திப்பைகளுள் ஒன்றோ , அல்லது இரண்டுமோ சேதமடைந்த நிலையில் குழந்தை பிறக்க பிரச்சனைகள் என்றோ, இருக்க வாய்ப்புகள் உண்டு.


இன்றைய விஞ்ஞானம் இதற்கான ஒரு அற்புதமான வழிமுறையை வரமாக நமக்கு கண்டளித்திருக்கின்றது. முதல் பிரச்சனைக்கு வழி, உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, செயற்கையாக மருந்துகளின் மூலம். மற்றும் ஒரு சாக்குப்பை போல உயிரணு உற்பத்தி தலத்தில் அவற்றை பிடித்து வைத்திருக்கும் சிஸ்ட்டுகளை (cysts) அங்கிருந்து நீக்குவதன் மூலம், கருவினை நன்கு வளரவிட்டு உறவின்போது விந்துடன் இந்த அண்டத்தினை இணையவிடுவதுடன் குழந்தை உருவாக வழி செய்யலாம். அல்லது கருவை செலுத்தி உறைத்தல் முறையில் (invitro fertilization) பலகீனமாக இருக்கும் தாயின் கருப்பையினுள் ஆணின் உயிரணுவை பலவந்தமாக ஒரு ஊசியின் மூலம் புகுத்தி இரண்டையும் இணையவிட்டு கருவை உருவாக்கி குழந்தை உருவாக்கலாம். அல்லது , இருவரின் உயிரணுக்களையும் வெளியே எடுத்து, உறைதல் மூலம் ஒரு சோதனைக்குழாயில் இணைத்து அதனை தாயின் கருப்பையினுள் மீண்டும் வைத்து வளரவைக்கலாம். இப்படி பல வழிமுறைகள் உள்ளன.


இப்போது இரண்டாம் வகையினரைப்பார்ப்போம், பிறப்பிலேயே கருப்பை இல்லாது இருத்தல், மாதாந்திர சுழற்சி இல்லாமலிருத்தல், கருமுட்டை உற்பத்தி செய்யும் உற்பத்திப்பைகளூள் ஒன்றோ , அல்லது இரண்டுமோ பலஹீனமாகவோ அல்லது சேதமடைந்த நிலையிலோ இருப்பினும், குழந்தை உருவாக வாய்ப்புகள் உண்டு, முதலில் கருமுட்டை உற்பத்தி செய்யும் உற்பத்திப்பைகள் ஆங்கிலத்தில் ஓவரீஸ் (ovaries) என்று சொல்வர், பலவீனமாக இருப்பின் அவற்றினை தூண்டிவிட பல சிகிச்சைமுறைகள் வந்துவிட்டன, ஒரு தேர்ந்த மகப்பேறு மருத்துவரை அணுகினால் ஓவரி இண்டியூசிங் எனும் கரு உற்பத்தியை தூண்டுதல் முறைமூலம் உற்பத்திப்பையினுளளிருககும் கருமுட்டையை தூண்டிவிட்டு இனப்பெருக்கத்திற்கு அதனை தயார் செய்யலாம். அடுத்த வகையான கருப்பையே இல்லாமல் இருத்தல் என்ற வகைக்கு இப்போது அற்புதமான ஒரு மாற்று கண்டறிந்திருக்கின்றனர் விஞ்ஞானிகள், கருப்பை மாற்று சிகிச்சை, கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கலாம் ஆனால் இது உண்மையாகிக்கொண்டிருக்கின்றது இன்று, நீங்கள் இந்த கட்டுரையை படிக்கும் சமயம் அது முழுமையடைந்திருக்கக்கூடும், நான் சமீபத்தில் கண்ட ஒரு ஆய்வறிக்கை , கிங் ஃபஹத் மருத்துவமணை, ஜெடா, சவூதி அரேபியாவில் இருக்கும் மருத்துவர்குழுவினர் வெற்றிகரமாக ஒரு கருப்பை மாற்று சிகிச்சையினை 2000,ஏப்ரல் மாதத்தில் ஒரு 26 வயது பெண்மணிக்கு 46 வயது பெண்மணி ஒருவரின் கருப்பையை மாற்றி வைத்து வெற்றிகரமாக சிகிச்சையினை முடித்திருக்கின்றனர், ஒரு 99 நாட்களுக்கு பின்னர் அவரின் ரத்தக்குழாயில் எற்பட்ட ஒரு சிறு அடைப்பினால் அதனை நீக்கவேண்டி வந்தாலும், அறுவை சிகிச்சை வெற்றி , மேலும் அது இயல்பாக இயங்கி வந்திருக்கின்றது, அவர்கள் தங்கள் ஆய்வில் கூறியது,
""Our clinical results with the first human uterine transplantation confirm the surgical technical feasibility and safety of this procedure," say the team of surgeons at the King Fahad Hospital and Research Center in Jeddah. They think refinements to the surgical procedure should overcome the blood supply problems."

இந்த ஆய்வின் இறுதியில் சொல்லியது என்னவென்றால் இன்னும் அதிகபட்சம் மூன்று ஆண்டுகளில் (2000 ஆண்டில் இருந்து) இந்த ஆய்வு முழுமை பெற்றுவிடும் என்று, எனவே இந்த கட்டுரையை தாங்கள் படிக்கும் நேரம் அது முழுமை அடைந்திருக்கும் வாய்ப்புகள் அதிகம்.இது தாங்களே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பவருக்கே, சிறிது பரந்த மனப்பான்மை இருப்பவர்கள், வாடகைத்தாய் என்னும் முறையை கையாண்டு தங்கள் கருவினை ஒரு வாடகைத்தாயின் வயிற்றில் வைத்து வளர்த்து பெற்றெடுத்துக்கொள்ளலாம், அதனை சட்டப்படி உங்கள் குழந்தையாக்க தத்தெடுத்தல் முறைப்படியோ அல்லது தங்களே நேராக எடுத்துக்கொள்வதோ தங்கள் வசதி. பலர் கருப்பை இல்லை என்றால் முட்டை எப்படி உருவாகும் என்ற சந்தேகத்தினை கேட்கலாம், அதற்கு என் பதில், கருப்பை இல்லை என்றாலும் முட்டை உருவாகும், ஏனெனில் முட்டை உருவாவது சினைப்பைதானேயன்றி கருப்பை அல்ல.மேலும், செயற்கை கருப்பை என்று ஒரு ஆய்வும் இணையாக நடந்து வருகின்றது, அதில் என்ன சொல்கின்றனர் எனில், செயற்கை இதயம், செயற்கை மூட்டு, செயற்கை கண் போல செயற்கை கருப்பையும் சாத்தியமான ஒன்று என்று விஞ்ஞானிகள் கூறி அவ்வாராய்ச்சியில் முக்கால் பகுதியை தாண்டிவிட்டனர், சென்றவருடத்தின் நேச்சர் (இயற்கை) இதழ் தன் பதிப்பில், ஒரு புதிய மெம்ப்ரேனை (சவ்வு) விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருப்பதாகவும் அது செயற்கை கருப்பை உற்பத்திக்கு தகுதியானது என்றும் வெளியிட்டிருந்தது, எனவே அந்த ஆராய்ச்சியும் இன்னேரம் முடிந்திருக்க வாய்ப்புண்டு, எனவே, தாய்மாரே கவலை வேண்டாம் இனி குழந்தை இல்லை என்று, தேடுங்கள் கிடைக்கும், உங்கள் குழந்தை உங்களீன் தேடலுக்காக உங்களுக்குள் காத்திருக்கின்றது, நீங்கள் தயாரா? உடன் செயல் படுங்கள், இன்னும் பல செய்திகளுடன் விரைவில் வருவேன், இதுபற்றி தங்களுக்கு தெரிந்த கருத்துக்களையும் இந்த இழையில் பகிர்ந்துகொள்ளலாமே?


- ஸ்ரீஷிவ் -
Quelle - பதிவுகள்