Freitag, Juni 03, 2005

கருத்தரிப்பதில் சிக்கலா...?

மருத்துவர் ஜெயசிறீ கஜராஜ் அவர்கள் பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்வதில் இருக்கும் தடைகளை எப்படிச் சரிப்படுத்துவது எனச் சொல்கிறார்.

முன்னர் ஒரு தடவை பெண்களுக்குக் கருத்தரிப்பதில் ஏற்படக்கூடிய பிரச்னைகள் என்னென்ன என்பது பற்றிப் பார்த்தோம்.... தற்போது அந்தப் பிரச்னைகளுக்கான தீர்வுகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.. அவற்றில் முதலாவதாக சினைமுட்டை வெளிவருவதில் (Ovulation) ஏற்படக்கூடிய பிரச்னை பற்றிப் பார்ப்போம்...

பெண்களுக்கு மாதாமாதம் சினைமுட்டை ஒரு சுழற்சி முறையில் வெளியேறும். இதைத்தான் நாம் பீரியட்ஸ் என்கிறோம். ஆனால் சிலருக்கு இது சரியானபடி ஏற்படாது. இதற்கு முக்கியக் காரணம் நம்முடைய ஹார்மோன்களின் செயல்பாடுதான்.

இதை மருந்துகள் மூலம் சரி செய்துவிடலாம். இந்த மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அது சினைமுட்டையை சரியான வளர்ச்சியடையச் செய்யும். இதற்குப் பொதுவாக மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரையின் பெயர் Clomiphene Citrate. ஆனால் இந்த மாத்திரையைச் சாப்பிட்டு வருவதால் மட்டும் சினைமுட்டை நன்கு வளர்ச்சியடைகிறது என்று நாம் உறுதியாகச் சொல்ல முடியாது. அதை உறுதிப் படுத்த Follicular Scan என்கிற ஒரு பரிசோதனையைத் தொடர்ந்து செய்து, அதன் மூலம் முட்டையின் வளர்ச்சியைக் கண்காணிப்போம்.

இந்த மாத்திரையைத் தவிர்த்து ஊசி மூலமும் இந்தப் பிரச்னையை நாம் கையாளலாம். இதற்கென்று Gonadotrophins என்கிற இன்ஜெக்சன் இருக்கிறது. தொடர்ந்து மாத்திரைகளைச் சாப்பிட்டு வந்தும் சினை முட்டை வளர்ச்சியடைவதில் பிரச்னை இருந்தால் இந்த இன்ஜெக்சனை நாங்கள் கொடுப்போம். மாத்திரைகளைச் சாப்பிட்டு வரும்போதே சில மருத்துவர்கள் இந்த ஊசியும் போட்டு விடுவதுண்டு. இது அவரவர் ட்ரீட்மெண்டுக்கு ஏற்ப மாறுபடும். இதில் தவறொன்றும் இல்லை.

இப்படி தொடர்ந்து ட்ரீட்மெண்ட் செய்து வந்தும் பலன் இல்லையென்றால் Follicle Stimulating Harmone என்கிற ஹார்மோனை அதிகரிக்க மாத்திரைகளை நாங்கள் கொடுப்பதுண்டு. இந்த FSH ஹார்மோன் மற்றும் Gonodotrophins ஆகியவற்றை மனித யூரினில் இருந்துதான் தயார் செய்கிறார்கள். இயற்கையான விஷயத்திலிருந்து, அதிக சிரமத்துடன் இதைத் தயாரிப்பதால் இந்த மருந்துகள் சற்றே காஸ்ட்லிதான். இதற்கு மாற்றாக செயற்கை மருந்துகளையும் தற்போது கண்டுபிடித்திருக்கிறார்கள்.

மார்புப் புற்றுநோய் கண்டவர்களுக்குப் பொதுவாக ட்ரீட்மெண்ட் கொடுக்கும்போது Letrozole என்கிற ஒரு மருந்தை நாங்கள் கொடுப்பதுண்டு. இப்படி Letrozole கொடுக்கப்பட்ட சில பேஷண்டுகளைத் தற்செயலாகக் கண்காணித்தபோது ஒரு விஷயத்தைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். இந்த மருந்து சினைப்பையின் மீது செயல்பட்டு, சினைமுட்டையின் வளர்ச்சியைத் தூண்டுவது அப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் பிறகு இந்த Letrozole மருந்தையும் இந்த ட்ரீட்மெண்டுக்குப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். ஆனால் சில பத்திரிகைகளில் இந்த மருந்து பற்றி வேறுவிதமான செய்திகள் வெளியிட்டார்கள். அதாவது, இந்த மருந்தைப் பயன்படுத்தி வரும் பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தைக்கு சில குறைபாடுகள் ஏற்படலாம் என்று சொன்னது அந்தச் செய்தி.

இதைக் கேள்விபட்டு நிறைய பெண்கள் அதன்பிறகு Letrozole மருந்தைப் பயன்படுத்தவே பயந்தார்கள். ஆனால் இந்த பயம் அவசியமில்லாதது. இதற்கும், பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய குறைபாடுகளுக்கும் தொடர்பில்லை. மேலும் இந்த மருந்தை அவசியப்பட்டால் மட்டுமே, அதுவும் ஒரு சிலருக்கு மட்டுமே மருத்துவர்கள் கொடுப்பார்கள். அதனால் இதில் பயப்பட ஒன்றுமில்லை.

சினைமுட்டை சரியானபடி வளர்ச்சியடையத்தான் மேற்கூறிய சில மருந்துகளை நாங்கள் பரிந்துரைப்போம். இதில் நீங்கள் எந்த மருந்தைப் பயன்படுத்தியிருந்தாலும், அதைப் பயன்படுத்தும்போதே கட்டாயம் Follicle Scan_ஐ செய்து முட்டை சரியானபடி வளர்ச்சியடைகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும். வளர்ச்சி சரியாக இருந்தால், பிறகு அது வெளியேற ஒரு ஊசி போடுவோம்.

பொதுவாக இந்த ஊசி போட்ட முப்பத்தாறு மணி நேரத்தில், சினைமுட்டை கட்டாயம் சினைப்பையிலிருந்து வெளியேறும். இந்தச் சமயத்தில் தம்பதியரை தயாராக இருக்கச் சொல்லி, கட்டாயம் உடலுறவு வைத்துக் கொள்ள அறிவுறுத்துவோம். இதிலும் ஏதாவது குளறுபடி ஏற்பட்டால் IUI என்கிற ஒரு முறையைக் கையாள்வோம்.

Intra Uterine Insemenation என்று அழைக்கப்படும் இந்த முறையில், சினைமுட்டை வெளியேறும் சமயத்தில் கணவரிடமிருந்து பெறப்பட்டு Labஇல் பதப்படுத்தப்பட்ட விந்தணுக்களை, ஒரு டியூப் மூலமாக மனைவியின் கர்ப்பப்பைக்குள் செலுத்தி கருத்தரிக்க உதவுவோம். இந்த முறையில் கருத்தரிப்பதற்கு நிறைய வாய்ப்புள்ளது.

ஜி.கிருஷ்ணகுமாரி
நன்றி - குமுதம் சினேகிதி

Samstag, April 23, 2005

ஆஸ்துமாவும் பெண்களும்

பரிமளாவுக்கு வயது முப்பது. தனியார் கம்பெனியில் வேலை செய்யும் கணவன், பள்ளி செல்லும் இரு பையன்கள் என்று சின்னக் குடும்பம்!

நடுத்தரக் குடும்பம் என்பதால், வீட்டு வேலைகளை அவளேதான் செய்வாள். அன்றும் வழக்கம்போல அனைத்து வேலைகளையும் அவளேதான் செய்தாள். அன்று... துணி துவைப்பது, வீட்டை ஒட்டடை அடிப்பது என்று நிறைய வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்தாள். வேலையை முடித்துவிட்டு மாலை ரெஸ்ட் எடுக்கலாம் என்று அவள் அமர்ந்த போதுதான் பிரச்னை ஆரம்பித்தது.

பரிமளாவுக்கு திடீரென மூச்சுத் திணறுவது போல இருந்தது. இயல்பாக மூச்சு விட முடியவில்லை. ஒரு மூக்கு முழுவதும் அடைத்து விட்டது போன்ற உணர்வு. பக்கத்து வீட்டுக்காரர்கள் தந்தார்கள் என்று ‘நேஸல் ட்ராப்ஸ்’ விட்டுப் பார்த்தும் குணம் கிடைக்கவில்லை. அவ்வப்போது மயக்கம் வருவது போல வேறு இருந்தது. டாக்டரிடம் காட்டினாள். ‘‘உங்களுக்கு தூசு அலர்ஜி இருக்கிறது. அதனால் இனிமேல் முடிந்தவரை தூசு பக்கமே போகாதீர்கள்’’ என்றார் டாக்டர்.

பரிமளாவுக்கு ஆச்சர்யமாக இருந்தது. இதுவரை அவளுக்கு அலர்ஜி என்று எதுவும் ஏற்பட்டதில்லை. ‘‘கவலைப் படாதீர்கள். தூசுப் பக்கம் போக நேர்ந்தால், மூக்கை மூடுவது போல் மாஸ்க் போட்டுக் கொள்ளுங்கள்!’ என்று ஆலோசனையும் தந்தார் டாக்டர்.

அலர்ஜிதான் ஆஸ்துமா நோய்க்கு அடிப்படை என்கிறார்கள் டாக்டர்கள். அதனால் அலர்ஜி ஏற்படாமல் தவிர்த்துவிட்டால் ஆஸ்துமா வராது. நோய்க் காரணியை இனம் கண்டுபிடித்து விட்டால், நோயைத் தடுத்து விடலாம் அல்லவா?

சரி... இந்த அலர்ஜி ஏற்படக் காரணம் என்ன? குறிப்பாக எந்த வயதினருக்கு இதனால் அதிகம் பாதிப்பு உண்டாகும்? அதிலும் பெண்கள், இந்த அலர்ஜியினால் எந்தளவுக்குப் பாதிக்கப்படுகிறார்கள்..? என்ற கேள்விகளுடன் அலர்ஜி நிபுணர்களை அணுகினோம்..

‘‘அலர்ஜி ஏற்பட நிறையக் காரணங்கள். ஒரேயரு காரணத்தை மட்டும் சொல்லிவிட முடியாது. இருப்பினும் முடிந்தவரை அலர்ஜி ஏற்படாமல் தவிர்த்து விடுவது நல்லது!’’ என்கிறார் பிரபல ஆஸ்துமா நோய் நிபுணர் டாக்டர் ஆர். நரசிம்மன்.

‘‘நல்லவேளையாக ஆண்களோடு ஒப்பிட்டால் பெண்களுக்கு ஆஸ்துமா வருவது குறைவுதான். இரண்டு ஆண்களுக்கு ஒரு பெண் என்ற விகிதத்தில்தான் ஆஸ்துமா வருகிறதாம்.’’

‘‘ஆஸ்துமா எந்த வயதினருக்கும் வரலாம். முன்பெல்லாம் பெண்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார்கள். வெயிலும், தூசுயும் அதிகமில்லாத சூழல்... ஆனால் இப்போது அப்படி இல்லையே!... பெண்கள், வெளியே எல்லா வேலைகளுக்கும் போகிறார்கள். ஆண்களின் வேலைகளைப் பங்கு போட்டுக் கொள்கிறார்கள்.

அதனால் ‘எக்ஸ்போஷர்’ அதிகமாகிறது. தூசும் மாசும் அதிகமான சூழல், டென்ஷன், வெளியுலக வேலை அழுத்தம், உடல் ரீதியிலான பல அசௌகர்யங்கள் என்று பல விஷயங்கள் இதற்குக் காரணமாக அமைகின்றன.

சீயக்காயும் அலர்ஜியாகலாம்!

பெண்களுக்குத் தலை முடி அதிகம் என்பதால், அழுக்கும் தூசும் போகத் தலைக்குச் சீயக்காய் பவுடர் பயன்படுத்தி தேய்த்துக் குளிப்பார்கள். அந்த சீயக்காய் பல பெண்களுக்கு அலர்ஜிக்கு வழிவகுப்பதைப் பார்த்திருக்கிறேன். அதிலும் எளிதில் அலர்ஜிக்கு ஆளாகிறவர்களாக இருந்தால் வேறு பிரச்னையே வேண்டாம்!...

தூசும் முக்கிய காரணம்

சிலருக்கு சாதாரணமாக தினமும் வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்யும் போது கூட அந்த தூசுவினால் அலர்ஜி ஏற்படும். தூசு மூக்கினுள் சென்றவுடன் தும்மல் வரும். சிலருக்கு ஒரு தும்மலோடு நின்று விடும். சிலர் தொடர்ந்து தும்மல் போடுவார்கள். மூக்கிலிருந்து தண்ணீர் வழிய ஆரம்பிக்கும். அந்த அறிகுறிகளைத் தொடர்ந்து இருமல், வீஸிங் போன்ற தொல்லைகள் இருந்தால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

சமையல் நெடியும் கூட!

அதேபோல், சமையல் செய்யும்போது வாணலியிலிருந்து கிளம்பும் நெடி கூட சிலருக்கு அலர்ஜி ஏற்படக் காரணமாகிறது!... நீண்ட நேரம் அடுப்படியில் நிற்பது, தாளிக்கும் போது உடனே மேலெழும்பும் வாசனை கலந்த புகை இவையும் மூக்கில் ஒருவித எரிச்சலை உண்டாக்கும். இதுவும் கூட அலர்ஜிக்கான காரணம்தான்.

மண்ணெண்ணெய் அடுப்பு உபயோகிப்பவர்களுக்கும் புகை மூலம் பிசச்னை வரும். வாணலியிலிருந்து கிளம்பும் நெடியை விட ஆபத்தானது இந்தப் புகை மண்டலம். அப்படியே, நுரையீரலில் போய்த் தேங்கிவிடும். இது கூட ஆஸ்துமா ஏற்படக் காரணம்தான்.

ஒரு விஷயத் தைப் புரிந்து கொள்ளுங்கள்! ஆஸ்துமாவை குணமாக்க முடியாது!.. ஆனால் அந்த நோய் நம்மை பாதிக்காதபடி கட்டுப்படுத்த முடியும். அதனால் முடிந்தவரை இந்த நோய் வருமுன்பே காப்பதுதான் நல்லது.’’ என்கிறார் டாக்டர் நரசிம்மன்.

பெண்களுக்கு ஒரு வித்தியாசமான காரணம்....

‘‘பெண்களுக்கு ஆஸ்துமா ஏற்பட அவர்களின் உடல்சார்ந்த காரணமும் ஒன்று. அதில் முக்கியமானது Atopy எனப்படும் ஒவ்வாமை இயல்பு!’’ என்கிறார் அலர்ஜி_ஆஸ்துமா நிபுணர் டாக்டர் கே.ஏ. மோகனதாஸ்.

‘‘இந்த ஒவ்வாமை இயல்புடைய பெண்களுக்கு மகப்பேறு காலத்தில் ஆஸ்துமா ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. இவர்களில்கூட மூன்றில் ஒருÊ சதவீத பெண்களுக்குத்தான் குழந்தை பிறந்த பின்பு ஆஸ்துமாவின் கடுமை குறையலாம். ஆனால் கர்ப்பம் தரிக்கும்போது முதல் முறையாக உண்டாகும் ஆஸ்துமா மறுமுறையும் வரத்தான் வாய்ப்புகள் அதிகம்!

பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் நவீன கஷ்டங்களான பரபரப்பு, வேலைப்பளு போன்றவற்றாலும், மன அழுத்தம், உணர்ச்சி வசப்படுதல் போன்ற காரணங்களாலும் பல பெண்கள் மறுபடியும் இந்த அலர்ஜி ஆஸ்துமா தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்! ’’ என்கிறார் டாக்டர் மோகனதாஸ்.

‘‘ஆஸ்துமா நோய்த் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் அதை வெளியில் சொல்வதில்லை. இது தவறு. சிலர் தங்களுக்கு வந்திருப்பது ஆஸ்துமாவே அல்ல என்று ‘அண்டர் எஸ்டிமேட்’ பண்ணியிருப்பார்கள். இதுவும் தவறு. நோய்க்கான அறிகுறிகள் தெரிந்தால் தாமதிக்காமல், உடனே டாக்டரிடம் போய்விட வேண்டும்.

(உங்களுக்கு ஆஸ்துமா இருக்கிறதா என்று எப்படி தெரிந்து கொள்வது? விவரங்கள், பாக்ஸ் மேட்டரில்)

எப்படி டெஸ்ட் செய்து கொள்வது?

உங்களுக்கு ஆஸ்துமா இருக்கும் அறிகுறிகளை நீங்கள் உணரும் பட்சத்தில் அதை முறைப்படி டெஸ்ட் செய்துகொள்ள நவீன பரிசோதனைகள் நிறைய வந்துவிட்டன. ‘இன்ஜெக்ஷன் இம்யூனோதெரபி!’ என்ற டெஸ்ட் எந்த வயதினருக்கும் செய்யலாம்.

‘பல்மோனரி ஃபங்ஷன் டெஸ்ட்’ என்ற பரிசோதனையின் மூலமும் ஆஸ்துமாவைக் கண்டறியலாம்.

என்ன சிகிச்சை எடுத்துக் கொள்வது?

மருந்துகள் உபயோகிப்பதை விட கருவிகள் பயன்படுத்தி ‘ஆஸ்துமா’வை சுலபமாக கட்டுக்குள் கொண்டு வரலாம். முடிந்தவரை எந்தவிதமான இன்ஃபெக்ஷனும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அநாவசிய மனபயம், பரபரப்பு போன்றவை அலர்ஜிக்குக் காரணமாகிவிடும். அதனால் தவிர்க்கலாம்.

ஸ்டீராய்டு இன்ஹேலர்கள் நல்ல பயன் தருபவை. மாத்திரைகள், கேப்ஸ்Êசூல் என்று நேரடியாக உட்கொள்வதை விட, இந்த இன்ஹேலர்கள் நல்லது.

இன்ஹேலர்களில் பல வகை... ரோட்டோஹேலர், அக்யூஹேலர், டயோஹேலர், நெபுலைஸர் என்று இருக்கின்றன. இவற்றில் ரோட்டோஹேலரில் உலர்ந்த நிலையிலேயே மருந்தை (DRY POWDER) வைத்துப் பயன்படுத்த முடியும். மாத்திரைகள் உடனடியாக பலனைத் தராது என்பதால், இந்த இன்ஹேலர் முறையே சிறந்தது.

கவனியுங்கள்... அலர்ஜிக்கான பரிசோதனை என்பது ஆஸ்துமா தடுப்பு முறைகளில் முக்கியமானது! எந்த வகையான அலர்ஜி என்பதை வைத்தே நோயின் தீவிரத்தை அறியலாம்.

தக்காளி, எலுமிச்சை, வேர்க்கடலை, பச்சைப் பயிறு உள்ளிட்ட உணவு வகைகளால் கூட அலர்ஜி ஏற்படலாம். இதனால் ஆஸ்துமா ஏற்பட்டிருக்கிறதா என்பதை இந்தச் சோதனை மூலம் கண்டுபிடித்து விட முடியும்.

ஆஸ்துமாவை கட்டுக்குள் வைத்திருப்பது முக்கியம். அதற்கு தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதும் நல்ல பலன் தரும். கடுமையான பயிற்சிகள் அவசியமில்லை. யோகாவுடன் கூடிய பயிற்சி நல்லது.

முடிந்தவரை தூசிக் காரணிகளிடமிருந்து விலகியே இருங்கள்.

எங்கெங்கே தூசுகள் இருந்து பாதிப்பை ஏற்படுத்தலாம்?

டி.வி.யிலும், அதன் ஸ்டாண்டுகளிலும் அடிக்கடி தூசு பரவி நிற்கும். ஏ.சி. ஃபில்டர்களில் தூசுப் படலங்கள் படிந்திருக்கலாம். தலையணைகளில் கூட தூசுப் பூச்சிகள் (DUST MITES) இருக்கும். இவை கண்களுக்குத் தெரியாது. தூங்கும் போது மூக்கின் வழியே உள்ளே சென்று அலர்ஜியை ஏற்படுத்தும். அதனால் அவ்வப்போது தலையணை உறையை சுத்தம் செய்வது அவசியம்.!

முக்கியமாக...

எக்காரணம் கொண்டும் டாக்டரின் அட்வைஸ் இல்லாமல் நீங்களாகவே மருந்து எடுத்துக் கொள்ளாதீர்கள். காரணம்... மாத்திரையின் அளவும், வீரியமும் உங்களுக்குத் தெரியாது என்பதுதான்.

உங்கள் வீட்டிலுள்ளவர்கள் யாருக்கேனும் ஆஸ்துமா இருந்தால், முதலிலேயே நீங்களும் ‘செக்அப்’ செய்து, உங்களுக்கு அலர்ஜி ஆஸ்துமா இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

_ எஸ். அன்வர்
nantri-Kumutham-sinehithi

Donnerstag, März 03, 2005

கர்ப்பப்பை பலமாக.... சில உணவுகள்

- ப்ரியா பாலு -

அக்காலத்தில் பெண் குழந்தைகள் வயதுக்கு வந்துவிட்டால் கர்ப்பப்பை பலம் பெறுவதற்காக உழுத்தங்களி கொடுப்பது வழக்கமாக இருந்தது. அது மட்டுமின்றி வயது வந்த உடனேயே முட்டையையும், நல்லெண்ணெயையும் தினமும் வெறும் வயிற்றில் குடிக்கச் செய்வர். இந்தக் களியில் வெல்லம், உளுந்து, நல்லெண்ணெய் சேருவதால் இரும்புச்சத்து, புரதச்சத்து, மாவுச்சத்து தாதுக்கள் என்று எல்லாம் கிடைத்து கர்ப்பப் பை பலமாக அமையும்.

இதை எப்படி செய்வது? (உழுத்தங்களி)

அரை கப் உழுந்தை வாணலியில் வறுத்து அதோடு அரை கப் அரிசி சேர்த்து மாவாகத் திரித்து சலித்துக்கொள்ளவும். 2 கப் உடைத்த கருப்பட்டி வெல்லத்தோடு தண்ணீர் 2 கப் விட்டு சூடாக்கவும், வெல்லம் கரைந்ததும் வடிகட்டி அழுக்கு, மண்நீக்கி, வாணலியைக் கழுவி மறுபடியும் அதிலேயே வெல்லக் கரைசலை ஊற்றவும். அதோடு 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்துச் சூடாக்கவும். கரைசல் கொதிக்கும்போது மாவை மத்தியில் கொட்டிக் கிளறி, ஒரு கரண்டியை அதில் குத்தி மூடி வைக்கவும். குறைந்த தணலில் 7_லிருந்து 10_நிமிடங்கள் வரை வேக விடவும்.

பிறகு அடுப்பிலிருந்து இறக்கி நன்றாகக் கிளறிவிடவும் சிறிது ஆறியதும் 2 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு கலந்து உருண்டைகளாக உருட்டி சாப்பிடக் கொடுக்கவும்.

சூப் குடியுங்கள்

கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு கப் சூப் பகலிலும், இரவிலும் குடித்தால் மலச்சிக்கல் இல்லாமல், அஜீரணம் இல்லாமல் உண்ட உணவு நன்கு செரித்து ஆரோக்கியமாக இருக்க இயலும்.

பொதுவாக கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு சாலட் அல்லது தயிர்ப் பச்சடி சேர்த்துக் கொள்ளவும். விருப்பப்பட்டால் 11 மணிக்கு உண்ணலாம்.

காய்கறிகள், பழங்கள் விதவிதமாக உண்ணவும். உதாரணத்திற்கு காலை டிபனுடன் 2 துண்டு கொய்யா, ஓர் ஆரஞ்சு சாத்துக்குடி உண்ணலாம். மதிய உணவுடன் வாழைப்பழம், மாலையில் ஆப்பிள்... காய்கறிகளைப் பொரியலாகச் செய்யும்போது ஒரே வகை காய்க்குப் பதிலாக இரண்டு அல்லது மூன்று வகை காய்களைச் சேர்த்துச் செய்யலாம். முடிந்தவரை 3 வகை பழங்கள், 4 வகை காய்கறிகள், தினமொரு கீரை என்று கிடைக்குமாறு உணவில் மாற்றங்கள் செய்யவும்.

பால், தயிர் குறிப்பிட்டபடி அளவு தவறாமல் உண்ணவும்.

பாதாம், கிஸ்மிஸ், பேரீச்சை போன்றவை உங்கள் பட்ஜெட்டில் முடியுமானால் சேர்க்கலாம். ஆனால் கீரை சேர்த்துக் கொண்டாலே இரும்புச்சத்து கிடைத்துவிடும்.

அடை சாப்பிடுங்கள்

முழு தானியங்கள், பயறு, பருப்பு வகைகள் கலந்த டிபனாகத் தயாரிக்கலாம். அடை, தோசை, விதவிதமான இட்லியுடன் பலவகை சட்னி, சாம்பார் போன்றவை.

சோயாவில் முழுப் புரதம் உள்ளதால் தங்களுக்குப் பிடித்தமானபடி சிறிதளவு ஏதாவது ஒரு உணவுடன் சேர்க்கவும். (சைவமாக உள்ளவர்கள் முக்கியமாக இதைக் கடைப்பிடிக்கவும்)

உப்பு, ஊறுகாய், காரத்தைக் குறைக்கவும். ஃப்ரஷ் பழங்கள், காய்கறி ஜுஸ் சாப்பிடலாம்.

ஓரளவு நன்றாகக் குனிந்து, நிமிர்ந்து வேலை செய்யவும். நன்றாக நடக்கவும். இதனால் பலவித பிரச்னைகளைத் தவிர்க்க இயலும்.

வீண் வாக்குவாதங்கள், விவாதங்கள் தவிர்த்து நேரம் கிடக்கும்போது நல்ல பாட்டுக்கள், ஸ்லோகங்கள் கேட்கலாம். மனது நிம்மதியுடன் இருந்தால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.

இனி கர்ப்பிணிகளுக்கான ஒரு சில சத்தான, ருசியான உணவு வகைகள்:

தோடம்பழ சர்பத்

கமலாப்பழம் என்னும் தோடம்பழத்தின் சாறு அரை லிட்டருக்கு சீனி ஒரு கிலோ போட்டு பாகுபதத்தில் காய்ச்சி, இறக்கும்போது சிறிது குங்குமப் பூ சேர்த்து கலக்கி ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டு சாப்பிடலாம். உஷ்ணத்தினால் உண்டான பேதி, அதிகமான பித்தம், கிறுகிறுப்பு, சுவையின்மை இவை நீங்கும். அதிலும் கருவுற்ற முதல் மூன்று மாதங்களுக்கு இது மிகவும் பயனளிக்கக்கூடிய ஒன்று.

பூசணிக்காய் சர்பத்

வெள்ளைப் பூசணிக்காயைத் தோல், விதை நீக்கி பிசைந்து மெல்லிய துணி அல்லது மாவுச் சல்லடையில் வடிகட்டி எடுத்து ஒரு லிட்டர். 50 கிராம் இஞ்சியைத் தோல் சீவி இடித்துப் பிழிந்து சாறெடுத்துச் சிறிது நேரம் வைத்திருந்து, அடியில் தங்கியுள்ள வெண்மை நிறமான சத்தை நீக்கிவிட்டு மேலாக எடுத்து பூசணி சாறுடன் கலந்து அதை அரை லிட்டராகக் காய்ச்சி மேலாக ஒரு கிலோ சீனி சேர்த்துத் தேன் போல வரும்போது இறக்கி தினமும் இருவேளை 2 டீஸ்பூன், அரை டம்ளர் தண்ணீரில் கலந்து குடிக்க, கர்ப்பிணிப் பெண்களுக்கு வெள்ளைப்படுதல், கருப்பைக் கோளாறுகள், கைகால் எரிச்சல், நீர்ச்சுருக்கு குணமாகும்.

முருங்கைக்காய் சூப்

தேவையான பொருட்கள்: முருங்கைக்காய்_3, வெங்காயம்_1, தக்காளி_1, பயத்தம் பருப்பு_லு டேபிள் ஸ்பூன், பூண்டு_1 பல், மிளகு, சீரகப் பொடி_சிறிதளவு, பால்_அரை கப், மக்காச் சோளமாவு _1 டேபிள் ஸ்பூன், உப்பு_தேவையான அளவு, சர்க்கரை சிறிதளவு.

செய்முறை: முருங்கைக்காய்களைப் பெரிய துண்டங்களாக அரிந்து பிரஷர்குக்கரில் ஆவியில் வேக வைக்கவும். வெந்தபின் அதில் உள்ள சதைப் பற்றை வழித்து எடுத்துக்கொள்ளவும். வெங்காயம், தக்காளி, இரண்டையும் மிகப் பொடியாக அரியவும், பயத்தம் பருப்பில் தண்ணீர் ஊற்றி, பூண்டு, அரிந்த வெங்காயம், தக்காளி சேர்க்கவும். கரகரப்பாகப் பொடித்த மிளகு, சீரகப் பொடியை ஒரு சிறு துணியில் மூட்டை போல கட்டி பருப்பினுள் போட்டு குக்கரில் வேகவைக்கவும்.

வெந்தபின் துணிமூட்டையை எடுத்து எறிந்துவிட்டு, பருப்பு ஆறியபின் முருங்கைக்காய் விழுதுடன் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். அரைத்தபின் வடிகட்டி தேவைக்கேற்ப தண்ணீர் சேர்க்கவும். அரை கப் பாலுடன் 1 டேபிள் ஸ்பூன் மக்காச் சோள மாவைக் கரைத்து அதையும் சூப்புடன் சேர்த்து ருசிக்கேற்ப உப்பு, சிறிது சர்க்கரை சேர்த்து சூடாக்கவும். (கொதிக்கவிடக்கூடாது) கலந்துவிட்டுக் கொண்டே சூப் நன்கு சூடானதும் சூப் கிண்ணங்களில் ஊற்றி பரிமாறலாம்)

பாலக் சூப்

(டெல்லி பாலக் கிடைத்தால் அதிக ருசி. இதன் நுனி கூர்மையாக இல்லாமல் அரை வட்ட வடிவில் அமைந்திருக்கும்)

இரண்டு கட்டு பாலக் கீரையை ஆய்ந்து, கழுவிக் கொள்ளவும். ஒரு வெங்காயத்தைப் பொடியாக அரியவும். பிரஷர் பானில் _ ஒரு டீஸ்பூன் வெண்ணெய் விட்டுச் சூடாக்கி, வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதங்கியதும் கீரையைச் சேர்க்கவும். (அரிய வேண்டாம்) கீரை சுருங்கியதும் மூழ்கும் வரை தண்ணீர் விட்டு ஒரு முழு பச்சை மிளகாய், கால் அங்குலத் துண்டு இஞ்சி சேர்த்து மூடி, வெயிட் வைத்து ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

ஆறிய பின் மூடியைத் திறந்து மிளகாய், இஞ்சித் துண்டு இரண்டையும் எடுத்து விடவும். (நெடி அதிகமாக இருந்தால் சூப் நன்றாக இருக்காது) கீரையை வேகவைத்த தண்ணீரோடு அப்படியே மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி தகுந்த உப்பு சேர்க்கவும். ஒருதம்ளர் பாலில் ஒரு டேபிள் ஸ்பூன் மக்காச்சோள மாவைக் கரைத்து சூப்பில் ஊற்றி நன்றாகச் சூடாக்கவும். கொதிக்க விடக்கூடாது. சுடச்சுட கிண்ணங்களில் ஊற்றிப் பரிமாறவும். விருப்பப்பட்டவர்கள் மேலே சிறிது கடைந்த பாலேடு (ஃப்ரெஷ் க்ரீம்) மற்றும் துருவிய சீஸ் சேர்க்கலாம்.

nantri - sinehithi

Sonntag, Januar 16, 2005

எதனால் எல்லாம் கருத்தரிப்பு ஏற்படாமல் போகலாம்?...

- Dr.ஜெயசிறீ கஜராஜ் -

பெண்களில் மலடு என்கிற ஒரு விஷயமே கிடையாது

குழந்தைப்பேறு என்பது எல்லாத் தம்பதிகளும் வேண்டும் விரும்பும் பொதுவான ஒரு விஷயம்தான். பலர் இந்த விஷயமாக ஆசீர்வதிக்கப்பட்டாலும் சிலருக்கு இந்த சந்தோஷம் எளிதாகக் கிடைத்துவிடுவதில்லை.. எல்லா விரல்களும் ஒன்றுபோல இருப்பதில்லை இல்லையா? அதுபோலத்தான் எல்லா தம்பதிகளுக்கும் இந்த விஷயம் ஒரே சமயம், தாங்கள் எதிர்பார்ப்பது போல நடந்துவிடும் என்று சொல்லிவிட முடியாது.

இன்றும் சரி, அன்றும் சரி... திருமணமான தம்பதிகளுக்கு அவர்களுடைய குடும்பங்கள் கொடுக்கும் அதிகப்படியான அவகாசம் மூன்று மாதங்கள்தான். அதன் பிறகு ‘இன்னும் உண்டாகலையா..?’ என்கிற கேள்விகளால் அந்தத் தம்பதியை அரித்தெடுக்கத் தொடங்கி விடுகிறார்கள். அவர்களுடைய உறவினர்களும் நண்பர்கள் வட்டமும்.

அதிலும் ஆண் இந்த விஷயத்திலிருந்து பெரும்பாலும் தப்பிவிடுவார். அவரிடம் இந்தக் கேள்வி பெரும்பாலும் நேரிடையாகக் கேட்கப்படுவதில்லை. பெண்கள்தான் மொத்தத் தாக்குதலுக்கும் ஆளாகிறார்கள். கொஞ்ச நாட்களிலேயே அவளுக்கு சமூகம் ‘மலடி’ என்கிற ஒரு பட்டத்தையும் வழங்கிவிடுகிறது.

நாம் முதலில் ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். பெண்களில் மலடு என்கிற ஒரு விஷயமே கிடையாது தெரியுமா? தம்பதிகள் இருவரும் சரியானபடி, சரியான நேரத்தில் உறவு வைத்துக் கொள்ளாமல் இருந்திருக்கலாம். அல்லது அவர்கள் சரியானபடி டீரிட்மெண்ட் எடுத்துக் கொள்ளாமல் இருந்திருக்கலாம். அதனால்தான் குழந்தை உண்டாகாமல் இருந்திருக்கலாமே ஒழிய, மலட்டுத் தன்மை (Infertility) என்பது பெண்ணில் கிடையாது. அவர்களில் subfertile, அதாவது வளர்ச்சி குறைந்தநிலைதான் ஏற்பட்டிருக்கலாமே ஒழிய வேறு காரணங்கள் இருப்பதற்குச் சாத்தியமில்லை.

திருமணமான தம்பதிகளில் நூறில் இருபது பேருக்குக் குழந்தை பிறப்பதில் பிரச்னை ஏற்படுகிறது. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இவர்களில் 35 _40% வரைதான் பெண்கள் காரணமாகிறார்கள். பத்து வருடங்களுக்கு முன் 20_25% வரை தான் ஆண்கள் காரணமாக இருந்தார்கள். ஆனால் இன்று 40% வரைக்கும் குழந்தையில்லா பிரச்னைக்கு ஆண்கள்தான் காரணமாக இருக்கின்றனர். 15_20% வரை பிரச்னைக்குக் காரணம் யாரென்றே தெரியாமல் போகலாம். இந்த சந்தர்ப்பத்தில் தம்பதிகள் இருவருமே நார்மலாக இருந்தாலும் அவர்களுக்கு எந்தக் காரணத்தினாலோ குழந்தை பிறக்காமலேயே போகும்.

எது எப்படியோ.... திருமணமாகி இரண்டு வருடங்களாகியும் குழந்தை உண்டாகாமல் இருந்தால்தான் தம்பதிகளில் யாருக்கேனும் பிரச்னை இருக்கமுடியும் என்று நம்மால் சொல்லமுடியும். குறிப்பிட்ட சில மாதங்களுக்குள்ளேயே பிரச்னை உள்ளது என்றெல்லாம் கண்மூடித்தனமாகச் சொல்லிவிட முடியாது.

ஒவ்வொரு தம்பதிக்கும் அவரவர் சூழல் வேறுபடும். சிலர் முப்பது வயது போல திருமணம் முடித்திருக்கலாம். இவர்களுக்கு குழந்தை விஷயம் தள்ளிப்போனால் இரண்டு மூன்று வருடம் வரையெல்லாம் காத்திருக்க முடியாது. இது உடனே கவனிக்கப்படவேண்டிய விஷயமாகிவிடும்.

சிலருக்கு இருபத்தியிரண்டு, இருபத்துமூன்று வயதிலேயே திருமணமாகலாம். ஆனால் குடும்பத்தாரின் நச்சரிப்பு இந்தத் தம்பதிக்கு அதிகமாக இருக்கும். வயது காரணமாக இவர்கள் இன்னும் சில காலம் வரை பொறுத்திருந்து பார்க்கலாம் என்றாலும், குடும்பக் கட்டாயத்தின் பேரில் அவர்கள் உடனே ட்ரீட்மெண்ட் ஆரம்பித்துவிட நேரலாம். அதனால் சூழல் என்பது அவரவர்க்கு ஏற்றபடி மாறுபடும். அவரவருடைய குடும்பச்சூழல் மற்றும் தேவைப்படி மருத்துவர்கள் ட்ரீட்மெண்ட் ஆரம்பிப்பார்கள்.

பொதுவாக டிரீட்மெண்டுக்கு வரும் குழந்தையில்லாத் தம்பதிகளில், நூறு பேரில் எண்பத்தைந்து சதவீதம் பேர் வரை எந்த விதமான மருந்து மாத்திரைகளையும் பயன்படுத்தாமலேயே கருதரித்து விடுவார்கள். மீதமுள்ளவர்களுக்குத்தான் மருத்துவர்களான எங்கள் உதவி முழுமையாகத் தேவைப்படும்.

பிரச்னையுடன் வருபவர்கள் பெரும்பாலும் அம்மா _பெண் அல்லது மாமியார் _ மருமகள் என்று வருவதுண்டு. பிரச்னையுள்ளவர்கள் இப்படி வருவது தவறு. தம்பதிகளாக வரும்போதுதான் பிரச்னையை இரண்டு கோணங்களிலும் அலசித் தீர்வு காணமுடியும். இதில் மாமியார்களுக்கும் அம்மாக்களுக்கும் இடமில்லை. தம்பதிகளும் தயக்கப்படாமல் தங்கள் பிரச்னைகளை மனம் விட்டு மருத்துவரிடம் சொல்ல வேண்டும். அதிலும் அவர்கள் கொடுக்கும் தகவல்கள் உண்மையாக இருக்கவேண்டியது அவசியம்.

எதனால் எல்லாம் கருத்தரிப்பு ஏற்படாமல் போகலாம்?...

சிலருக்கு அந்த உறவு பற்றிய போதிய அளவு விஷயம் தெரியாமல் இருக்கலாம்.

முட்டை வெளிப்படும் OVULATION PERIOD தான் உறவுக்கு உகந்த சமயம். அந்தச் சமயத்தில் உறவு கொண்டால்தான் கருதரிப்பு ஏற்படும் என்று சொல்லி இருக்கிறேன். அந்த தேதிகளை தவற விடும்போது சில தம்பதிகளுக்குக் கருதரிக்காமல் போகலாம்.

கணவனும் மனைவியும் வேலை பார்க்கும் குடும்பங்களிலும், இருவரில் யாரேனும் அடிக்கடி வெளியூருக்கு டூர் போகும் குடும்பங்களிலும் இவ்வாறு ஆகலாம்.

சிலருக்கு அல்லது தம்பதியர் இருவருக்குமே நடந்தது இரண்டாம் திருமணமாக இருக்கலாம். அவர்களில் கணவர் ஏற்கனவே குழந்தை பெற்றவராக இருந்தாலும் முன்பிருந்த உடல்நிலை போல அவருக்கு இப்போது இல்லாமல் போகலாம். அதுவும்கூட கருதரிக்காமல் போகக் காரணமாகும் என்பதால், இந்தத் தகவலையும் மறைக்காமல் மருத்துவரிடம் சொல்லிவிட வேண்டும்.

சில நேரங்களில் குழந்தை இல்லையா என்ற சமூகத்தின் கேள்வியை கூடத் தம்பதிகள் மனதில் ஒருவித பாதிப்பு ஏற்படுத்தி, கருத்தரிப்பு உண்டாவதில் பிரச்னைகள் ஏற்படுத்தலாம்.

சில குடும்பங்களில் கூட்டுக் குடும்பமாக இருப்பார்கள். அதுபோன்ற சூழலில் தம்பதியரின் நெருக்கம் சற்றே குறைய வாய்ப்புள்ளது. அதனாலும் குழந்தைபேறு தள்ளிப் போகலாம்.

சிலர் அந்த உறவு முடிந்தவுடன் சுத்தமாக இருக்கிறேன் பேர்வழியே என்று, தங்கள் அந்தரங்க பாகங்களை தண்ணீராலோ வேறு கெமிக்கல் திரவத்தாலோ சுத்தப்படுத்தி வரலாம். இப்படி செய்யும்போது விந்தணு அழிந்துபோகும் வாய்ப்புள்ளது. இதனாலும் கருதரிப்பு தள்ளிப் போகலாம்.

இதுபோன்ற பல காரணங்களினால் உடலளவில் பிரச்னைகள் இல்லாத தம்பதிகளுக்கும் கூட கருத்தரிப்பதில் பிரச்னைகள் உண்டாகலாம். மருத்துவரிடம் இது பற்றி ஒளிவு மறைவில்லாமல் பேசி பிரச்னைக்கு உடனடித் தீர்வு காணலாம்.

nantri-Kumutham Sinehithi