Posts mit dem Label மாதவிலக்கு werden angezeigt. Alle Posts anzeigen
Posts mit dem Label மாதவிலக்கு werden angezeigt. Alle Posts anzeigen

Sonntag, Februar 08, 2009

மாதவிடாய் நிற்றல்

- டொக்டர்.எம்.கே.முருகானந்தன் -

அந்தப் பெண் பயந்தடித்துக் கொண்டு ஓடி வந்தாள். மாத விடாய் வர வேண்டிய தினத்துக்கு வரவில்லையாம். 10 நாட்கள் பிந்திவிட்டதாம். பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள். தங்கினால் வெட்கக் கேடு.

இன்னொரு பெண்ணின் பிரச்சனை மிகவும் அந்தரங்கமானது. கணவனுடன் சேர்ந்திருக்க விருப்பமுள்ள போதும், சேர்ந்திருக்கும் போது அவளுக்கு முடிவதில்லை. சற்று வேதனை. பொறுத்துக் கொண்டாலும், கணவனுக்கு இதமாக இல்லை என அதிருப்திப்படுகிறான்.

மற்றொருத்திக்கு மேலெல்லாம் எரிவு, படபடப்பு, பதற்றம், சினம், காரணம் சொல்ல முடியாத வியர்வை, உடல் உழைவு.

இவர்களுக்கெல்லாம் என்ன பிரச்சனை?

இவர்கள் வயது 50க்கு சற்று கூட அல்லது குறைய. மாதவிடாய் முற்றாக நிற்பதோடு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்.

முதற் பெண்ணுக்கு சிறுநீர்ப் பரிசோதனை செய்தபோது கர்ப்பம் தங்கவில்லை என்பது உறுதியாகிற்று.

மாதவிடாய் முற்றாக நிற்பதற்கு முந்தைய காலங்களில் இவ்வாறு பிந்தி வருவது சகசம். நாற்பது வயதை அண்டிய காலங்களிலேயே மாதவிடாய் குழப்பங்கள் சிலரில் ஆரம்பித்து விடும்.

ஆரம்பத்தில் 8 நாள் 10நாள் என முந்தி முந்தி வரும். ஆயினும் நாட் செல்லச் செல்ல பிந்தத் தொடங்கும். 10, 15 நாட்கள் என ஆரம்பித்து 2,3 மாதத்திற்கு ஒரு தடவையென தாமதமாவதுண்டு.

ஆனால் எல்லோருக்கும் அப்படித்தான் நடக்கும் என்று சொல்ல முடியாது. திடீர் என எவ்வித ஆர்ப்பாட்டம் இன்றி நின்று விடுவதும் உண்டு. மோசமான நிலையில் குருதி இறைத்து சத்திரசிகிச்சை வரை போவதும் உண்டு.

எவ்வாறாயினும் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களில் 24 மாதங்களுக்கும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 12 மாதங்களுக்கும் தொடர்ந்து வராதிருந்தால் மட்டுமே மாதவிடாய் முற்றாக நின்று விட்டதென நிச்சயமாகக் கூறலாம். சாத்தியங்கள் குறைவாயினும் அதுவரை கரு தங்காது என அறுதியாகக் கூற முடியாது. இவ்வயதில் கருத்தடை முறையாக ஆண் உறை பாவிப்பது பொருத்தமாக இருக்கும்.

இரண்டாவது பெண்ணுக்கு மாதவிடாய் முற்றாக நின்றுவிட்டதால் உறுப்பின் மென்சவ்வுகள் முதிர்ந்து அவளது பிறப்புறுப்பு சற்று இறுகிவிட்டது. அத்துடன் அதற்கு ஈரலிப்பையும் வழவழுப்பையும் தரும் சுரப்பிகளின் செயற்பாடு குறைந்ததால் வரட்சியாகி விட்டது. இதனாலேயே உறவு சுகமாக இருக்கவில்லை.

இதற்காக கணவனும் மனைவியும் கடுகடுப்பாகி சினத்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை. வரட்சியையும், இறுக்கத்தையும் தணிக்கக் கூடிய கிறீம் வகைகள் இருக்கின்றன. இவற்றை உபயோகிப்பதின் மூலம் குடும்ப வாழ்வில் மீண்டும் வசந்தம் வீசவைக்கலாம்.

மூன்றாவது பெண்ணுக்கு ஏற்பட்ட வியர்வை, பதற்றம், படபடப்பு, தூக்கக் குறைவு, முதலானவை மாதவிடாய் நிற்கும்போது நிகழும் ஹோர்மோன் குறைபாடுகளால் ஏற்படுவது. நோயாளிக்கு மிகுந்த துன்பத்தைக் கொடுக்கும் இவ்வறிகுறிகள் வீட்டில் உள்ள ஏனையவர்களால் பொதுவாக உணரப்படாதவை.

'என்ன சின்ன விசயங்களுக்கெல்லாம் பெரிய Fuss பண்ணுகிறா' என அவர்களை எண்ண வைக்கும்.

தினசரி உடற்பயிற்சி, தியானம், சுவாசப் பயிற்சி, குளிர்ச்சியான சூழல் போன்றவை இவ்வறிகுறிகளைத் தணிக்க உதவும். Evening primrose oil, Soya, மற்றும் சில கிழங்கு வகைகளிலிருந்து பெறப்படும் இயற்கை பொருட்கள் அவ்வறிகுறிகளைத் தணிக்கின்றன என நம்பப்படுகிறது.

இவற்றால் முடியாதபோது ஹோர்மோன் மாத்திரைகளை சில காலம் உட்கொள்ள வேண்டி வரலாம்.

மாதவிடாய் முற்றாக நிற்றல் என்பது ஒரு நோயல்ல. வாழ்க்கைச் சக்கரத்தின் தவிர்க்க முடியாத ஒரு பகுதி. ஆயினும் அதன் போது ஏற்படும் உடல் ரீதியானதும், உளரீதியானதுமான பல மாற்றங்கள் சில பெண்களுக்கு மிகுந்த துன்பத்தை அளிக்கின்றன.

மேற்கூறிய மாற்றங்களைத் தவிர சிறுநீர் சம்பந்தமான சில பிரச்சனைகளும் மிகுந்த இடைஞ்சலை ஏற்படுத்துகின்றன.

அடிக்கடி சிறுநீர் கழித்தல், இரவில் இதற்காக அடிக்கடி எழும்புவதால் தனதும், வீட்டில் உள்ளவர்களினதும் தூக்கத்தையும் குழப்பல், சிறுநீரை அடக்க முடியாமல் தன்னிச்சையின்றிச் சிந்துதல், இருமும்போதும், தும்மும்போதும், முக்கும்போதும் தன்னையறியாது சிறுநீர் சிந்துதல் போன்றவை சில்லறைப் பிரச்சனைகள் போல் தோன்றினாலும், நோயாளிக்கும் வீட்டினருக்கும் சிரமங்களையும் மனவிரிசல்களையும் ஏற்றபடுத்தக் கூடியளவு சிக்கலானது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

எலும்புத் தேய்வு (Osteoporosis), இருதய நோய்கள் போன்ற வேறு சில பாதிப்புகளும் மாதவிடாய் முற்றாக நின்றபின் பெண்களுக்கு வருவதற்கான சாத்தியங்கள் அதிகம்.





தலை முடி உதிர்ந்து மென்மையாகி சோபை இழப்பது மாதவிடாய் நின்ற பின் ஏற்படும் மற்றொரு பிரச்சனையாகும்.


'வயதாகிவிட்டது. என்ன செய்வது? போறமட்டும் இவற்றையெல்லாம் பொறுத்துக் கொள்ள வேண்டியதுதான்' என விரக்தியோடு வாழ வேண்டியதில்லை. பெண்ணாய்ப் பிறந்த பாவம் என கழிவிரக்கம் கொள்ள வேண்டியதில்லை.

நீங்களும் மற்றவர்கள் போல மகிழ்வோடு வாழலாம். வசந்தங்கள் மீண்டும் வரும்.

இவற்றைக் குணமாக்க மருத்துவம் இருக்கிறது. ஒரு சிலவற்றை முற்றாகக் குணமாக்க முடியாவிட்டாலும் பிரச்சனைகளின் தாக்கங்களைத் தணித்து நலமாகவும் மகிழ்வாகவும் வாழ வழிகள் இருக்கவே செய்கின்றன.

நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான். தயக்கத்தை விட்டு உங்கள் பிரச்சனைகளை மருத்துவருடன் வெளிப்படையாகக் கலந்துரையாடுங்கள். வெளிப்படையாக என்பதை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

Quelle - டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

Montag, September 18, 2006

மாதவிடாய் ரென்சன் - தீர்வு என்ன?

- ஜனனி

பெண்கள் திடீரென்று சில நாட்களாகக் காரணமில்லாமல் எரிந்து விழுவது, வயிற்று வலி, தலைவலி, கோபப்படுவது, டிப்ரஷன், டென்ஷன் இவையனைத்தும் மாதவிடாயின் முன்பு அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளின் பிரதிபலிப்பு. ஹார்மோனின் வேலைகள்தான். Premenstrual Syndrome.. அதாவது, மாதவிடாயின் சில நாட்களுக்கு முன்பு ஏற்படும் சில அசௌகரியங்கள் அதற்கு பின்பு இருக்கும் மருத்துவ உண்மைகள், அதற்கான தீர்வுகள் பற்றி விளக்கமளிக்கிறார் மகப்பேறு மருத்துவர் கீதா ஹரிப்பிரியா!

சினை முட்டையை உற்பத்தி செய்கிற ஒவ்வொரு பெண்ணும், மாதவிடாய்க்கு முன்பு சில மாற்றங்களை அனுபவிக்கிறாள். மார்பக வலி, வீக்கம், தலைவலி, மனச்சோர்வு, தசைப்பிடிப்பு, எரிச்சல் போன்ற அறிகுறிகள் மாதவிடாய்க்கு முன்பு இருக்கும். இதனை மருத்துவம் Premenstrual Syndrome என்கிறது. அதிக சதவிகிதப் பெண்கள் உடலால் மட்டுமின்றி மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் தொடர்ந்து சில நாட்கள் அவர்களுடைய இயல்பு வாழ்க்கைப் பெரிதும் பாதிப்படைகிறது. முன்பெல்லாம் இதைச் சகித்துக் கொண்டு இயல்பு வாழ்க்கையைத் தொடரவேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால், இன்றைய மருத்துவத்தில் இதற்குத் தேவையான மருந்துகள் வந்தாகிவிட்டது. மாதவிடாய்க்கு முந்தைய நாட்களில், அவதிகள் காரணமாக பெண்கள் தங்கள் வேலைக்கோ, குடும்ப உறவுகளிலோ எந்தவித இடையூறுகளும் வராமல் ஜாலியாகச் சமாளிக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பு, பெரும்பாலான பெண்கள் மார்பகங்களில் கனமான உணர்வு அல்லது மார்பக வலி இருப்பதை அனுபவித்திருப்பார்கள். இதற்கு அடிப்படைக் காரணம், ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகமாவதுதான். செல் அணுக்களில் நீர் தேங்கலால், உடலில் வெயிட் போட்டு விட்டது போல கனமான உணர்வு தோன்றுகிறது. தலைவலி சர்வ சாதாரணமாகப் பலருக்கும் இருக்கும். இளம் பெண்களின் ஒற்றைத்

தலைவலிக்குக் காரணம், இந்த ஹார்மோனல் இம்பேலன்ஸ் தான். மேலும் பீரியட்ஸ் சமயத்தின் சில நாட்களுக்கு முன்பு முகப்பருக்கள் வரத் தொடங்கும். ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன், என்ட்ரோஜன் ஹார்மோன் அளவை மாற்றி, முகப்பருக்களைப் பருக்க வைத்துவிடும். உடலில் ஏற்படும் இந்தப் பிரச்னைகளின் பிரதிபலிப்பு உடல் சோர்வையும், மனப்பிரச்னைகளையும் கொடுக்கும். காரணமில்லாமல் எரிந்து விழுதல், அமைதியின்மை, மனக்கவலை, திடீரென்று அழுதல் என்று ஒரு கட்டுப்பாடு இல்லாமல் தங்கள் உணர்ச்சிகளை மற்றவர்களிடம் பிரதிபலிப்பார்கள்... வீட்டில் உள்ளவர்களும், கணவர்களும் இந்த நேரத்தில் அவர்களைப் புரிந்து கொண்டு அன்பாக நடந்து கொள்வதே அவர்களுக்குச்செய்யும் மிகப் பெரிய உதவியாக இருக்கும். பெண்களின் இந்தப் பிரச்னையைப் புரிந்து கொள்ளாமல், அவர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு சண்டை போட்டால், அவர்களுடைய உடல்நலம் தேவையில்லாமல் பாதிக்கப்பட்டு விடும்.

மாதவிலக்கு ஏற்படுவதற்கு ஓரிரு நாட்கள் முன்பு அடிவயிற்றிலும், பக்கவாட்டிலும் சற்று கனமான உணர்வு, சூடு தெரியும். இதை வைத்தே தீட்டு ஏற்பட இருக்கிறது என்பதைப் பெரும்பாலும் எல்லாப் பெண்களும் அறிந்திருப்பார்கள். இதற்குக் காரணம் கருப்பையிலும், கரு முட்டையிலும் ஏற்படும் அதிக இரத்த ஓட்டம்தான். சிலருக்கு வயிற்று வலி படாய்ப்படுத்தும். திடீரென்று ஏற்படும் வயிற்றுவலி, சிலரை மயக்கமடையக் கூடச் செய்துவிடும். வலியால் சுருண்டு விடுவார்கள். நாக்கு வறண்டு போதல், வியர்வை, தலைசுற்றல் கூட இருக்கலாம். மாதவிலக்கு ஏற்பட்டவுடன் வலி படிப்படியாகக் குறையலாம். கையால் பிசைவது போல வலி இருந்தால் அது கருப்பை அதிகமாக சுருங்கி விரிவதால்தான் இருக்கும். கருப்பையின் உட்சுவர் சீராகச் சிதையாமல், தாறுமாறாகச் சிதைவதால் சிலருக்கு வலியை ஏற்படுத்தலாம். தாங்கமுடியாத வலி இருந்தால் மட்டுமே மருத்துவரின் ஆலோசனையின்படி வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்ளவேண்டும்.

ஒரு சில பெண்களுக்கு கருப்பையில் கட்டிகள், கரு முட்டைப் பையில் நீர்க்கட்டிகள் போன்றவை இருந்தால் கொஞ்சம் சீரியஸ் கவனம் தேவை. கருப்பையின் உட்சுவர் திசுக்கள் கருப்பையினுள் வளர்வதுண்டு. அதேபோல, சினைக்குழாய், சினை முட்டைப்பை, வயிற்றுப் பகுதி போன்ற பகுதிகளாக வளர்ந்து ‘எண்டோமிட்ரியோஸிஸ்’ எனப்படும் தொந்தரவுகளுக்கு ஆளாகலாம். எண்டோ மிட்ரியோஸிஸ் தீவிரமடைந்து சிறு குடலைப் பாதிக்கும்போது தான் மாதவிடாயின் போது வாந்தி, பேதி ஏற்பட்டுவிடுகிறது. எனவே, மாதவிடாயின் போது இதுபோன்ற தீவிர பிரச்சினைகள் இருந்தால், அதைத் தள்ளிப் போடக் கூடாது. இதனால்கூட மாதவிடாயின் போது தீராத வலி ஏற்படும். இதுபோன்ற பிரச்னைகளுக்கு சிகிச்சைகள் அவசியம்!

பொதுவாகத் தீட்டுக் கோளாறுகள் என்று நீங்கள் மருத்துவரை அணுகினால் அவர் ஹார்மோனல், இம்பாலன்ஸ் என்று தான் குறிப்பிடுவார். இந்த ஹார்மோனல் இம்பாலன்ஸ் என்பது, ஈஸ்ட்ரோஜன், புரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களின் குறையினைக் குறிக்கிறது. இந்த ஹார்மோன்களின் செயல்பாட்டை, மூளையின் அடிபாகத்தில் உள்ள பிட்யூட்டரி எனப்படும் சுரப்பி கட்டுப்படுத்துகிறது. அதுமட்டுமல்ல, இந்த பிட்யூட்டரி சுரப்பியின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவது, ‘ஹைம்போதலாமஸ்’ எனப்படும் மூளையின் ஒரு பகுதி, இந்தப் பகுதி, உடலின் தேவையை அறிந்து அவ்வப்போது பிட்யூட்டரிக்கு கட்டளையிட்டுக் கட்டுப்படுத்தும்! சாதாரணமாக ஏற்படும் மன பயம், அதிர்ச்சி போன்றவை மாதவிலக்கால் சற்று மாற்றங்களை ஏற்படுத்தக் காரணமாக இருப்பது, இந்த ‘ஹைபோதலாமஸ்’ எனும் பகுதி தான்! பொதுவாக, தீட்டுக் கோளாறுகளுக்கு மருத்துவர் அளிக்கும் பரிசோதனைச் சீட்டுகளைப் பாருங்கள், இந்த ஹார்மோன்களின் நிர்ணயப் பரிசோதனையாகத்தான் இருக்கும். பொதுவாக, மாதவிடாய் ஏற்படவும், முட்டை நல்ல ஆரோக்யமாக வெளிவர... சினைமுட்டைப்பை, பிட்யூட்டரி, ஹைப்போதலாமஸ் மற்றும் கருப்பை போன்றவற்றின் ஒத்துழைப்பு ஒன்றுக்கொன்று சீராக இருக்க வேண்டும். இதில் எந்த ஒரு உறுப்பில் கோளாறு ஏற்பட்டாலும் தீட்டுக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

மாதவிலக்கின் முன்பு ஏற்படக்கூடிய இந்த அறிகுறிகளில் ஏற்படும் பிரச்னைகளை உட்கொள்ளும் உணவின் மூலமாகத் தீர்வுக் காணலாம். சரி... என்ன செய்யலாம்?

கொழுப்புச் சத்துள்ள உணவுகள் PMS (Pre menstrual syndome) அறிகுறிகளை அதிகப்படுத்தும். குறைவான கொழுப்புள்ள உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும்.

உப்பு அதிகம் சேர்ந்த ஊறுகாய், நொறுக்குத்தீனி வகைகளை ஒதுக்கிவிட வேண்டும்.

PMS இன்போது ஸ்வீட், ஐஸ்க்ரீம்களை ஒரு பிடி பிடித்தால் நன்றாக இருக்குமே என்று படும். சாக்லெட், சிப்ஸ் போன்றவற்றை ஒரு வெட்டு வெட்டத் தோன்றும். இருந்தாலும் இனிப்புக் குறைவாக உள்ள உணவுகளைச் சாப்பிடுவதே நல்லது.

மாதவிடாய் நாட்களுக்கு ஒரு வாரம் முன்பு, இருபது நிமிட வாக்கிங் பழகிக்கொண்டால் மனரீதியான பாதிப்புகளைக் குறைக்கலாம்.

காபி, டீ போன்ற பானங்களைத் தவிர்க்கலாம். தினமும் இரண்டு கப்பிற்கு மேல் காபி, டீ, குடிக்கும் பெண்கள் சாதாரணப் பெண்களைவிட ஏழு மடங்கு றிவிஷி ஆல் அவதிப்படுவார்கள் என்கிறார்கள், ஆராச்சியாளர்கள். காபியில் உள்ள காஃபின் பதற்றத்தையும் எரிச்சலையும் அதிகப்படுத்தும்.

7_8 மணி நேரம் உறக்கம் கட்டாயம்.

இந்தச் சமயத்தில் வைட்டமின் ஏ,டி அவசியம். இவை அதிகம் உள்ள கேரட், பசளைக்கீரை, பால் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்!

மார்பக வலி, களைப்பு போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெற, வைட்டமின் பி6 உதவும். மீன், கோழி, வாழை, உருளை போன்றவை வைட்டமின் பி6 உள்ள உணவுகள்.

மனஅழுத்தம் நீங்க வைட்டமின் ‘சி’ உள்ள ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை சேர்த்துக் கொள்ளுங்கள்!

இந்த உணவுப் பழக்கங்களை மாதவிடாயின் ஒரு வாரத்துக்கு முன்பும், மாதவிடாயின் போதும் கடைப்பிடித்தல் நல்லது!

றிவிஷி லிருந்து விடுபட குடும்பத்தாரின் சப்போர்ட் ஒவ்வொரு பெண்ணுக்கும் மிக முக்கியம். இதுதான் அவர்களின் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வாக அமையும்!

_ஜனனி
Quelle - Kumutham health (sep-2006)

Freitag, Juli 28, 2006

பெண்களின் மெனோபாஸ் நாட்கள்

நம்மில் பல பெண்களுக்கு, ‘மெனோபாஸ்’ என்றால் ‘மாதவிடாய் நின்றுவிடும்’ என்றுதான் மேலோட்டமாகத் தெரியுமே தவிர, அந்த வயதில் தங்களுடைய உடலில் என்னென்ன மாறுதல்கள் நடக்கிறது.... ஏன் மாதவிடாய் நிற்கிறது... அதனால் எந்தெந்த விஜயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்ற விவரங்கள் பெரும்பாலும் தெரிவதில்லை. அதே போல ‘மெனோபாஸ்’ என்றாலே, வியாதிகள் வரும் நேரம் என்றும் சிலர் பயந்து போவதுண்டு. இந்த பயங்களும் தேவையில்லை.

குழந்தை பருவம், டீன்ஏஜ் பருவம், குழந்தை பெற்றுக் கொள்ளும் பருவம் போல இதுவும் ஒரு பருவம். இந்தச் சமயங்களில் எதிலெதில் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறுவதே இக்கட்டுரை.

மெனோபாஸ் என்றால் என்ன?

நாற்பத்தைந்து வயதுக்கு மேல், பெண்ணின் ஓவரியின் செயல்பாடு குறைந்து, பீரியட்ஸ் முறையற்றதாகி, கடைசியாக சுமார் ஐம்பது வயதில் பீரியட்ஸ் சுத்தமாக நின்று விடுவதற்குப் பெயர்தான் மெனோபாஸ். அதாவது மாதவிடாய் நின்று விடும் நிலைக்குப் பெயர்தான் மெனோபாஸ்!

மெனோபாஸ் ஏற்பட்டதற்குப் பிறகு பெண்களால் கருத்தரிக்க முடியுமா?
மெனோபாஸிற்குப் பிறகு பெண்களால் கருத்தரிக்க முடியாது. ஏனென்றால் கருத்தரிக்கத் தேவையான கரு முட்டை யின் உற்பத்தி குறைவிடும்.

எந்த வயதில் மெனோபாஸ் வரலாம்?

சாதாரணமாக ஐம்பது வயதைக் கடந்தாலே மெனோபாஸ் வந்துவிடும். சிலருக்கு முப்பத்தைந்து வயதுக்கு முன்னாலும்கூட மெனோபாஸ் வரலாம். அதற்கு ப்ரீமெச்சூர் மெனோபாஸ் (Premature Meno Pause) என்று பெயர்.

என்னென்ன காரணங்களால் ப்ரீமெச்சூர் மெனோபாஸ் வருகிறது?

ஓவரியில் ஏதேனும் கட்டி இருந்து, ஓவரியை ரிமூவ் பண்ணியிருந்தாலோ, கீமோ தெரபி, ரேடியோ தெரபி போன்ற ட்ரீட்மென்ட் எடுத்தாலோ, இல்லையென்றால் வைரஸ் இன்ஃபெக்ஷனாலோ, ப்ரீமெச்சூர் மெனோபாஸ் வரலாம்.

ஒரு பெண் மெனோபாஸ் ஸ்டேஜை நோக்கிப் போகும்போது அவளுக்கு என்னென்ன அசௌகர்யங்கள் ஏற்படும்?

1. அதிக வியர்வை (ஹாட் ஃப்ளஷ்) :

ஏ.ஸி.யில் இருக்கும்போதும் நடுத்தர வயதுப் பெண்களுக்கு வேர்த்துக் கொட்டும். இதை ஹாட் ஃப்ளஷ் என்போம்! மெனோபாஸ் அவர்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதன் அறிகுறியே இந்த வியர்வை எல்லாம்... நம் பாட்டி காலத்திலேயே நாற்பதைக் கடந்த பெண்களுக்கும் கூட இப்படித்தான் வியர்த்துக் கொட்டியிருக்கும்... இதில் சங்கடப்பட என்ன இருக்கிறது என்கிறீர்களா!

பாட்டி காலத்தில், பெண்கள் வீட்டு வேலைகளை முடித்து விட்டு, காற்றோட்டமாகத் திண்ணையில் அமர்வார்கள். அவர்களுக்கு, இது ஒரு பெரிய விஷயமாக இருக்காது! ஆனால் நாற்பதைக் கடந்த இன்றைய பல பெண்கள், அலுவலகத்தில் உயர்ந்த பதவியில் இருக்கிறார்கள். அவர்களுக்கு வியர்த்துக் கொட்டினால் அத்தனை நன்றாக இருக்காது. ஆனால் இது போன்ற அசௌகர்யங்களே, மனதளவில் அவர்களுக்குப் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. அதனால் அதிக வியர்வையால் பாதிக்கப்படும் பெண்கள் சிகிச்சைகூட எடுத்துக் கொள்ளலாம்.

2. இரவு நேர படபடப்பு (நைட் ஸ்வெட்ஸ்):

இரவில் திடீரென வியர்த்துக் கொட்டும். மிகவும் படபடப்போடு காணப் படுவார்கள். இதனால் அமைதியான தூக்கம் போய், ஒரு வித சோர்வுக்கு ஆளாவார்கள்.

3. அடிக்கடி மாறும் மூட் (மூட் ஸ்விங்ஸ்) :

அடிக்கடி கோபம், எரிச்சல், அழுகை, விரக்தி என்று எல்லா உணர்ச்சிகளும் மாறி மாறி வரும். (‘‘நாற்பது வயதுக்கு மேல், பெண்களுக்கு திடீர் சோகம் ஏன்?’’ என்பதைப் பற்றி ஏற்கனவே பார்த்தோம்.)

4. வெஜைனா உலர்ந்து போதல் :

ஈஸ்ட்ரஜன் ஹார்மோன் குறைவால், வெஜைனாவின் பாதையை வழுவழுப்பாக வைத்திருக்கும் சுரப்புகள் குறைய ஆரம்பிக்கும். அதனால் வெஜைனா உலர்ந்து போய், தாம்பத்திய உறவின் போது அசௌகர்யமும், வலியும் உண்டாகலாம். தவிர, வெஜைனா பாதையில் வழுவழுப்பு ஏற்படுத்தும் இந்த திரவம்தான், அந்தப் பகுதியின் மென்மையான திசுக்களில், இன்ஃபெக்ஷன் ஏற்படாமல் தடுக்கிறது. ஈஸ்ட்ரஜன் குறைவால் இந்த சுரப்பும் குறையும் போது அங்கே இன்ஃபெக்ஷன் ஏற்பட ஏதுவாகிறது.

மெனோபாஸிற்குப் பிறகு வரும் நீண்ட கால விளைவுகள் என்னென்ன?

பல பெண்களுக்கு எலும்புகள் தேய்ந்து போகலாம்.. இதற்கு, ‘போஸ்ட் மெனோபாசுவல் ஆஸ்டியோ போரோஸிஸ்’ என்று பெயர்.

உங்களுக்கு ஒன்று தெரியுமா? மெனோபாஸிற்குப் பிறகு, பெண்களின் எலும்புகள் தேய்மானமடைந்து விடுவதால், லேசாக அவர்கள் தடுக்கி விழுந்தாலோ அல்லது குண்டுங் குழியுமான இடங்களில் ஆட்டோவில் சென்றாலோ கூட, எலும்புகள் உடைந்து ஃப்ராக்சர் ஏற்படும் அபாயம் இருக்கிறது.

அதனால் எலும்புத் தேய்மானத்திற்கு அவர்கள் ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்டால், இத்தகைய பிரச்னைகளைத் தவிர்க்கலாம். (எலும்புகள் தேய்மானம் அடைவதற்கு முன்பே, டாக்டரின் ஆலோசனைப்படி கால்சியம் மாத்திரைகளையும் எடுத்துக்கொண்டால், இந்தப் பிரச்னைகளைத் தவிர்த்து விட முடியும்!...)

பெண்களின் பிரத்யேக ஹார்மோனான ஈஸ்ட்ரஜன், இருதய பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க ஒரு பாதுகாப்புக் கவசம் போல் செயல்பட்டு வந்தது. மெனோபாசுக்குப் பிறகு ஈஸ்ட்ரஜன் சுரப்பு நின்று விடுவதால், இதயம் மற்றும் இரத்தக் குழாய்களில் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மெனோபாஸ் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகளும் ஏற்படலாம். கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்!

quelle - kumutham health

Sonntag, Mai 09, 2004

மாதவிலக்கு... தயங்காம பேசுவோம்..

தீட்டு, வீட்டுக்கு தூரம், வீட்டு விலக்கு, மாதவிலக்கு, மாதவிடாய்...
பெண் உடலின் இயற்கையான நிகழ்வான உதிரப்போக்குக்குத்தான் எத்தனை பெயர்கள். அதை வைத்துத்தான் எத்தனை (மூட)நம்பிக்கைகள், பயங்கள்..

மாதவிலக்கு சமயத்தில் பெண்கள் வெளியில் சென்றால் விபத்து நடக்கும், குளித்தால் சளி பிடிக்கும், காயம் படும், கனமான பொருட்களை தூக்கக்கூடாது, பூக்களைத் தொட்டால் வாடிவிடும், வயல்வெளியில் சென்றால் பயிர் கருகிவிடும், தனி தட்டில்தான் சாப்பிட வேண்டும், தலைக்கு குளிக்காமல் வீட்டுக்குள் நடமாடக் கூடாது, சாப்பிட்ட மிச்சத்தை நாய்க்கு போட்டால் வயிறு வலிக்கும்... இப்படி பல கூடாதுகள்.

கிராமப்புறங்களில் சடங்கான பெண்ணை தனிக் குடிசையில் ஒதுக்கி வைப்பதோடு, குளிக்க வெளியே வருவதானால்கூட ஒரு இரும்புக் கம்பியை பாதுகாப்புக்கு கொடுத்தனுப்புவார்கள். பேய் அடித்துவிடுமாம்!
இந்த மாதிரியான நடவடிக்கைகள் மாதவிலக்கு பற்றி கசப்பான உணர்வை பெண்கள் மனதில் பதிய விடுகிறது. இதோடு வலி, எரிச்சல், சோர்வு, கசகசப்பு எல்லாம் சேர, 'ஏன்தான் பெண்ணாக பிறந்தோமோ' என்ற சலிப்பு தட்டுகிறது.

மாதவிலக்கு என்பது முழுக்க முழுக்க உடல்நலம், ஆரோக்கியம் தொடர்பானதே அன்றி இத்தகைய நம்பிக்கைகள் சம்பந்தப்பட்டதல்ல என்று புரிய வைக்கும் முயற்சியில்தான் இந்த இணைப்பை உருவாக்கியிருக்கிறோம்.

அந்த மூன்று நாட்களில் (சிலருக்கு கூடலாம், குறையலாம்) உண்டாகும் அத்தனை பிரச்னைகளை பற்றியும் பிரபல மகப்பேறு நிபுணர்கள் டாக்டர் ஞானசௌந்தரி, டாக்டர் தமிழிசை, டாக்டர் சுமதி, டாக்டர் ராஜசேகர் ஆகியோர் துணையோடு A to Z தெளிவு படுத்தி சுலபமான கேள்வி-பதில் வடிவில் வழங்கியிருக்கிறோம்.

கடைக்குப் போய் சானிட்டரி நாப்கின் கேட்டு வாங்கக் கூட அத்தனை தயங்கும் நாம் எப்படி குழந்தைகளுக்கு மாதவிலக்கு பற்றி புரியவைக்கப் போகிறோம்? நம் உடல் பற்றி, அதன் மாற்றங்கள், இயல்பு, பிரச்னைகள் பற்றி நாம்தான் தயங்காமல் பேசியாக வேண்டும். அதற்கான முதல் முயற்சியாக இதை வைத்துக் கொள்ளலாமே..

படித்துப் பயனடையும் தாய்மார்கள் மறக்காமல் மகளுக்காக இந்த இணைப்பை பத்திரப்படுத்துங்கள்.

பூப்பூக்கும் நேரம்
பூப்பெய்துதல் என்கிற பருவமடையும் கட்டம் எப்படிப்பட்டது? அது எவ்வாறு நிகழ்கிறது?
பூப்பெய்துதல் என்பது குழந்தைப் பருவத்திலிருந்து கன்னிப் பருவத்துக்கு மாறுவதற்கான இடைக்கால நிகழ்ச்சி.
முதல் மாற்றமாக மார்பகங்கள் வளர்ச்சியடைய ஆரம்பிக்கின்றன. 10-11 வயதில் (இப்போது 9 முதல் 13) இது துவங்கும். ஒரு வருடத்துக்குள் பிறப்புறுப்பு மீது முடிகள் முளைக்க ஆரம்பிக்கும். பின்பு உடல் வளர்ச்சியில் வேகம் தென்படும். அந்த வயது பெண் அதே வயது ஆணைக் காட்டிலும் வளர்ச்சி அடைந்தவளாக தெரிவாள். இடுப்பு எலும்பு வளர்ச்சி அதிக மாகும். பூசினாற்போல் சதைப் பற்று ஏற்படும். அக்குளில் முடி வளர்வதுதான் இந்த மாற்றங்களில் கடைசியாக நிகழ்வது. அதன்பின் இந்த மாற்றங்களின் வெளிப்பாடாக மாத விலக்கு நேர்கிறது.

உள்ளே என்ன நடக்கிறது
இவையெல்லாம் வெளியில் தெரியும் மாற்றங்கள். உடலின் உள்ளே என்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன?
பலரும் நினைப்பதுபோல் மாற்றங்கள் கர்ப்பப்பை மற்றும் சினைப்பையில் மட்டும் ஏற்படுவதில்லை.
மூளையில் இருந்து GNRH என்ற ஹார்மோன் சுரந்து அது பிட்யூட்டரி என்ற சுரப்பியை தூண்டி பின்பு அந்த சுரப்பியிலிருந்து வரும் சில ஹார்மோன்கள் கர்ப்பப்பை மீதும், சினைப்பையிலும் சில மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அதாவது மூளையில் ஒரு பகுதியிலிருந்து வரும் அந்த ஜி.என்.ஆர்.ஹெச் ஹார்மோன்தான் அத்தனை நிகழ்வுகளுக்கும் மூலகாரணம். இது குழந்தையாக இருக்கும்போதே சுரக்க ஆரம்பிக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகிறது. முதலில் அவ்வப்போது குறிப்பாக இரவு மட்டுமே சுரக்கும். பின்பு இடைவெளி குறைந்து அளவு அதிகமாகி 90 நிமிடத்துக்கு ஒரு முறை ரத்தத்தில் கலக்கும் அளவுக்கு சுரக்க ஆரம்பிக்கும். அப்போது சினைப்பை வேலை செய்ய ஆரம்பிக்கிறது. அதனால் முதல் மாத விலக்கு நிகழ்கிறது.

ஆரம்பத்தில் ஹார்மோன்கள் கலப்பதில் தாமதங்கள், இடையூறுகள் ஏற்படலாம். அதனால் தான் பூப்படைந்த பின்பும் சில மாதவிலக்கு சரியாக வராது. இந்த கால அளவு ஒரு வருடம் முதல் ஐந்து வருடமாகக்கூட இருக்கலாம். போகப் போக சரியாகிவிடும்.

ஐந்துக்குள் அம்மா..டி!
இன்ன வயதுக்குள் பூப்படைய வேண்டும் என்று இருக்கிறதா?
18 வயதில்கூட ஏற்படாவிட்டால் டாக்டரை பார்க்க வேண்டும். நான்கு வயதில் பூப்படைந்து ஐந்து வயதில் கருத்தரித்த குழந்தைகள் கூட உண்டு. அதெல்லாம் அபூர்வம். 7 முதல் 9 வயதுக்குள் பூப்படைதலை 'விரைவுபடுத்தப்பட்ட பூப்பெய்தல்' என்கிறோம். அதிக உடல் வளர்ச்சியால் அல்லது பரம்பரை காரணமாக இது நிகழலாம். மிகச்சிறிய வயதில் பூப்படைந்தாலும் அதிகப்படியான ஹார்மோன் சுரந்தால் மட்டுமே மாதா மாதம் விலக்காக முடியும். சிறு வயதில் பூப்படைந்தால் டாக்டரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

சரியான சைக்கிள் எது? பாதுகாப்பானது எது?
எத்தனை நாட்களுக்கு ஒரு முறை விலக்காவதை ஒழுங்கான மாதவிலக்கு என்று சொல்லலாம்?
அதை சுழற்சி என்போம். சைக்கிள். சாதாரணமாக 28 நாட்கள் ஒரு சுழற்சி. சிலருக்கு இரண்டு, மூன்று நாட்கள் குறைவாக அல்லது கூடுதலாக வரலாம். அது தப்பில்லை.

இந்த சுழற்சிக்குள் என்னென்ன நடக்கிறது?
அந்த 28 நாட்களில் கருத்தரிக்கக் கூடிய, உறவுக்கு பாதுகாப்பான நாட்கள் எவை என்று எப்படி வகைப்படுத்துவது?
அந்த 28 நாட்களை பகுதிகளாக பிரித்துக் கொள்ளலாம்.
1 முதல் 5 மாதவிலக்கு நாட்கள்.
5 முதல் 10 ஆரம்ப நாட்கள்.
அப்போது ஈஸ்ட்ரோஜன் அதிகம் சுரக்கும். கருமுட்டை வளர ஆரம்பிக்கும். கர்ப்பப்பையில் உள்ள நடு ஜவ்வும் வளர ஆரம்பிக்கும்.
10 முதல் 14 நாட்கள்
அதே வளர்ச்சி வேகமாகி 14-ம் நாள் குமிழ் உடைந்து கரு வெளிப்படும். எனவே அதுதான் கருத்தரிக்க உகந்த காலகட்டம்.
14 முதல் 28-வது நாள் வரைபின்பகுதி நாட்கள்.
ப்ரொஜெஸ்ட்ரோன் என்ற ஹார்மோன் அதிகமாக சுரக்கும். கர்ப்பப்பையின் உள்ளே ஜவ்வு அதிக தடிமனாக தென்படும். (ஒருவேளை கருத்தரித்தால் அதைத் தாங்கிக் கொள்ளும் பக்குவத்தில் மெத்தை போல!)
கரு உருவாகவில்லை என்றால் நடு ஜவ்வுக்கு ரத்த ஓட்டம் குறையும். ஹார்மோன் அளவும் குறைந்துவிடும்.
தண்ணீரும் உரமும் போட்டபோது வளரும் பயிர் அந்த இரண்டும் இல்லை யென்றால் கருகுவதுபோல கர்ப்பப்பை யில் வளர்ந்திருக்கும் நடுசதை (Endometrium) சுருங்கி, அந்த சதையும் ரத்தமும் சில மாற்றங்கள் ஏற்பட்டு உதிரப் போக் காக வெளிவரும். மறுபடியும் ஐந்து நாள் கழித்து இதே சுழற்சி தொடங்கும்,.

லிமிட் என்று உண்டா?
மாதவிலக்கு எத்தனை நாட்கள் நீடிக்கலாம்?
3 முதல் 6 நாட்கள் இருக்கலாம். 3க்கு குறைவாக அல்லது 6க்கு மேல் இருக்குமானால் அது அசாதாரணம்.

எவ்வளவு ரத்தம் வெளியேறுவதை நார்மல் எனலாம்?
சுமார் 50 மில்லி லிட்டர். குறைந்தது 20 அதிகபட்சம் 80 என இந்த அளவும் வேறுபடலாம். அப்போது தினமும் அரை மில்லிகிராம் முதல் ஒரு மி.கி. வரை இரும்புச் சத்தும் வெளியேறுகிறது. உதிரப்போக்கு 80 மில்லிக்கு மேல் இருந்தால் இரும்புச்சத்து மாத்திரை சாப்பிடுவது நல்லது.

ரத்தம் கட்டியாக வெளியேறுவது ஏன்?
அது அதிகப்படியான உதிரம் அல்லது திரவநிலை அடைவதற்கு முன்பே வெளிப்பட்ட உதிரம் என்றும் கூறலாம்.
கம்ப்ளீட் பிச்சர் இதுதான்

இந்த காலகட்டத்தில் உள்ளே வேறென்ன நடக்கிறது?.
ஒவ்வொரு சுழற்சியிலும் சினைப்பையில் சுமார் 30 குமிழ்கள் உருவாக ஆரம்பித்து, பின்பு ஹார்மோன்கள் உந்துதலால் ஒரு குமிழ் பெரிதாகி, அதனுள் கருமுட்டை உற்பத்தியாகி 14-ம் நாள் ஹார்மோன்கள் உதவியால் அந்த குமிழ் வெடித்து கரு வெளிவந்து விந்துவை எதிர் கொள்ள தயாராகிறது.

மாதவிலக்கு வருமுன் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன?
மார்பகம் பாரமாக தோன்றும், பெரிதாவது போல் தெரியும், வலி ஏற்படும். இவை மாதவிலக்கு ஏற்பட 2 அல்லது 4 நாள் முன் ஏற்படும். இது சகஜம். சிலருக்கு இந்த அறிகுறிகள் சற்று அதிக மாக இருக்கலாம்.
வயிறு 14-ம் நாள் கருமுட்டை வெளிவரும் நாளில் வலி இருக்கலாம். வருமுன் வயிறு உப்பியிருப்பது போல கனமாக உணரலாம்.
எடை உடல், நீர் கோர்த்தது போல, எடை அதிகமானது போல தோன்றும்.
கர்ப்பப்பை வாயில் 14-ம் நாளிலிருந்து வளவள என்ற திரவம் சுரப்பது அதிகமாக இருக்கும்.
இந்த மாற்றங்களை Pre Menstural Syndrome என்பார்கள். தலைவலி, கால் வலி மற்றும் வீக்கம், அடிவயிற்றில் வலி, அதிக பசி, அலர்ஜி/சளி ஏற்படுவது, பருக்கள், குடல் உபாதை, முதுகு வலி, படபடப்பு, அரிப்பு, அதிக வியர்வை போன்ற மாற்றங்களும் நேரலாம்.

மனதிலும் மாற்றங்கள்
உடல் தவிர மன நிலையிலும் மாற்றங்கள் ஏற்படும்தானே?
நிச்சயமாக! கவலை, பதற்றம், ஆர்வமின்மை, ஈடுபாடின்மை, அசதி, கோபம், டென்ஷன், எரிச்சல், தூக்க மின்மை, குடும்ப வாழ்க்கை பாதுகாப்பற்றதாக உணர்தல், தற்கொலை எண்ணம், தனிமை விரும்புதல், தாழ்வு மனப்பான்மை போன்ற உணர்வுகள். இந்த பிரச்னைகளுக்கு காரணம் இது தான் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. இவை ஒரு சுழற்சியின் கடைசி நாட்கள் அல்லது மாதவிலக்கு வருவதற்கு முந்தைய நாட்களில் ஏற்படுவதால் ஹார்மோன் பாதிப்பாக இருக்கலாம், பி-6 என்ற வைட்டமின் பற்றாக் குறையாக இருக்கலாம், தைராய்டு போன்ற நாளமில்லா சுரப்பிகளின் தாக்கம், டசுச்நூஹஷபீகூபி, டசுச்சூபீச்யுநூஹபிக்ஷகூபிசூ போன்ற ஹார்மோன்களின் குறைபாடு காரணமாகலாம். அதிகப்படி நீர் சுரப்பதும், சர்க்கரை அளவு குறைவதும்கூட காரணங்களாக இருக்கலாம்.

இதற்கு என்ன சிகிச்சை எடுத்துக் கொள்வது?
தனிப்பட்ட சிகிச்சை கிடையாது.. வைட்டமின்கள், மனநல ஆலோசனை, உடற்பயிற்சிகள் மூலம் இந்த நிலையை கட்டுப்படுத்தலாம்.

பிரச்னைகளில் இத்தனை வகை
பொதுவாக என்ன மாதிரியான மாத விலக்கு பிரச்னைகள் உள்ளன?
1. குறைந்த அளவு உதிரப்போக்கு 2. உதிரப்போக்கே இல்லாமை. 3. அதிகப்படியான உதிரப் போக்கு 4. சுழற்சி முறையில் மாறுதல் 5.வலியுடன் கூடிய உதிரப்போக்கு.. இப்படி பல.
குறைந்த அளவு உதிரப்போக்கு
இது மாதவிலக்கு சுழற்சியில் எந்த நிலையில் குறை இருந்தாலும் ஏற்படலாம். மிக முக்கியமான காரணங்களில் ஒன்று அதிக மன அழுத்தத்தின் காரணமாக மூளையில் ஒரு பகுதியான ஹைபோதலாமஸ் பாதிக்கப் படுவது. உதாரணத்துக்கு வீட்டிலோ, பள்ளியிலோ அல்லது அலுவலகத்திலோ ஏதாவது அதிக மன அழுத்தத்துக்கு ஆட்பட்டிருக்கும்போது, உடல் எடை தடாலென்று குறையும்போது, உடல் கொழுப்பு பெரிதும் குறையும்போது (உ-ம்: அதிக உடற்பயிற்சி, பயிற்சியாளர்கள் மற்றும் வீராங்கனைகள் தீவிர பயிற்சி செய்வது) எண்டார்பின் என்ற ஹார்மோன் சுரந்து அது சென்று ஹைபோதலாமஸின் செயல்பாட்டை தடுக்கலாம்.

தைராய்டு சுரப்பிகளின் செயல்பாட்டில் ஏதாவது கோளாறு இருந்தாலும், ரத்த சோகை, வேறு நோய் இருந்தாலும் (உ-ம்: சிறுநீரக வியாதி, இதய வியாதி போன்றவற்றினாலும் உதிரப்போக்கு குறையலாம்.
சினைப்பையில் PCOD (Poly Cystic Ovarian Disease) என்ற நிலை இருந்தாலும் மாதவிலக்கு வராமல் அல்லது மிகக்குறைந்த அளவில் இருக்கலாம். சில நேரங்களில் மிகச் சிறிய வயதி லேயே சினைப்பை செயலிழந்து விடுவதாலும் மாதவிலக்கு நின்றுவிடலாம்.

பரிசோதனைகள் என்ன?
இப்படி இருப்பவர்கள் என்னென்ன பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்?
முதலில் முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஈஸ்ட் ரோஜன், ப்ரொஜெஸ்ட்ரோன் FSH & LH போன்ற ஹார்மோன்கள் அளவை கணக்கிட வேண்டும். ஸ்கேன் செய்து கர்ப்பப்பை, சினைப்பை சரியான அளவில் சரியான வளர்ச்சி அடைந்துள்ளதா என்று பார்க்க வேண்டும். தேவைப்பட்டால் மருத்துவர் D & C செய்து கர்ப்பப்பையின் உள்சதையை எடுத்தும் பரிசோதனை செய்வார்.

எல்லாமே லேட்டானால்..?
சில குழந்தைகள் 16 அல்லது 18 வயதில்தான் பருவம் அடைகிறார்கள். இதனால் பிள்ளைப்பேறு பாதிக்குமா? சிறு வயதிலேயே பூப்பெய்திய பெண்களுக்கு 50வயதை தாண்டிதான் விலக்கு நிற்குமா?
உடல்வாகு, உணவு, வளர்கிற சூழ்நிலை, குடும்ப பின்னணி ஆகியவற்றை பொறுத்து பூப்பெய்தும் வயது மாறுபடலாம். சிலர் 9 அல்லது 10 வயதில் பூப்பெய்த உடல்வாகுதான் காரணம் என்றாலும், சில சமயம் ஹார்மோன்கள் மாறுபாட்டாலும் இருக்கலாம். தாமதமாக பூப்பெய்துவதால் பிள்ளைப் பேறுக்கு எந்த பாதகமும் ஏற்படுவதில்லை. பூப் பெய்தும் வயதுக்கும் மாதவிலக்கு நிற்கும் வயதுக்கும் சம்பந்தம் இல்லை.

டிஸ்சார்ஜ் 10 நாள் இருப்பது
சிலருக்கு உதிரப்போக்கு 10நாள் வரை இருந்து தொல்லை கொடுக்கிறதே... ஏன்?
பெரிய மனுசியான முதலிரண்டு ஆண்டுகளில் மாதவிலக்கின் போக்கில் மாறுதல் இருப்பது இயற்கை. பொதுவாக 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிலக்கு வருவதும், உதிரப்போக்கு சராசரி 5 நாள் இருப்பதும் இயற்கைதான். உடல் வளர்ச்சியின்போது சுரக்கும் ஹார்மோன்களும் பாலின உறுப்புகளின் வளர்ச்சியும் இணைந்து செயலாற்றுகிற வரை மாதவிலக்கின் போக்கில் மாற்றங்கள் இருக்கலாம். சில பெண்களுக்கு பூப்புக்கு அடுத்த மாதவிலக்கு பல மாதங்கள் கழித்தோ அல்லது ஓராண்டு கழித்தோகூட ஏற்படலாம். இது இரண்டு ஆண்டுகளில் சரியாகிவிடும். ரத்தப் போக்கு 8 அல்லது 10 நாளுக்கு அதிகமாக இருந்தால் ரத்தசோகை ஏற்படும். மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். பூப்புக்குப் பின் ஒரு மாதத்துக்குள் பலமுறை வந்தாலும், பல மாதங்களுக்கு ஒருமுறை வந்தாலும் பூப்பெய்திய இரண்டு ஆண்டுகளுக்குள் ஒழுங்கான சுழற்சிக்குள் வந்துவிடும்.

கல்யாணம் செய்வதால் பலன்
சில பெண்கள் ஆரோக்யமாக, உடல் வளர்ச்சி சரியாக இருந்தாலும் பூப்பெய்தாமலே இருந்துவிடுகிறார்களே, அதற்கு காரணம் என்ன? திருமணமானால் சரியாகி விடும் என்று சொல்லி அவர்களுக்கு கல்யாணம் செய்து வைப்பது சரியா? அவர்களுக்கு குழந்தை பிறக்குமா? இதை அறிய என்ன சோதனை செய்யவேண்டும்?
18 வயதை தாண்டியும் பூப்பெய்தவில்லை என்றால், கண்டிப்பாக பரிசோதனை செய்யவேண்டும். பிட்யூட்டரி சுரப்பி, தைராய்டு சுரப்பி போன்றவை சுரக்கும் ஹார்மோன்கள் ஒன்றுக்கொன்று தொடர்புகொண்டு, கருமுட்டைகளை உள்ளடக்கிய சினைப்பை மற்றும் கர்ப்பப்பை ஆகியவற்றில் மாற்றம் ஏற்படுத்துவதால், மாதவிலக்கு தோன்றுகிறது. அது தொடங்கவே இல்லை என்றால், பரிசோதனை அவசியம்.
நாளமில்லா சுரப்பிகளில் பாதிப்பு இருப்பின் அவற்றின் காரணங்களை கண்டறிந்து சிகிச்சை பெறவேண்டும். தாயின் வயிற்றுக்குள் பெண் கரு உருவாகும்போதே அதன் சினைப்பை தொடக்கநிலை கரு முட்டைகளை உள்ளடக்கிக் கொண்டு வளர்கிறது. இது பிறவியமைப்பில் வளர்ச்சி பெறாமல் வரிக்கீற்று சினைப்பையாக (Streak Ovary) அமைந்துவிட்டால் செயல்படாமல் போய்விடும், இதனால் பூப்பெய்துவது இல்லை.
இப்பெண்கள் ஹார்மோன் மாத்திரைகளை சாப்பிட்டால் மாதவிலக்கு தோன்றும். தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் 21 நாட்களுக்கு மாத்திரை உட்கொண்டால்தான் மாதவிலக்கு மாதந்தோறும் வரும். இவர்க ளுக்கு குழந்தை பிறப்பது அரிது. சில பெண்களுக்கு கர்ப்பப்பையே இல்லாமலும் போகலாம்.
ஆனாலும் இவர்கள் தாம்பத்ய உறவு கொள்ள இயலும். கர்ப்பப்பை இல்லாமல், யோனிக் குழாயும் இல்லாமல் அந்த இடம் சிறு குழியாக மட்டுமே இருந்தால் பிளாஸ்டிக் சர்ஜரி என்னும் வடிவமைப்பு ஆபரேஷன் செய்துகொண்டால் தாம்பத்ய உறவில் சிக்கல் இருக்காது.
காசநோய், இளம்பிராய நீரிழிவு நோய் (Juvenile Diabetes) ஆகியவற்றால் கர்ப்பப் பை பாதிக்கப்பட்டிருந்தாலும் மாதவிலக்கு வராது. துளையற்ற கன்னிப்படலம் (Imperforate Hymen), யோனி குழாய் அடைப்பு இருந்தாலும் உதிரம் வெளிவர இயலாமல் அடைபடும்.
இவ்வாறு பூப்பெய்தியும் சூதகம் (Pelvis) மறைந்திருந்து மாத விலக்கிற்கு தடையேற்படுத்துவதை மறை சூதகம் (Cryptorchidism) என்று கூறுவர். ஆபரேஷன் செய்து தடையை அகற்றி வழி செய்தால் இவர்கள் பூப்பெய்தலாம். குழந்தை பிறக்கவும் வாய்ப்புண்டு.

மாதாமாதம் விலக்கு முறையாக வந்தாலும், உதிரப்போக்கு ஒரு நாள் கூட முழுமையாக இல்லாமல் சில நாள் சிறுதுளிகளாக மட்டுமே வந்தால் அதனால் குழந்தை பிறக்காமல் போகுமா?
மாதவிலக்கு ஒழுங்காக வந்து, பாலின உறுப்புகளின் வளர்ச்சி சரியாக இருந்து, ஹார்மோன் கோளாறுகளும் இல்லையென்றால் அரை வாரம், அரை நாள், அரை மணி நேரம் என்று எப்படி வந்தாலும் கவலைப்பட தேவையில்லை.

குறைந்த அளவு உதிரப்போக்கு உள்ளவர்கள் அதனால்தான் உடல் பருமனாகிறது என்றும், குழந்தை பிறக்காது என்றும் நினைக்கின்றனர். இரண்டுமே தவறு. பருமனாக இருப்பவர்களுக்கு, உடலில் உள்ள கொழுப்புச் சத்தால்தான் (Obesity) மாதவிலக்கு சொற்பமாக இருக்கிறது. எடையைக் குறைத்தாலே பிரச்னை தீர்ந்துவிடும்.
கர்ப்பப்பை குழாய் அடைப்பில்லை. கருமுட்டை வெடித்து வெளி வருவதில் பிரச்னை இல்லை என்றால் குறைந்த உதிரப்போக்கு, குழந்தை பிறக்க தடையாக இருக்காது.

ஆரோக்யமாக இருந்தாலும் சிலருக்கு பூப்பெய்திய நாளிலிருந்தே இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறைதான் மாதவிலக்கு வருகிறது. இவர்கள் கர்ப்பம் தரிக்க இயலுமா? வேறு ஏதேனும் தொல்லைகள் ஏற்படுமா?
மாதா மாதம் விலக்கு வருபவர்களுக்கு ஆண்டுக்கு 12 முறை கருத்தரிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது என்றால், இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாதவிலக்கு வருபவர்களுக்கு அந்த வாய்ப்பு 4 அல்லது 6 முறைதான் கிடைக்கும். அதுதான் வித்தியாசம். வேறு தொல்லைகள் கிடையாது.

முதலில் மாதவிலக்கு சரியாக வந்து,. திருமணத்துக்குப் பின் தள்ளித் தள்ளி வர ஆரம்பித்து, பின்னர் மூன்று மாதத்துக்கு ஒரு முறை அதுவும் மாத்திரை சாப்பிட்டால்தான் வருகிறது என்றால் அதற்கு காரணம் என்ன?
ஹார்மோன் குறைபாடுகளால் இவ்வாறு ஏற்படலாம். சோதனை மூலம் அறிந்து சிகிச்சையால் சரிசெய்யலாம். சினைப்பை மாதம் ஒரு சினை முட்டையை விடுவிப்பது தடை பட்டாலும் சினைப்பையில் சிறுசிறு நீர்மக் கட்டிகள் தோன்றிவிடுகின்றன. இதை 'பலநீர்மக் கோளகக் கருவணு வகம்‘ (PCO - Poly Cystic Ovary) என்று கூறுவர். ஸ்கேன் மூலம் கண்டுபிடித்து விடலாம்.
சினைமுட்டை விடுவிப்பை தூண்டும் (Ovulation Induction) சிகிச்சையே போதுமானது. அதற்கென உள்ள மருந்துகளை வருடக்கணக்கில் சாப்பிடுவது தவறு. நீரிழிவு நோய்க்கான மெட்ஃபார்மியா (Metformia) மாத்திரைகளாலேயே சரிசெய்ய இயலும்.
நீரிழிவு, காசநோய், ரத்த சோகை போன்றவை அல்லது கருத்தடை மாத்திரைகளை தொடர்ந்து பல ஆண்டுகள் சாப்பிட்டு நிறுத்தினாலும் இவ்வாறு நேரிடலாம்.

தள்ளிப்போக மாத்திரை போடுவது
தொடர்ந்து சரியாக மாதவிலக்கு வரும் போது எங்காவது ஊருக்கு போகவோ, பண்டிகை வருகிறது என்றோ மாத்திரை போட்டு மாதவிலக்கை தள்ளிப் போடுவது இன்று பலருக்கு பழக்கமாகிவிட்டது.. இது சரியா? இதனால் உடம்புக்கு கெடுதலா?
Primol-I போன்ற மாத்திரைகளால் மாதவிலக்கை விருப்பப்படி மாற்றிக் கொள்ளலாம். அத்யாவசிய காரணத்துக்காக எப்போதாவது ஒரு முறை அப்படி செய்யலாம். அடிக்கடி இந்த மாத்திரைகளை சாப்பிடுவது நல்லதல்ல. ஹார்மோன் சீர்கேடுகளை தோற்றுவிக்கும்.

கருத்தடை மாத்திரை சாப்பிடுவதால் மாதவிலக்கு சமயத்தில் வலி வருவதில்லை என்பது உண்மையா?
உண்மைதான். ரத்த சோகையிலிருந்தும் அது மீட்கிறது. இம்மாத்திரைகள் அதிக உதிரப் போக்கை குறைக்கும் மருந்தாகவும் உபயோகமாகிறது.

மாதவிலக்கு சரியாக வந்தபோதிலும், இடைப்பட்ட ஒரு நாளில் வலியுடன் கூடிய சிறு துளி ரத்தப்போக்கு ஏற்பட்டு மறைந்துவிடுகிறது. பின்னர் எப்போதும் போல் வரவேண்டிய நாளில் வந்துவிடுகிறது. இது ஏன்? உடம்புக்கு கெடுதலா?
சில பெண்களுக்கு மாதவிலக்கு தோன்றிய 14 அல்லது 16-வது நாளில் இவ்வாறு ஏற்படும். இது சினைப்பையில் இருந்து சினைமுட்டை விடும் நாளில் ஏற்படுகிறது. இதனால் எவ்வித பிரச்னையும் இல்லை. உடம்புக்கு கெடுதல் கிடையாது.

கர்ப்பப்பை ஆபரேஷனின் அவசியம்
30 வயதுக்கு மேல் ரத்தப்போக்கு அதிகமாக இருந்தால், ஆபரேஷன் செய்து கர்ப்பப்பையை அகற்றுவது தான் சரியான வழியா?
சாதாரண கர்ப்பப்பை கட்டிகளாக இருந்து தொந்தரவு இருந்தால், ஆபரேஷன் செய்வது நல்லது. கட்டிகள் இல்லை யென்றால் D&C செய்து பார்க்க வேண்டும். இந்த வயதில்தான் புற்றுநோய் தோன்றும். பரிசோதனை அவசியம். எல்லாப் பெண்களுக்கும் கர்ப்பப்பை கழுத்து புற்றுநோய் (Cervical Cancer), கர்பப்பை கழுத்து உள்வரி ஜவ்வு புற்றுநோய் (Endometrial Carcinoma) ஆகியவை வரக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு. எனவே இந்த வயதில் அதிக உதிரப்போக்கு இருந்தால், அனைத்துப் பரிசோதனைகளையும் கண்டிப்பாக செய்ய வேண்டும். வருமுன் காப்பது நல்லது.

வெள்ளைப்படுதல்
வெள்ளைப்படுதலும் அதனுடன் ரத்தப்போக்கும் ஏற்பட காரணம் என்ன? இது நோயின் வெளிப்பாடா? என்ன சிகிச்சை பெற வேண்டும்?
பருவ மாற்ற காலத்தில் மாத விலக்குக்கு முன்னும் பின்னும் சினைமுட்டை விடுபடும்போதும், கர்ப்ப காலத்திலும் ஹார்மோன்களின் சுரப்பான வெள்ளைப் படுதல் இருக்கலாம். இது தவறில்லை. ஆனால், வெள்ளைப்படுதல் அதிகரித்தோ, நாற்றமுடனோ, உதிரம் கலந்தோ இருந்தால் ஆபத்தான விஷயம். உடனடியாக பரிசோதித்து சிகிச்சை பெறவேண்டும்.

மாற்று சிகிச்சை வழிமுறைகள்
கர்ப்பப்பை கட்டியினால் உதிரப்போக்கு அதிகமாகுமா? கர்ப்பப்பையை எடுக்க நேரிடுமா? அதற்கு மாற்றாக வேறு சிகிச்சை உள்ளதா?
பொதுவாக 50 முதல் 60 சதவிகிதத்தினருக்கு மிகச் சிறிய அளவிலிருந்து (0.5-1 cm) பெரிய அளவு வரை பல்வேறு கட்டிகளாக தோன்றுவது நார்க்கழலை கட்டி (Fibroid) எனப்படும். இதனால் அதீத உதிரப்போக்கு (Menorrhagia), சூதக வலி (Dysmenorrhoea) ஆகிய தொல்லைகள் இருந்தால், முதலில் D&C செய்து உள்வரி ஜவ்வின் தன்மையை கண்டறிய வேண்டும். பின்பு மாத்திரைகளால் உதிரப்போக்கையும் வலியையும் குறைக்கலாம். அதையும் மீறி போகும் உதிரப்போக்குக்கு, அவரவர் வயதுக்கேற்றவாறு சிகிச்சை அளிக்க வேண்டிவரும்.
1. Myomectomy - கட்டி அகற்றும் அறுவை (இது குழந்தை வேண்டுபவருக்கு பொருந்தும்).
2. Hysterctomy - கர்ப்பப்பை அகற்றுபவை (40 வயது தாண்டியவருக்கு).
சமீபகால சிகிச்சை முறைகளான
1. Hysteroscopic Myomectomy
2. Uterine Artery Embolisation ஆகியவை சிலருக்கு பொருந்தும்.

மாதவிலக்கு முடிவடையும் காலத்தில் (மெனோ பாஸ்) உதிரப்போக்கு அதிகமாக இருப்பது சகஜமா?
இல்லை. அது தவறான கருத்து. மாதவிலக்கு முற்றுப்பருவத்தில் உதிரப்போக்கு அதிகம் இருந்தாலோ, அதிக நாட்கள் நீடித்தாலோ, குறுகிய காலத்துக்கு ஒரு முறை வந்தாலோ, கர்ப்பப்பை கட்டிகள், கர்ப்பப்பையில் புற்றுநோய் ஆகியவையாக இருக்கக்கூடும். 45 வயதுக்கு மேல் 52 வயதுக்குள்ளாக பெரும்பாலும் மாதவிலக்கு நின்று விடுகிறது. சிலருக்கு திடீரென நின்றுவிடும். பலருக்கு அளவில் குறைந்தோ சில மாதங்கள் தள்ளி வந்தோ நிற்கிறது. இதற்கெல்லாம் மாறாக எந்தவித உதிரப்போக்கு பிரச்னையாக இருந்தாலும் சோதனை செய்வது அவசியம்.

இனி, வாசகிகளின் சில முக்கிய கேள்விகளும் டாக்டர் பதில்களும்


பேப் ஸ்மியர் டெஸ்ட்
எனக்கு வயது 34. இரண்டு குழந்தைகள். சமீபகாலமாக உடலுறவு முடிந்தபின் மாதவிலக்கு போன்று ரத்தப்போக்கு ஏற்படுகிறது. டாக்டரிடம் சென்றபோது 'கர்ப்பப் பையில் கோளாறு இருக்கலாம். பேப் ஸ்மியர் டெஸ்ட் எடுக்க வேண்டும்' என்றார். அப்புறம் பார்க்கலாம் என்று வந்துவிட்டேன். பேப் ஸ்மியர் டெஸ்ட் என்றால் என்ன? உதிரப்போக்கு பிரச்னைக்கு கட்டாயம் இந்த பரிசோதனையை செய்யத்தான் வேண்டுமா?
பேப் ஸ்மியர் என்பது கர்ப்பப்பை கழுத்து, கர்ப்பப்பைவாய் புற்று நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கான பரிசோதனை. மிகச் சுலபமாக, 10 நிமிடத்தில் செய்துவிடலாம். சோதனை செய்யவிருக்கும் இடங்களில் மருந்தோ, தண்ணீரோ பட்டிருக்கக் கூடாது. மாத விலக்கின்போது இந்த சோதனையை செய்யக்கூடாது. ஐஸ்க்ரீம் குச்சி போன்ற ஒன்றை கர்ப்பப்பை கழுத்தில் லேசாக தடவினால் அங்குள்ள திசுக்கள் அதில் ஒட்டிக்கொள்ளும். அதனை ஒரு கண்ணாடித் தட்டில் தடவி மருந்திட்டு மைக்ரோஸ்கோப் மூலம் பார்த்தால் புற்றுநோய் வர வாய்ப்புள்ள திசுக்கள் உள்ளதா, புற்றுநோய்க்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதா என்பதை துல்லியமாக சொல்லலாம். இவ்வளவு எளிதான ஒரு பரிசோதனை முறை இருந்தும் கர்ப்பப்பைவாய் புற்றுநோய் முற்றிய நிலையில் வரும் பெண்களின் எண்ணிக்கைதான் அதிகம்! 30 வயது தாண்டியவர்கள் இந்த டெஸ்ட்டை வருடம் ஒரு முறை செய்து கொள்வது நல்லது. உடலுறவுக்குப் பின் உதிரம் பட்டால் அது கர்ப்பபை புற்று நோயின் ஆரம்பகால அறிகுறியாக இருக்கலாம். அத்தகைய ரத்தப் போக்கு ஏற்படுவது தொடர்ந்தால் கட்டாயம் இந்த சோதனை செய்தாக வேண்டும்.

பிறப்புறுப்பு சுத்தம்
எனக்கு திருமணமாகி 15 நாள் ஆகிறது. மாதவிலக்காகி 20 நாளுக்குள் மீண்டும் ரத்தப்போக்கு விட்டுவிட்டு வந்து கொண்டே இருக்கிறது. இதுவரை இப்படி ஆனதில்லை. பயமாயிருக்கிறது. என்ன செய்ய வேண்டும்? இது மாதவிலக்கு ரத்தப்போக்காக இருக்காது. உடலுறவால் ஏற்பட்ட காயம், அந்தக் காயத்தின் மீது கிருமிகளின் தாக்குதலால் (Infection) இருக்கலாம். பரிசோதித்து மருந்து களிம்பு மூலம் குணப்படுத்தலாம். நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம். உடை சுத்தமாக இருக்கவேண்டும். பிறப்புறுப்பை தூய்மையாக வைத்துக் கொள்வதும் அவசியம். உடலுறவுக்குப் பின் அவசியம் சுத்தம் செய்யுங்கள்.

2 ஆண்டுக்கு ஒரு முறை டெஸ்ட்
மாதவிலக்கு தொந்தரவுக்காக டாக்டரை பார்த்தேன். பேப் ஸ்மியர் டெஸ்ட் செய்து அதில் வித்தியாசம் இருந்ததால் Colposcopy and Biopsy செய்து கொள்ள சொல்கிறார். அவசியமா?
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் (Cervical Cancer) வருமுன், அதில் ஏற்படும் வித்தியாசங்களை அறிய பேப் ஸ்மியர் பரிசோதனை உதவுகிறது. அதன் பிறகு Colposcopy & Biopsy அவசியமாகிறது. பல மடங்கு பெரிது படுத்தி காண்பிக்கும் லென்ஸ் பொருத்திய Colposcope இல் பார்ப்பதால் மிகச் சிறிய மாற்றத்தையும் ஆராய முடியும். அதிலிருந்து சதையை எடுத்து பரிசோதிப்பது (Biopsy) எந்த வகையான சிகிச்சை தேவைப்படும் என்பதை தீர்மானிக்க உதவும். ஒவ்வொருவரும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இதை செய்துகொள்வது நோயை தடுக்க உதவும்.

மார்பில் பால் போல் திரவம்
எனக்கு திருமணமாகி மூன்று வருடம் ஆகிறது. குழந்தை இல்லை. கடந்த ஒரு வருடமாக மாதவிலக்கே வருவதில்லை. அடிக்கடி மார்பிலிருந்து பால் போன்ற திரவம் கசிகிறது. இது எதனால் ஏற்படுகிறது? இதற்கும் கருத்தரிக்காமல் இருப்பதற்கும் சம்பந்தம் உண்டா?
ப்ரோலேக்டீன் என்ற ஹார்மோனின் அளவு அதிகரிப்பதே இதற்கு காரணம். இந்த ஹார்மோன், மார்பக ரத்த நாளங்களில் வேலை செய்து பால் சுரக்க வைக்கிறது. ப்ரோலேக்டீன் அதிகம் இருந்தால் அது மாதவிலக்கு சுழற்சியை பாதிக்கும். சினைப்பையில் சினை முட்டைக் குமிழ்கள் ஏற்படாதபடி இவை தடுக்கின்றன. அதனால் மாதவிலக்கும் வராது. கரு உருவாகாததற்கு இதுவும் முக்கிய காரணம். ப்ரோலேக்டின் அளவை குறைக்க மருந்துகள் உள்ளன. டாக்டர் ஆலோசனைப்படி சாப்பிடுங்கள்.

குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன்
என் வயது 48. மூன்று குழந்தைகள் உள்ளன. குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டேன். இரண்டு மாதங்களாக விட்டுவிட்டு மாதவிலக்கு வந்து கொண்டிருக்கிறது. இது புற்றுநோய்க்கு அறிகுறியோ என்று பயமாக இருக்கிறது.
இந்த வயதில் சினைப்பையில் கரு முட்டை உற்பத்தி குறைந்துவிடும். தேவையான ஹார்மோன் இல்லாததால் விட்டுவிட்டு விலக்காகலாம். ஆனால் கர்ப்பப்பையில் கட்டி, புற்று போன்றவை இருக்கிறதா என்பதை Pap smear /scan, Endometrial Biopsy ஆகிய சோதனைகள் மூலம் அறிந்து உடனடி சிகிச்சை மூலம் குணப்படுத் தலாம்.

மார்பகத்தில் மாற்றங்கள்
எனக்கு மாதவிலக்கு வருமுன் மார்பகம் பருத்து குத்துவலி எடுக்கிறது. விலக்கானதும் சரியாகி விடுகிறது. எதனால் இப்படி ஆகிறது? சிகிச்சையில் குணமாகுமா?
மாதவிலக்கின்போது மார்பகத்தில் மாற்றம் ஏற்படுவது சகஜம். பெரிதாவதும் கல்போல கடினமாவதும், கை வைத்துப் பார்த்தால் உள்ளே சிறுசிறு கோளங்கள் இருப்பது போல ஒரு உணர்வும் வலியும் கூட ஏற்படும். ஈஸ்ட்ரோஜன், ப்ரொ ஜெஸ்ட்ரோன் என்ற ஹார்மோன்கள் மாத விலக்குக்கு 3-4 நாளுக்குமுன் ரத்தத்தில் அதிக அளவு காணப்படும். அவை மார்பகத்துக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரித்து அதன் மூலம் உடலில் நீர் கோர்ப்பதால் இந்த மாற்றங்கள் ஏற்படுகின்றன. மாதவிலக்கு ஏற்பட்டவுடன் இந்த ஹார்மோன்களின் அளவு குறைவதால் மார்பகம் பழைய நிலைக்கு வந்துவிடும். சில சமயம் பழைய நிலையை அடைய 7 நாள் கூட ஆகலாம். இதற்கு சிகிச்சை என்று தனியாக எதுவும் தேவையில்லை. வலி அதிகமானால் வலி நிவாரணிகளை நாடலாம்.

ஊசி மூலம் தடுப்பது
டெபோ ப்ரோவேரா (DEPO-PROVERA) பற்றி கேள்விப்பட்டேன். இந்த ஊசியை போட்டுக் கொண்டால் மாதவிலக்கே வராது என்கிறார்களே, இப்படி ஊசி மூலம் மாதவிலக்கை நிறுத்தி வைப்பதால் உடல் நலத்துக்கு பாதகமில்லையா? எல்லோரும் இந்த ஊசியை போட்டுக் கொள்ளலாமா? பக்க விளைவுகள் ஏற்படுமா? டெபோ-ப்ரோவேரா எனும் மருந்தை ஊசிமூலம் உடலில் செலுத்தினால் அது மூன்று மாத காலத்துக்கு கொஞ்சம் கொஞ்சமாக ரத்தத்தில் கலந்து மாத விலக்கு சுழற்சி மற்றும் கருமுட்டை உருவாவதை தடுத்து கருத்தடையை ஏற்படுத்துகிறது. இதனால் மாத விலக்கு வராமல் அல்லது குறைவாக இருக்கும். சில சமயம் அந்த நாட்களில் வரும் வயிற்றுவலியும் குறையும். இந்த ஊசியினால் சிலருக்கு மாதவிலக்கு முற்றிலுமாக நிற்காமல், முறைப்படி இல்லாமல் அவ்வப்போது வருவது, மன அழுத்தம், வாந்தி, மார்புவலி போன்ற பக்க விளைவுகள் வரலாம். மறுபடி குழந்தை வேண்டுமென்று இந்த மருந்தை நிறுத்தினாலும் கரு உருவாவது தாமதப்படலாம். சிலருக்கு இந்த மருந்து அலர்ஜியாகலாம். அதிக உதிரப் போக்குக்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலையில் உள்ளவர்கள் இதனை உபயோகிக்கக் கூடாது.

ஆபரேஷன் மீது பயம்
எனக்கு வயது 37. மணமாகி, இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த இரண்டு மூன்று மாதங்களாக எனக்கு அந்த மூன்று நாட்களில் அதிகளவு உதிரப்போக்கு ஏற்படுகிறது. டாக்டரிடம் காண்பித்தால் ஆபரேஷன் பண்ண சொல்லிவிடுவாரோ என்று பயமாக இருக்கிறது. ஆபரேஷன் இல்லாமல் இதனை சரிப்படுத்த வழி உள்ளதா? எதனால் உதிரப்போக்கில் திடீர் மாறுபாடு ஏற்படுகிறது?
கர்ப்பப்பையின் உள் சுவரை ஒட்டியிருக்கும் ஜவ்வு, ஹார்மோன் சுரப்பின் போது கரைந்து வெளியே வரவேண்டும். சில சமயம் முழுவதுமாக கரையாமல் வழக்கமான அளவுக்கு மேல் வளர்ந்து தடித்துவிடுகிற நிலையில் அதிக உதிரப் போக்கு ஏற்படும். தவிர, உள்வரி ஜவ்வு இடம் மாறி அமைவதால் உண்டாகும் எண்டோமெட்ரியோஸிஸ் என்ற நோய் ஏற்பட்டாலோ, வேறு காரணங்களே இல்லாமல் ஹார்மோன்கள் சரிவர இயங்காமல் இருந்தாலோ, உள் சுவரில் பாலிப், ஃபைப்ராய்ட் போன்ற கட்டிகள் இருந்தாலோ அல்லது கர்ப்பப்பை புற்று நோய் இருந்தாலோ அதிகப்படியான உதிரப்போக்கு ஏற்படலாம். இவ்வாறான உடல் மாற்றங்கள்தான் என்றில்லை, டென்ஷன், பயம், குழப்பம் போன்ற மன உளைச்சல்களும்கூட அதிக உதிரப்போக்கை ஏற்படுத்தும்.
அதிகப்படியான உதிரப்போக்குக்கு முன்பு ஆபரேஷன் மட்டுமே தீர்வாக இருந்தது. இப்போது கர்ப்பப்பையில் பெரிய கட்டிகள் இருந்தால் மட்டுமே ஆபரேஷன் தேவை என்ற வகையில் பல வழி முறைகள் உள்ளன. சிறிய கட்டிகள் இருந்தால் லேசர் ட்ரீட்மென்ட் அல்லது எலக்ட்ரோ சர்ஜரி மூலமே சரிப்படுத்தி விடலாம். கர்ப்பப்பையை சுற்றியுள்ள சிறு கட்டிகள் குறிப்பாக உள்சுவர் கட்டிகள்தான் அதிகளவு உதிரப்போக்கை ஏற்படுத்துகின்றன. கர்ப்பப்பைவாய் வழியாக எலக்ட்ரோடை செலுத்தி கட்டிகளை கரைப்பதன் மூலம் இப்பிரச்னைக்கு விரைவான நிவாரணம் கிடைக்கிறது. கட்டிகள் இல்லை. ஆனால் அதிக ரத்தப் போக்கு என்றால் எளிய மற்றும் நவீன சிகிச்சையான யூட்ரஸ் பலூன் தெரபி மூலம் குணமடையலாம். கர்ப்பப்பைவாய் வழியாக பலூனை உள்ளே நுழைத்து செய்யப்படும் சிகிச்சை இது. பலூனிற்குள் வெப்பக் காற்றை செலுத்தி, விரிவடைந்த பலூன் மூலம் அதிகப்படியான ரத்தத்தை வரவைக்கும் திசுக்கள் அழிக்கப்படும். குழந்தை பிறந்து, இனி குழந்தை வேண்டாம் என்று நினைப்பவர்களும், மெனோபாஸிற்கு முந்தைய நிலையில் இருப்பவர்களும் இந்த சிகிச்சையை செய்துகொள்ளலாம்.

மருந்துகளால் முடியும்
எனக்கு 33 வயது. அதிக ரத்தப்போக்கு இருந்ததால் டாக்டர் D & C செய்தார். கட்டி எதுவும் இல்லை என்று ஸ்கேனில் தெரிந்தது. Simple Endomeòtrial Hyperplasia என்ற நோய் இருப்பதால் கர்ப்பப்பை நீக்கும் ஆபரேஷன் செய்துகொள்ள சொன்னார். மருந்து மாத்திரைகளால் இதை சரிசெய்ய முடியாதா?
முடியும். Dysfunctional Uterine Bleeding (DUB) என்ற மாதவிலக்கு நோய்க்கு ஹார்மோன் மாத்திரைகளை மருத்துவ ஆலோசனையின்படி 3-6 மாதம் உட்கொண்டால் குணமடைய வாய்ப்புண்டு. ஆனால் முறையாக ஸ்கேன் தேவைப்பட்டால் Endometrial Biopsy செய்துகொள்ள வேண்டியது அவசியம். சரியாகவில்லை என்றால் ஆபரேஷன் அல்லது மாற்றுமுறை சிகிச்சை தேவைப்படும்.

என் வயது 20. இரண்டு வருடமாக மாதா மாதம் விலக்காவதில்லை. இதனால் கட்டி ஏற்பட வாயப்புண்டா? திருமணம் செய்து கொள்ளலாமா? தாம்பத்ய உறவு, குழந்தை பிறப்பு ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படுமா?
சீதோஷ்ணம், டைபாய்டு, காசநோய், வைரஸ் போன்ற ஏதாவது ஒரு பாதிப்பால் உடல் பலவீனமாகியோ அல்லது மன அழுத்தம் காரணமாகவோ மாதவிலக்கு நின்று நின்று வரலாம். சரியாக வராவிட்டால் கட்டிதான் என அர்த்தமில்லை. திருமணம் செய்துகொள்ளலாம். தாம்பத்ய உறவு, குழந்தை பெறுதல் ஆகியவற்றுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.

பிறப்புறுப்பில் அரிப்பு
மாதவிலக்கு முடிந்து நாலைந்து நாட்களுக்கு பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படுகிறது. ஏன்? என்ன செய்வது?
நீங்கள் உபயோகிக்கும் துணி பாதுகாப்பானதாக, சுத்தமாக, 100% பருத்தியினால் ஆனதாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அரிக்கும். மாற்றிப் பாருங்கள். பலன் கிடைக்கும்.

பிசிஓடி ஒரு நோயல்ல
மகளுக்கு 23 வயது. மாதவிலக்கு ஒழுங்கின்மையால் டாக்டரிடம் சென்ற போது அவளுக்கு PCOD இருப்பதாக கூறினார். இதனால் குழந்தை பிறப்பது பாதிக்குமா?
இது ஒரு நோயல்ல, குறைபாடுதான். சினைமுட்டைகள் வெளியேறாத காரணத்தால் உண்டாவது. இந்த பிரச்னை பல வயதிலும் பெண்களை பாதிக்கலாம். அந்தந்த வயதில் தேவைப்படும் மருந்துகளோடு, உடற் பயிற்சி செய்வது, எடை குறைப்பது போன்ற முறைகளை கடைப்பிடித்தால் கருத்தரிப்பதிலோ குழந்தை பிறப்பதிலோ பிரச்னை வராமல் தடுக்கலாம். மாதவிலக்கையும் ஒழுங்குபடுத்தலாம்.

ஹார்மோன் மாத்திரையும் எடையும்
எனக்கு PCOD நோய்க்காக ஹார்மோன் மாத்திரைகள் சாப்பிட சொன்னார் டாக்டர். இதனால் உடல் பருமனாகிவிடுமா?
PCOD இருந்தால் உடல் பருமன் ஆகும் வாய்ப்பு அதிகம். மாத விலக்கை சீர்படுத்த கொடுக்கப்படும் Low Dose ஹார்மோன் மாத்திரை களால் பருமன் அதிகரிக்கும் வாய்ப்பு குறைவுதான்.

காப்பர் டி வேண்டாம்
அடிக்கடி வயிறுவலி, அதிக ரத்தப் போக்கு என்று டாக்டரிடம் சென்றேன். எனக்கு Pelvic Inflammatory Disease(கிருமிகள் பாதிப்பு) இருப்பதாக கூறி மருந்துகள் கொடுத்து சரி செய்தார். அடுத்த குழந்தையை தள்ளிப்போட எந்த கருத்தடை முறை நல்லது?
கருத்தடை மாத்திரைகள் அல்லது Depo Provera என்ற மூன்று மாதத்துக்கொருமுறை போடும் ஊசி பயன்படுத்தலாம். காப்பர் டீயை தவிர்ப்பது நல்லது. ஏற்கனவே உள்ள பாதிப்பை அது அதிகமாக்கும்.

அதிகமான வயிற்றுவலி
என் வயது 25. மாதவிலக்கு நாட்களில் எனக்கு அதிக வயிற்றுவலி இருக்கிறது. எதனால் இந்த வலி ஏற்படுகிறது? இதற்கு நிவாரணிகளை உபயோகிக்க லாமா?
மாதவிலக்கு நாட்களில் தாங்கக்கூடிய வயிற்று வலிவருவது இயற்கையே. ப்ராஸ்டோகிளாண்டின் (Prostoglandin) போன்ற ஹார்மோன்கள் சுரப்பதாலும், உள்ளே இருக்கும் உதிரத்தை வெளியே அனுப்புவதற்காக கர்ப்பப்பை பிசைந்து கொடுப்பதாலும் இத்தகைய வலி ஏற்படுகிறது. ஆனால் அந்த வலி நமது அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் நிலை இருந்தாலோ அல்லது வலியுடன் சேர்த்து அதிக உதிரப்போக்கு ஏற்பட்டாலோ அதன் காரணத்தை கண்டறிந்து சிகிச்சை பெறுவது நலம். உங்கள் வயது 25. பூப்பெய்தும் காலத்தில் ஏற்படும் இந்த வலி சுமார் 25 வயதில் ஏறக்குறைய சரியாகி விடும். திருமணமும், குழந்தை பிறப்பும் இந்த வலியை நிவர்த்தி செய்துவிடும் என்பது விஞ்ஞானபூர்வமாகவும் அறியப் பட்டுள்ளது. வலியை சகிக்கும் தன்மை உங்களுக்கு குறைவாக இருந்தால் வலி அதிகமாக தெரியும். அந்த நாட்களில் ஒரே இடத்தில் தனிமையில் அழுது கொண்டிராமல் கவனத்தை திசை திருப்பினால் நிம்மதி. இது மனோ ரீதியான ஒரு தீர்வு.

கலர் பற்றி கவலை வேண்டாம்
எனக்கு இன்னும் திருமணமாகவில்லை. மாதவிலக்கின்போது ஒவ்வொரு முறையும் 3 முதல் 5 மணி நேரம் பயங்கர வயிற்று வலியால் அவதிப்படுகிறேன். டாக்டரின் ஆலோசனைப்படி முதல் நாள் மட்டும் இரண்டு Bolonex OT மாத்திரையை தண்ணீரில் கரைத்து சாப்பிட்டேன். வலி குறைந்தது. ஆனால், அதன் பிறகு வந்த மாதங்களில் ரத்தம் பிரவுன் கலரில் இருக்கிறது. அளவும் கால்பங்காக குறைந்து விட்டது. முதல் 12 மணி நேரம் பிரவுன் கலராகவும் அடுத்த 12 மணி நேரம் சிவப்பாகவும் இருக்கிறது. கை, கால் சோர்வு வேறு. விலக்கான முதல் 5 மணி நேரத்திற்கு எது சாப்பிட்டாலும் வாந்தி வருகிறது. இதனால் மணமான பின் குழந்தை பிறப்பில் ஏதேனும் சிக்கல் ஏற்படுமா? மாதவிலக்கை நினைத்தாலே எனக்கு பயமாக இருக்கிறது.
மாத விலக்கின் போது முதல் 3 முதல் 5 மணி நேரம் வயிற்று வலி ஏற்படுவது சகஜம்தான். வலி நிவாரணி சாப்பிடு வதாக குறிப்பிட்டிருக்கிறீர்கள். அதையே பழக்கமாக்கி விடாதீர்கள். பிரவுன் கலரில் வருவதற்கும், ரத்தப்போக்கு குறைந்த தற்கும் அந்த மாத்திரை காரணமல்ல. முதல் 12 மணி நேரம் பிரவுன் கலராக வும், அடுத்த 12 மணி நேரம் சிவப்பாக வும் இருப்பது பற்றி கவலைப்படாதீர்கள். முதலில் வெளியே வரும் உதிரமானது கருப்பையின் உள்ளே இருக்கும் சதை, ஜவ்வு, ரத்தம் எல்லாம் கலந்து கலர் அப்படித்தான் இருக்கும். பின்பு உதிரம் மட்டும் வெளியே வருவதால் சிவப்பு. பயத்தை விரட்டுங்கள். சாப்பிடுவது, தூங்குவதுபோல இது சாதாரண நிகழ்வு. அந்த நேரத்தில் உங்கள் கவனத்தை வேறு வேலை, பாட்டு போன்ற வற்றில் திருப்புங்கள். உங்களுக்குத்தான் பிரச்னையே இல்லையே. மணமான பிறகு என்ன சிக்கல் வந்துவிடப் போகிறது?

கருத்தரிக்க நல்ல நாள்
நான் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறேன். எனக்கு மாதவிலக்குக்கு முன் 10 நாட்கள் முதுகு வலி (லோயர் பேக்) கால், மார்பு வலி ஏற்படுகிறது. கருத்தரித்த பிறகும் இப்படி இருக்குமா? முதுகு வலி, கால் வலி ஏற்பட்டவுடன் மனதில் சோர்வும் ஏற்படுகிறது. இந்த சூழ் நிலையில் கருத்தரிக்க முடியாது என்று நினைக்கிறேன். எந்த நாட்களில் உறவு வைத்துக் கொண்டால் கருத்தரிக்கலாம். (26-28 நாட்களில் கரெக்டாக வந்து விடுகிறது).
சரியான சுழற்சியில் மாதவிலக்கு வருவதால் கருத்தரிப்பதில் பிரச்னை இருக்காது. முதுகு, கால், மார்பு வலி என்பதெல்லாம் சாதாரணம். சோர்வும் அப்படியே. இந்த சூழ்நிலையில் கருத் தரிக்க முடியாது என்பது வீண் பயம். கருத்தரித்த பிறகு வலி, சோர்வெல்லாம் இருக்காது. மாதவிலக்கான நாளிலிருந்து 12 முதல் 16-ம் நாள் வரை உறவு வைத்துக் கொண்டால் கருத்தரிக்க மிக அதிக வாய்ப்பு உள்ளது. முதல் 9 நாட்கள் கடைசி 10 நாட்கள் கருத்தரிக்கும் வாய்ப்பு குறைவு. இடைப்பட்ட நாட்களில் வாய்ப்பு அதிகம்.

வயிறு உப்புசம்
ஒவ்வொரு முறையும் எனக்கு மாதவிலக்கு வருவதற்கு முன் வயிறு உப்புசமாகி விடுகிறது? எதனால் இப்படியாகிறது? மருந்துகள் மூலம் சரிப்படுத்த முடியுமா?
இது சாதாரண பிரச்னைதான். வயிறு உப்புசம் மட்டுமின்றி உடல் முழுவதும் நீர் கோத்திருப்பது போன்ற உணர்வு, பேதி, வாந்தி, குமட்டல் போன்ற உணர்வுகளும் ஏற்படும். மாதவிலக்கின் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள் இவை என விஞ்ஞான ரீதியிலேயே கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு காரணம் மாதவிலக்குக்காக உடலில் சுரக்கும் ஹார்மோன் மாறுபாடு. எனவே, கவலைப்பட வேண்டாம். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மருத்துவரின் உதவியோடு நிவாரணிகளை நாடலாம்.

கர்ப்பப்பை பலவீனம்
மாதவிலக்கு 3, 4 நாட்களுக்கு மேல் நீடித்தால் கர்ப்பப்பை பலவீனத்தை காட்டுகிறதா? கர்ப்பப்பை பலவீனமானால் குழந்தை பிறப்பு பாதிக்குமா?
சாதாரணமாகவே மாதவிலக்கின் போது 6 நாட்கள் ரத்தப்போக்கு இருக்கலாம். அதுவே சாதாரணம் என்கிற போது, மூன்று நான்கு நாட்களை பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள். இதனால் கர்ப்பப்பை நிச்சயம் பலவீனமடையாது. குழந்தை பிறப்பிலும் பாதிப்பு இருக்காது.

என் வயது 21. மாதவிலக்கு ஒழுங்காக வருவதில்லை. சில மாதம் 28 நாட்களிலும் சில சமயம் 30, 32, 35, 38 என்றும் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனால் உடல் பாதிப்பு ஏற்படுமா?
வயது 21தான். பெரிதாக கவலைப்பட வேண்டாம். நாட்கள் அதிகமானாலும், எப்படியாவது சுழற்சி சரியாகிவிடும். இது 25 வயதிற்கு உட்பட்ட வயதில் சாதாரணமானதுதான். ஹார்மோன்களின் சுழற்சி, வேகம் போன்றவை சில மாற்றங்களுக்கும் சில தடைகளுக்கும் உட்படுவதால் இவை நேரலாம். மிக சரியான சுழற்சி வேண்டுமென்றால் ஹார்மோன் டெஸ்ட் மற்றும் மருத்துவரின் ஆலோசனையை அணுகலாம். உடல் நலத்தில் இதனால் பெரிய பாதிப்பு ஏதும் நிச்சயம் ஏற்படாது.

வெள்ளைப்படுதல் துர்நாற்றம்
எனக்கு வயது 37. எனக்கு மாதவிலக்கு முடிந்த பிறகு வெள்ளை அதிகம் படுகிறது. துர்நாற்றமும், லேசான அரிப்பும் இருக்கிறது. எதனால் இந்த பிரச்னைகள்? இதனை சரி செய்வது எப்படி?
மாதவிலக்கு முடிந்த பிறகு சிறிதளவு வெள்ளைப்படுவது சகஜம்தான். ஆனால் அரிப்பு, துர்நாற்றம் இருப்பதால் இது நிச்சயம் கிருமிகளின் தாக்கத்தைக் குறிக்கிறது. நாப்கின்களை சுத்தமாக உபயோகிப்பதும், அடிக்கடி பிறப்புறுப்பை சுத்தம் செய்வதும் நோயிலிருந்து காப்பாற்றும். உடனடி நிவாரணத்துக்கு மருத்துவரை அணுகி கிருமிகளை கட்டுப்படுத்தும் மருந்து வாங்கி பயன்படுத்தினால் இந்த தொல்லையிலிருந்து விடுபடலாம். உங்களுக்கு 37 வயது என்பதால் எதற்கும் Sugar டெஸ்ட் செய்வது நல்லது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இந்த தொந்தரவு அதிகம் உண்டு.

கீரை, பழம் சாப்பிடுங்க
எனக்கு மாதவிலக்குக்கு நான்கு நாட்களுக்கு முன்பு வெள்ளைப்படுவது போல சிவப்பு படுகிறது. வெள்ளைப்படுதலும் உண்டு. இதனால் குழந்தை பிறப்பில் பாதிப்பு உண்டாகுமா? எனக்கு வயது 24. மணமாகி 8 மாதங்களாகின்றன. இதுவரை கரு உருவாகவில்லை. மருத்துவரிடம் காண்பித்தால் ஹீமோகுளோபின் 7.4 எம்.ஜிதான் உள்ளது என்று இரும்புச் சத்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ளச் சொன்னார். ஆனால் மாதவிலக்கான 22 நாட்களில் வாந்தி வருவதுபோல இருக்கிறது. (31-ம் நாள் கரெக்ட்டாக பீரியட்ஸ் வந்து விடுகிறது.) இதனை சரிப்படுத்துவது எப்படி? வெள்ளைபடுதல் ஆபத்தா?
மாதவிலக்கு நாட்களுக்கு முன்பு லேசான ரத்தம் கலந்து வெள்ளைப் படுவது பொதுவான விஷயம்தான். மாத விலக்காக போகிறது என்பதற்கான அறிகுறிதான். இதனால் குழந்தை பிறப்பில் எந்த பாதிப்பும் ஏற்படாது. மணமாகி 8 மாதங்களே ஆனதால் கரு உருவாகவில்லை என்று கவலைப்பட வேண்டாம். சேர்ந்து வாழ்ந்து 1 வருடத்திற்கு பிறகும் கருத்தரிக்கவில்லை என்றால் டாக்டரை பார்க்கலாம். ஹீமோ குளோபின் 7.4 எம்.ஜி. என்பது சற்று கவலை தரக்கூடிய விஷயம்தான். மாத்திரைகளை மட்டும் நம்பாமல், இரும்புச் சத்துள்ள கீரை, காய்கறி, பேரீச்சம்பழம், வெல்லம் போன்றவை சாப்பிடுங்கள். வாந்தி பற்றியும் கவலை தேவையில்லை. சுழற்சி சரியாகவே இருக்கிறது. அரிப்போ, நாற்றமோ இல்லாத வெள்ளைப் போக்கால் எந்த பாதிப்பும் இல்லை. அது இயற்கையே.

கல் போல கட்டிகள் மாதவிலக்கான மூன்று நாட்களும் கட்டி கட்டியாக, கல் போலவும், அதிகமாகவும் போகிறது. விலக்கில்லாத நாட்களில் வெள்ளைநிற ஜவ்வு போல வெளியேறுகிறது. இது எதனால்? சிகிச்சை தேவையா?
மாதவிலக்கு எப்போதும் திரவமாக போவதுதான் சரி. கர்ப்பப்பையின் உள்ளே கட்டியாக ஏற்படும் மாதவிலக்கு சில மாற்றங்களால் திரவமாக்கப்பட்டு வெளிவரும். கட்டியாக வெளிப்படுவது உதிரப்போக்கு அதிகமாக இருப்பதையும், அந்த மாற்றங்கள் ஏற்படாமலே வெளியே வந்துவிடுகிறது என்பதையும் காண்பிக்கிறது. இதற்கு சிகிச்சை தேவை. எதனால் ஏற்படுகிறது என்பதை தெரிந்து சிகிச்சை பெற வேண்டும். கர்ப்பப்பையில் கட்டி இருந்தால்கூட உதிரம் கட்டியாக வெளிவரலாம். ஸ்கேன் செய்து பாருங்கள்.

மாத்திரைகளின் பக்க விளைவுகள்
மாதவிலக்கு கோளாறுகளுக்காக எடுத்துக்கொள்ளும் மாத்திரை, மருந்துகளால் பக்க விளைவுகள் ஏற்படுமா? (குழந்தை பிறப்பு, கர்ப்பம் அடைவதில் பாதிப்பு இப்படி..) விளக்கமாக கூறுங்கள்.
மாதவிலக்கு கோளாறுகள் பலவிதம். சுழற்சி சரியில்லாமல் இருக்கலாம். சரியாக இருந்தாலும் உதிரப்போக்கு அதிக மாகவோ, குறைவாகவோ இருக்கலாம். அல்லது சுழற்சியே இல்லாமல் அவ்வப்போது உதிரப்போக்கு ஏற்படலாம். எப்படி இருந்தாலும் சிகிச்சை பெறுவது நல்லது. பக்க விளைவுகளைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம். கோளாறு களுக்கு காரணம் கண்டறிந்து சரி செய்துவிட்டால், கர்ப்பமடைவதிலோ குழந்தை பிறப்பிலோ எந்த பாதிப்பும் ஏற்படாது.

கர்ப்பப்பை நீக்கியும் உதிரப்போக்கு
என் வயது 40. கோளாறு இருந்ததால் கர்ப்பப்பையை நீக்கிவிட்டேன். இப்போதும் மாதா மாதம் ரத்தப் போக்கு உள்ளது. எப்படி? இதனால் உடல்நலக் குறைபாடு ஏற்படுமா?
சினைப்பையை (ஓவரி) நீக்கி விட்டீர்களா என்பதை சொல்லவில்லையே.. வயது 40 தான் என்பதால் அதை நீக்கியிருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது. கர்ப்பப்பையில் என்ன கோளாறு என்பதையும் குறிப்பிடவில்லை. ரத்தப்போக்கு மிதமாக அவ்வப்போது இருந்தால் பயப்பட வேண்டாம். அதிகமானால் ஏற்கெனவே ஆபரேஷன் காரணமாக ஏதாவது பிரச்னைகள் ஏற்பட்டிருக்கிறதா என்பதை பரிசோதித்து சிகிச்சை மூலம் நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்.

இந்த வயதிலும் வரலாம்
என் மகளுக்கு 4 வயது. ஒவ்வொரு மாதமும் அவளுக்கு மாதவிலக்கு போல சிறிதளவு ரத்தக் கசிவு ஏற்படுகிறது. அவள் வயதுக்கு வந்துவிட்டதாக எடுத்துக் கொள்ளவா? இந்த வயதிலேயே அது சாத்தியமா? பயமாக இருக்கிறது. நாங்கள் என்ன செய்ய வேண்டும்? மருத்துவ வசதியே இல்லாத ஊரில் இருக்கும் எனக்கு சரியான ஆலோசனை தாருங்கள்.
நான்கு வயதில் கூட வயதுக்கு வந்த குழந்தைகள் உண்டு. இதை விரைவு படுத்தப்பட்ட பூப்பெய்தல் என்பார்கள். நீங்கள் முதலில் கவனிக்க வேண்டியது மார்பக வளர்ச்சி, உடல் வளர்ச்சி, மறைவிடங்களில் முடி வளர்ச்சி இருக்கிறதா என்பதை. இந்த மாற்றங்கள் இல்லாமல் நீங்கள் குறிப்பிடுவது போல சிறிதளவு ரத்தக் கசிவு அவ்வப்போது ஏற்படுவது நுண்கிருமி தாக்குதல் எனப்படும் வெஜைனைட்டிஸ் (Vaginitis) ஆகக் கூட இருக்கலாம். இதற்கு மிக சாதாரண சிகிச்சையே தேவைப்படும். அதே சமயம் நான்கு வயதிலேயே முழு வளர்ச்சி தென் பட்டால் உடலில் அளவுக்கு அதிகமான ஹார்மோன்கள் சுரக்கிறதா என்றும், அதற்கு என்ன காரணம் என்றும் மருத்துவரிடம் காட்டி தெரிந்து கொள்வது நலம். அரசு மருத்துவமனையிலோ குழந்தை நல மருத்துவரிடமோ பரிசோதியுங்கள்.

எனக்கு இரண்டு குழந்தைகள். இரண்டாம் பெண் குழந்தை பிறந்த இரண்டாம் நாள் அதற்கு லேசான வெள்ளைப் படுதல் இருப்பதை கவனித்தேன். இது ஏதாவது நோயின் அறிகுறியோ?
நிச்சயமாக நோய் அறிகுறி இல்லை. குழந்தைக்கு வெள்ளை படுவது மிக சாதாரண விஷயம்தான். பிறப்புறுப்பில் ரத்தம் வருவதுகூட இயற்கை. தாயின் உடலில் சுரந்த ஹார்மோன்கள் ஓரளவுக்கு குழந்தையின் ரத்தத்தில் கலந்து விடுவதால் இது ஏற்படுகிறது. ஆனால், சில மணி நேரங்கள் அல்லது சில நாட்களில் இது நிற்காவிட்டால் மருத்துவரிடம் பரிசோதிக்க வேண்டும்.

அந்த நேரம் உடலுறவு வேண்டாமே
எனக்கு மாதவிலக்கின்போதுதான் உடலுறவு கொள்ளும் ஆசை அதிகமாக ஏற்படுகிறது. ஆனால், கணவரோ அது தப்பு என்று கூறி ஒதுக்குகிறார். எனக்கு ஏன் அப்படி ஆசை வருகிறது?
அந்த நேரத்தில் உறவு கொள்வது சரியா, தவறா? ?

பொதுவாக பெண்களுக்கு மாதவிலக்கின்போது தாம்பத்ய உணர்வு மிகவும் குறைவாக இருக்கும். நீங்கள் விதி விலக்கு போலும். ஆசை ஏற்படுவதில் தவறொன்றும் கிடையாது. அந்த நேரத்தில் உடலுறவு கொண்டால் கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு. முக்கியமாக எண்டோமெட்ரியோசிஸ் (Endometriosis) என்ற நோய் வர வாய்ப்புள்ளது. அதாவது உதிரம் உடலுக்குள் சென்று கர்ப்பப்பை குழாய் வழியாக வெளியே வந்து படிந்து கர்ப்பப்பையை சுற்றியுள்ள இடங்களில் ரத்தக் கட்டிகளாக படிந்துவிடுவது.. மாதவிலக்கு காலத்தில் உடலுறவு கொள்வதால் இத்தகைய நிலை வரலாம் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. எனவே மிக அத்தியாவசியமாக இருந்தாலன்றி அந்த நாட்களில் தவிர்க்கலாமே!

பின்னாளில் பாதிப்பு
எனக்கு மாதவிலக்கு காலங்களில் அதிக உதிரப்போக்கு இருந்ததால் டாக்டர் கருத்தடை மாத்திரையை உபயோகிக்கச் சொன்னார். தொடர்ந்து இவற்றை உபயோகிப்பதால் பிற்காலத்தில் கர்ப்பப்பை தொடர்பான பிரச்னைகள் ஏதேனும் வர வாய்ப்புள்ளதா?
அதிக உதிரப் போக்குக்கு கருத்தடை மாத்திரை உபயோகிப்பது சரியானது. ஆனால், அதை மருத்துவரின் ஆலோசனையுடனும், குறிப்பிட்ட காலம் வரையிலும்தான் உபயோகிக்க வேண்டும். மருத்துவர் அந்த மாத்திரைகளை தருமுன் அதனால் பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்படுமா என்று உங்களை பரிசோதித்து, உங்கள் பரம்பரை நோய்களை பற்றி தெரிந்து கொண்டு கொடுப்பார். அதிக நாட்கள் சாப்பிடுவதாலும் ஆலோசனை இன்றி சாப்பிடுவதாலும் சிலருக்கு கர்ப்பப்பை புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. கருத்தடை மாத்திரை என்றவுடனே பயந்துவிட வேண்டாம். மணமாகாத பெண்களுக்குகூட அதிக உதிரப்போக்கு, ஒழுங்கற்ற உதிரப்போக்கு, ஒழுங்கற்ற சுழற்சி போன்ற பிரச்னைகளுக்கு இந்த மாத்திரைகள் தரப்படுகின்றன. மேலே சொன்னவற்றுக்கெல்லாம் காரணம் ஹார் மோன்கள் குறைபாடு. அந்த ஹார் மோன்களை மாத்திரை வடிவில் எடுத்துக் கொள்கிறோம். அவ்வளவுதான்.

டீன் ஏஜ் கவனிக்கவும்
மாதவிலக்கு நாட்களில் டீன் ஏஜ் பெண்கள் பின்பற்ற வேண்டிய முறைகள் என்னென்ன?
டீன் ஏஜில் பெண்களுக்கு சுகாதாரமில்லாமல், நுண் கிருமிகளின் தாக்குதல் ஏற்பட்டால் அதனால் பிற்காலத்தில் அவர்களின் குடும்ப வாழ்க்கையிலும் குழந்தை பிறப்பிலும் பிரச்னைகள் ஏற்படலாம்.
துணியைவிட இந்நேரத்தில் நாப்கினை உபயோகிப்பதுதான் நல்லது. சுகாதாரமானது, வசதியானது. நாப்கின் வாங்க வசதியில்லை என்பவர்கள், ஈரத்தை உறிஞ்சும் தன்மை அதிகமுள்ள மெல்லிய பருத்தித் துணிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதிக நீளம், தடிமனாக இல்லாமல், நாப்கின் அளவிற்கே இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங் கள். இதனை உள்ளாடைக்குள் (பேன்டீஸ்) வைத்துக்கொள்வதே பாதுகாப்பானது. நழுவிவிடும் என்ற பயம் இருக்காது. மேலாடையில் கறைபடாமலும் இருக்கும்.

இதனை நாள் முழுவும் வைத்திருக்காமல், ஓரளவு ஈரம் உறிஞ்சியதுமே எடுத்து சுத்தமாக துவைத்து வெந்நீரில் அலசி, காற்றோட்டமும் சூரிய வெளிச்சமும் உள்ள இடத்தில் உலரவைத்து உபயோகிக்க வேண்டும்.
நாப்கின் உபயோகிக் கும்போது அதை கவரிலிருந்து கை, அழுக்கு படாமல் எடுத்து பிறப்புறுப்பை நன்றாக கழுவி சுத்தம் செய்த பின்பு வைத்துக் கொள்வதுதான் சரியான முறை. அந்த நாப்கின் முழுவதும் நனைந்த பிறகு அடுத்தது மாற்றலாம் என்று இருந்துவிடக் கூடாது. ஓரளவு நனைந்ததுமே மாற்றிவிட வேண்டும். லேசாக உதிரம் பட்டாலும்கூட ஒரே நாப்கினை அதிக நேரம் வைத்திருக்கக்கூடாது. முக்கிய விஷயம், உபயோகித்த நாப்கினை அப்படியே வீசி விடாமல், தண்ணீரில் சுத்தம் செய்து, கறையை நீக்கி அதை ஒரு கவரில் போட்டு குப்பை தொட்டியில் போட வேண்டும். இது மற்றவர்களின் ஆரோக்யத்துக்கும் நாம் மதிப்பு தரும் முறை.

அந்த நாட்களில் டென்ஷன், கோபம் ஏற்படுவது இயற்கை. இப்படி 200-க்கு மேல் மாற்றங்கள் ஏற்படுகின்றனவாம். ஹார்மோன்கள் அதிகரிப்பு, சில வைட்டமின்கள் குறைபாடு (G.L". B6), வேலைப்பளு இவைதான் அதற்கு காரணம். ஆதரவான அன்பான சூழ்நிலையை ஏற்படுத்தினால் பலன் கிடைக்கும்.

சாப்பாடு முக்கியம்
மாதவிலக்கு நாட்களில் என்ன மாதிரியான உணவு சாப்பிட வேண்டும்? உணவுப் பொருட்களுக்கும், உதிரப்போக்கு, வலி, மனநிலை ஆகியவற்றுக்கும் தொடர்பு உண்டா?
அப்போது சாப்பிடும் உணவு வகைகளுக்கும், உதிரப்போக்கு, வலி ஆகியவற்றுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. சிலருக்கு அந்த சமயத்தில் லேசான வயிற்றுப்போக்கு ஏற்படும் என்று முன்பே கூறியிருந்தேன். அதோடு அந்த சமயத்தில் குடல், ஜீரண மண்டலத்தின் இயக்கம் சற்று மந்தமாக இருக்கும். அதனால் அதிக காரம், எண்ணெய் சேர்த்த, அஜீரணக் கோளாறுகளை உண்டாக்கக் கூடிய உணவுகளை தவிர்த்து எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளையே சாப்பிடுவது நலம். பழங்கள், கீரை வகைகள், காய்கறிகள், இரும்புச்சத்து மிக்க பேரிச்சம்பழம், முருங்கைக்கீரை போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

மாதவிலக்கு நாட்களில் பிறப்புறுப்பில் அதிக முடி இருந்தால் அசவுகர்யமாக இருக்கிறது. ஆனால் அந்த நேரத்தில் முடி நீக்குவது சரிதானா என்று தெரியவில்லை. எந்த முறையில் எப்போது நீக்கலாம்? மென்மையான பிறப்புறுப்பின் மேலான முடிகள் அந்தப் பகுதிக்கு பாதுகாப்பை அளிக்கின்றன. மாதவிலக்கு சமயத்தில் கட்டாயம் முடிகளை நீக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அசவுகரியமாக உணர்ந்தால் நீக்குவதிலும் தவறில்லை. பிறப்புறுப்பு மட்டுமல்ல கை, கால்களில் முடியை நீக்குவதானால்கூட ரேசர் உபயோகிக்கக் கூடாது. அது சருமத்தை கடினமாக்கி முடியை விரைவாகவும், முன்பைவிட கடினமாகவும் வளரச் செய்யும். காயம் ஏற்படவும், இன்பெக்க்ஷன் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இந்த முடிகளை நீக்குவதற்கென்றே கிரீம்கள் உள்ளன. இவற்றை பூசி சற்று நேரம் விட்டுவைத்து பின்னர் பஞ்சு தேய்த்து எடுத்து விடலாம். நேரடியாக பூசக் கூடாது. முதலில் காது மடலுக்கு பின்புறம் சிறிதளவு தடவிப் பாருங்கள். எரிச்சல், தோல் உரிதல், தடிப்பு போன்ற எந்த பக்க விளைவுகளும் ஏற்படாவிட்டால் மற்ற இடங்களில் பயன்படுத்தலாம்.

Montag, März 01, 2004

பூப்பெய்தும் போது ஓய்வு தேவையா..?

கல்வி மட்டுமே பிரதானம் என எண்ணும் இக்காலத்தில், பருவமடைந்த பெண் குழந்தைகளை ஐந்து அல்லது ஆறு நாட்களிலேயே பள்ளிக்குப் புத்தகச் சுமையுடன் அனுப்பி விடுகிறோமே, இது எந்த அளவில் அவர்கள் உடல், மனநிலையைப் பாதிக்கும்?

அக்காலத்தில் 16 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என முதியோர்கள் கூறியது மருத்துவரீதியாக அவசியமற்றதா? இக் கேள்வியை வெவ்வேறு பிரிவுகளில் உள்ள மூன்று மருத்துவர்களின் முன் வைத்தோம். இதற்கு அவர்கள் அளித்த பதில்:

டாக்டர் கீதா அர்ஜுன்
(கைனகாலஜிஸ்ட், ஈ.வி. கல்யாணி நர்ஸிங் ஹோம்)

பெண்கள் பூப்பெய்தும் பொழுது அவர்களுக்குப் பதினாறு நாட்கள் ஓய்வென்பது
அவசியமேயில்லை. ஆண் பிள்ளைகளுக்கு மீசை முளைக்கும் பொழுது அவர்களை வீட்டிலா உட்கார வைக்கிறோம்? இல்லையே, அதே போல்தான் இதுவும்!

பெண்களுக்கு இது அவர்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டம். இதற்காக அவர்களைத் தனிமைப்படுத்தவோ, ஓய்வு கொடுக்கவோ மருத்துவரீதியாகத் தேவையில்லை. இந்நிலை அவர்களுக்கு உடலளவில், மனதளவில் எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாது. தேவைப்பட்டால் ரொம்ப ரத்தப் போக்கு, வயிற்றுவலி பிற இன்னல்கள் உள்ளவர்கள் அவர்களுக்கு தேவைப்படும் நாட்களுக்கு ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். மற்றபடி பூப்பெய்துவதென்பது ஒரு சாதாரண நிகழ்வுதான். பாலன்ஸ்ட் டயட் போதும். தனி உணவு முறைகள் எதற்கும் அவசியமில்லை."

டாக்டர் சுசீலா ஸ்ரீவத்ஸ்வா:
(மனநலமருத்துவர், அப்போலோ மருத்துவமனை)
அந்தக் காலத்திற்கும் இந்தக் காலத்திற்கும் எத்தனையோ வித வேறுபாடுகள். உடல் ரீதியாக, மன ரீதியாக சமூக ரீதியாக மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

சமூக ரீதியாக அப்பொழுதெல்லாம் பெண்கள் பூப்பெய்தவுடன் பெரிய விழாவாக எடுத்து சுற்றம், நட்பு என்று அனைவருக்கும் அறிவித்தனர். காரணம் பெண்ணின் திருமணத்திற்கு இந்த பப்ளிசிட்டி ஒரு தேவையாக இருந்தது. இன்று அப்படியில்லை. பத்திரிகைகள், திருமணப் பதிவு மையங்களில் பெயரைப் பதிவு செய்து வரன் தேட முடிகிறது.

இரண்டாவது உடல் ரீதியாக தற்காலக் குழந்தைகள் மிகவும்
ஆரோக்கியமாக வளர்க்கப்படுகிறார்கள். காரணம் இக்கால பெற்றோர்கள் ஒன்று, இரண்டு குழந்தைகளோடு நிறுத்திவிடுகிறார்கள். அதுவும் பெற்றோர்கள் விஷயம் தெரிந்தவர்களாகவும் இருக்கிறார்கள். உடலில் ஏதாவது கோளாறு, பாதிப்பு என்றால் தகுந்த சிகிச்சைகள் உடனடியாக அக்குழந்தைகளுக்குக் கிடைத்து விடுகின்றன. அந்தக் காலத்தில் பத்தோடு பதினொன்றாக வளர்க்கப்பட்டதால், ஆரம்பத்திலிருந்தே போதிய ஊட்டச்சத்து கொடுக்கப்படாததால் 'அந்த நேரத்தில்' மட்டும் 'தனியாக' கவனிக்கப் பட்டார்கள்.

இத்தகைய 'தனி கவனிப்பு' இக்காலக் குழந்தைகளுக்குத் தேவையில்லை. எனக்கு வயசுக்கு வந்த பொழுது தினமும் நல்லெண்ணெய் கொடுத்தார்கள். இப்பொழுது என் பெண்ணிற்கும் அதையே கடைப்பிடிக்க முடியாது. ஏனெனில் தற்கால உணவு முறைகளில் அவ்வாறு செய்வது உடலில் கொழுப்பை அதிகரிக்கச் செய்யும். அதிகக் கொழுப்பு இருதயத்திற்கு அதிக பாதிப்பு.

மனரீதியாகப் பார்க்கும்பொழுது அந்தக் காலத்தில் பெண் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள். பெண் வயசுக்கு வந்து விட்டால் தாவணி போட்டு விடுவார்கள். இப்ப அப்படிச் செய்ய முடியுமா? அதுவும் இருபாலரும் சேர்ந்து படிக்கும் பள்ளியில் இத்தகைய பழக்க வழக்கங்கள் கேலிக்கும், கிண்டலுக்குமாகி மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும். அதுவும் தற்போது பள்ளிகளிலெல்லாம் ஒரே விதமான உடைகள் தான். இதனால் ஒரு பெண் வயசுக்கு வந்து விட்டால் அதை அவள் யாரிடமும் சொல்ல வேண்டிய அவசியமும் ஏற்படுவதில்லை."

சுப்புலட்சுமி
(சித்தமருத்துவர், கர்ப்பரட்சாம்பிகை கருகாப்பு நிலையம்)

வயதுக்கு வந்த உடன் பெண்களை தனியாக உட்கார வைப்பது சரிதான். அப்படி உட்கார இப்போதைய சிறுமிகள் விரும்புவது இல்லை. ஆனால் இப்பழக்கம் சுகாதாரமானதாக இருப்பதோடு, அவர்கள் மனதிற்கும், உடலிற்கும் முழு ஓய்வு கொடுப்பதும் அவசியம்.

முதலில் பயந்து போய் இருக்கும் குழந்தைக்கு தைரியம் கொடுத்து, இது இயல்பாகவே எல்லாப் பெண்களுக்கும் வருவது தான் எனக் கூறி அவர்களது மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டும். நம் ஊர்களில் வயதுக்கு வந்த உடன் பாலுடன் முட்டை கலந்து குடிக்கச் செய்வதும், நல்லெண்ணெயுடன் முட்டை கலந்து குடிக்கும் வழக்கமும் உள்ளது. இவை புரதச் சத்தும், கால்சியச் சத்தும் நிறைந்தவை. குளிக்கும் போது வயதுக்கு வந்த பெண்ணை நிறைய மஞ்சள் பூசிக் குளிக்கச் செய்வதும், தண்ணீரில் மாவிலை கலந்து குளிக்க வைக்கும் பழக்கமும் உண்டு. மஞ்சளும், மாவிலையும் மிகச் சிறந்த தொற்று நீக்கியாகச் செயல்படுகிறது. சில ஊர்களிலும், கிராமங்களிலும் கீரை விதை ஒரு தேக்கரண்டியுடன் பாலும் அருந்தும் பழக்கம் உள்ளது. கீரை விதை எலும்புகளுக்கு வன்மையை அளிக்கிறது.

கைக்குத்தல் அரிசியில் செய்த பிட்டு, பனைவெல்லாம் கலந்த மாவு உருண்டை தரும் வழக்கம் உண்டு. அரிசியில் இருக்கும் மாவுச் சத்தானது மற்ற தானியங்களில் உள்ள மாவுச் சத்தை விட வித்தியாசமானது. இந்த மாவுச் சத்தில் நூறு சதவீதம் அமினோ பெக்டின் என்ற சத்து இருக்கிறது. இது நாம் உண்ணும் உணவுகள் எளிமையாக செரிப்பதற்கு காரணமாக அமைகிறது. அரிசியில் எட்டு சதவிகிதம் புரதச் சத்து இருக்கிறது. இந்தப் புரதச் சத்தானது வளர்சிதை மாற்றத்தின் காரணமாக எளிதில் உடலை வளர்க்கும் சத்தாக மாறி நம் உடல் உள்ளுறுப்புகளை உறுதியாக்குகிறது. கைக்குத்தல் அரிசியில் வைட்டமின் 'பி' உயிர்ச் சத்து உள்ளது. இது தோலுக்கும், இரத்த நாளங்களுக்கும், ஊட்டத்தையும், உறுதியையும் அளிக்கிறது.

இரத்தப் போக்கு அதிகமாக இருந்தால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைந்தால் அதனை நிவர்த்தி செய்ய பனைவெல்லம் (இரும்புச் சத்து நிறைந்தது) கலந்த மாவு உருண்டை வழங்கப்படுகிறது.

உறவினர்கள் அனைவரும் வந்து குழந்தைகளை ஆசீர்வாதம் செய்வதுடன் வகை வகையாகச் சத்து நிறைந்த உணவுகளைப் 'பொங்கிப் போடும்' வழக்கமும் உண்டு. அதில் முக்கியமாக உளுந்தஞ்சோறு, உளுந்தங்களி, உளுந்தங்காடி முதலியவை செய்வார்கள். உளுந்து கொண்டு செய்யப்படும் உணவு வகைகள் இடுப்பு எலும்பிற்கு (pelvic bones) வன்மையைக் கொடுக்கும். புரதச் சத்து நிறைந்தவை.

தற்போது டீன் ஏஜ் பெண்கள் எங்கள் மருத்துவமனைக்கு வருவது
மாதவிடாயின் போது ஏற்படும் கடுமையான வயிற்றுவலி பிரச்சினைக்குத் தான். அவர்கள் வயதிற்கு வந்த உடன் பெற்றோர்கள் அவர்களுக்கு சத்தான உணவுப் பொருட்களைக் கொடுப்பதோடு, குறைந்தது ஒரு வாரமாவது முழு ஓய்வு கொடுத்து கவனித்துக் கொண்டால் மாதவிடாய்க் கோளாறுகள், முதுகு வலி முதலியவை வராது.

- தொகுப்பு: சாந்தி ரங்கராஜன்

Samstag, November 15, 2003

நோய் தீர்க்கும் ஒரு விசேட குளியல்

இந்த வெந்நீர் குளியல் மாதவிலக்கு பிசச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு நோய்களையும் எளிமையான முறையில் தீர்க்கிறது.

டீன் ஏஜ் பெண்களாகட்டும்... நடுத்தர வயதுப் பெண்களாகட்டும்.. வயது வித்தியாசமில்லாமல் பல பெண்களையும் தொல்லைபடுத்திக் கொண்டிருக்கும் ஒரு விஷயம் மாதவிலக்கு பிரச்னை!

அதிலும் சில பெண்களுக்கு அந்த மூன்று நாட்களின் போது இடுப்பும் வயிறும் அப்படியே விட்டுப் போவது போல் வலிக்கும். பல பெண்கள் துடித்துப் போவார்கள். இதற்காக வலி நிவாரணி மாத்திரைகள் எடுத்துக் கொள்வார்கள்.

இந்த மாத்திரைகள் வலியைக் குறைத்து வேறுபல புதிய நோய்களை நமக்குத் தந்து கொண்டிருக்கும்.

இந்த இடுப்புக் குளியல், மாதவிலக்கு நேரத்தில் பெண்களுக்கு ஏற்படும் பல பிரச்னைகளைச் சரி செய்கிறது. அது மட்டுமல்ல, பெண்கள் வயதுக்கு வரத் தாமதமாவது, வெள்ளைப்படுதல், அல்சர், மற்றும் மலச்சிக்கல், இடுப்பு எலும்புக்கட்டு வலி, ஏன்... உடலுறவு தொடர்பான சில குறைகளை நீக்குவது என்று பல பிரச்னைகளுக்கும் இக்குளியல் மிக உபயோகமாக இருக்கிறது!

இடுப்புக் குளியல் என்றால் என்னவோ ஏதோ என்று நினைத்துவிட வேண்டாம். நமது உடம்பில் இடுப்புப் பகுதி தண்ணீரில் அமிழ்ந்து இருக்கும்படி உட்கார்ந்து இருந்து, குறிப்பிட்ட சில பகுதிகளை அழுத்தம் கொடுத்து, நமக்கு நாமே மசாஜ் செய்து கொள்வதுதான் இடுப்புக் குளியல்!

இயற்கை மருத்துவம் செய்யும் பல டாக்டர்கள் இந்த முறையை சிபாரிசு செய்கிறார்கள்.

இடுப்புக் குளியலை எப்படி வீட்டிலேயே செய்வது என்று வாசகிகளுக்குப் புரியும் விதமாக எடுத்துச் சொல்கிறார் இயற்கை மருத்துவரான டாக்டர். மங்கை.

‘‘இடுப்புக் குளியலை வீட்டிலேயே எளிதாகச் செய்யலாம். வீட்டில் பாத்டப் உள்ளவர்கள் அதை உபயோகித்து இந்த இடுப்புக் குளியலை எடுத்துக் கொள்ளலாம். இல்லாதவர்கள், நீள அகலம் அதிகமான, பெரிய பிளாஸ்டிக் டப் ஒன்றைக் கூட இதற்குப் பயன்படுத்தலாம். ‘அதையெல்லாம் வாங்குவதற்கு முந்நூறு நானூறு ரூபாய்க்கும் மேல செலவாகுமே...’ என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால் மேலே சொன்ன பிரச்னைகளுக்காக ஊசிகள், மருந்துகள், டெஸ்டுகள் என்று ஒவ்வொரு தரமும் ஆயிரக்கணக்கில் மருத்துவமனைகளில் செலவழிக்கும் போது, இந்தச் செலவு மிகச் சிறிய செலவுதான்.

தவிர, ஒருமுறை வாங்கி வைத்துவிட்டால் அதைப் பல மாதங்கள், ஏன் வருடங்கள்கூட உபயோகிக்க முடியும். வீட்டில் உள்ள பெண்கள் அனைவரும் கூட உபயோகிக்க முடியும்!

இடுப்புக் குளியலை குளிர்ந்த நீர் சாதாரணத் தண்ணீர், வெந்நீர் என்று மூன்று விதமான நீரைக் கொண்டு செய்யலாம். ஒவ்வொரு வகை நீர் உபயோகித்து குளிக்கும்போதும் ஒவ்வொரு வகை எஃபெக்ட் கிடைக்கும்.

பொதுவாகவே இதை வெறும் வயிற்றுடன், அதிகாலை மற்றும் மாலையில் செய்வதே நல்லது. முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய விஷயம்... இடுப்புக் குளியலில் எந்தவிதமான பின்விளைவுகளும் கிடையாது என்பதுதான்!

குளிர்ந்த நீர் இடுப்புக் குளியல்
உங்களுடைய தலையும் பாதமும் மட்டும் வெளியே இருக்கும்படி, பாத்டப்பில் அல்லது பிளாஸ்டிக் டப்பில் அல்லது தொட்டியில் அமர்ந்து கொள்ளுங்கள். உயரம் அதிகமான தொட்டி அல்லது டப்களில், டப்பின் உட்புறம் ஒரு சிறு ஸ்டூல் போட்டு, அதில் உங்கள் உட்காரும் பாகத்தை (Back) வைத்துக் கொண்டால் குளிப்பதற்கு சுலபமாக இருக்கும். பாதங்களை, டப்புக்கு வெளியே மற்றொரு ஸ்டூலில் வைத்துக் கொள் ளுங்கள். முதலில் உங்களது மார்பகங்களுக்குக் கீழே இருந்து, தொடைகள் வரை வரும்படி குளிர்ந்த நீரை ஊற்றிக் கொள்ளுங்கள். பின்னர், நீரில் அமிழ்ந்தபடி உங்கள் அடி வயிற்றுப் பகுதியை சின்னச் சின்ன வட்டங்களாக, மென்மையாக தேய்த்துவிட வேண்டும். சிறிது நேரத்தில் வேகத்தை சற்றே அதிகப் படுத்தித் தேயுங்கள். இதனால், அந்தப் பகுதிகளில் இரத்த ஓட்டம் சீராகும்.

இப்படி தேய்க்கும்போது அடிவயிற்றுப் பகுதி மட்டுமல்ல... பிறப்புறுப்பின் பகுதிகளையும், தொடையின் ஆரம்பப் பகுதிகளையும் நன்றாகத் தேய்த்து விடுங்கள்.

இந்தவகை இடுப்புக் குளியல் வெள்ளைப் படுதல், அல்சர், மலச்சிக்கல், போன்ற பிரச்னைகளுக்கு நல்ல தீர்வைக் கொடுக்கும்.

வெந்நீர் இடுப்புக் குளியல்
இந்தக் குளியலில், உடல் பொறுக்கும் அளவுக்கு வெந்நீரின் சூடு இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த வகைக் குளியலில் தொப்புளில் இருந்து தொடைகள்வரை நீரை ஊற்றிக் கொள்ளுங்கள். மற்றபடி, அமரும் முறை, தேய்த்து விடுதல் எல்லாமே முன்னர் சொன்னது போலத்தான்.

மாதவிலக்கின் போது அதிகமான இரத்தப்போக்கு உள்ளவர்கள், மாதவிலக்குக் கோளாறு உள்ளவர்கள், தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் இந்தக் குளியலை மேற்கொள்ளலாம். பெண்கள் வயதுக்கு வருவது தாமதமாதல், மாதவிலக்கின்போது வலி அதிகம் இருத்தல் போன்ற பிரச்னைகளுக்கும் இந்த வகைக் குளியல் நல்ல பலனைத் தரும்.

சாதாரண நீர் இடுப்புக் குளியலுக்கும் இதே முறைதான்.

ஒரு விஷயத்தை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.. குளிர்ந்த நீர் இடுப்புக் குளியலுக்குப் பின்னர் வெந்நீரில், ஒருமுறை சாதாரணக் குளியல் குளித்து விடுங்கள். அதேபோல, வெந்நீர் அல்லது சாதாரண நீர் இடுப்புக் குளியலுக்குப் பின்னர் குளிர்ந்த நீரில், வெறுமனே சாதாரணக் குளியல் குளிக்க வேண்டும்.

இடுப்புக் குளியலுக்குப் பின், பப்பாளி, மாதுளை மற்றும் பப்பாளி விதைகள் போன்றவற்றை சாப்பிடுவது நல்ல பலனைத் தரும்.

பத்து வயது முதலே பெண்கள் இக்குளியலை மேற்கொள்ளலாம். எந்தெந்த நேரங்களில் இந்த இடுப்புக் குளியல் குளிக்கக் கூடாது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

மாதவிலக்கின் போதும், கர்ப்பக் காலத்தின் போதும் இடுப்புக் குளியலை மேற்கொள்ளக் கூடாது. அதேபோல இதயம் சம்பந்தமான பிரச்னை உள்ளவர்களும் இடுப்புக் குளியலைத் தவிர்க்க வேண்டும்.

இக்குளியலுக்கு எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ளலாம் என்பதும், வெந்நீரின் வெப்பம் எவ்வளவு இருக்கலாம் என்பதும் தனிப்பட்ட ஒவ்வொருவரின் நிலமையைப் பொறுத்து மாறும். அதனால், முதல்முறை இடுப்புக் குளியல் செய்யும்போது மட்டும் உங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று செய்யுங்கள்!’’

மு. சாமுண்டீஸ்வரி
நன்றி - குமுதம்