சித்த மருத்துவர் ஜமுனா.
திருமணம் முடிந்தவுடன் எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்ப்பது குழந்தைப்பேறு. நமது நாட்டைப் பொறுத்தவரை 75 சதவீத தம்பதிகளே திருமணமான முதல் ஆண்டில் குழந்தைப் பெற்றுக் கொள்கிறார்கள். இரு ஆண்டிற்குள் 85 சதவீத தம்பதிகள் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். பொதுவாக பெண்கள் 21 வயதிலிருந்து 27 வயதுக்குள் குழந்தைப் பெற்றுக் கொள்வது தாய்க்கு ஆரோக்கியம். இந்த வயதில் இருக்கும் பெண்களுக்கு சினை முட்டை உற்பத்தியில் பாதிப்பு இருக்காது. இந்த வயதுக்குள் தான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. ஓராண்டு முன்னே பின்னே இருந்தால் பெரிய பாதிப்பு ஏற்பட்டு விடாது.
சமீபகாலமாக திருமணமான வேலை பார்க்கும் பெண்கள் கர்ப்பத்தை தள்ளிப் போடுவதைப் பார்க்க முடிகிறது. 20,21 வயதில் திருமணமான பெண்கள் இப்படி குழந்தை பேற்றை தள்ளிப் போடலாம். ஆனால் 30,35 வயதில் திருமணம் செய்து கொண்டு, நாற்பது வயதில் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடுவது காலகாலமாய் கண்ணீர் சிந்த வேண்டிய நிலைக்கு தள்ளிவிடும். ஏனெனில் வயது கூடக் கூட சிறிய குறைபாடுகள் கூட பெரிய குறைபாடுகளாக மாறக் கூடும். பெண்களென்றால் சினை முட்டை உற்பத்தி குறைந்து விடும். ஆண்களென்றால் உயிரணுக்களின் உயிரோட்ட வேகம் குறைந்து விடும். முப்பது வயதில் கல்யாணம் செய்து கொண்டவர்கள் இயற்கையாகவே குழந்தைப்பேறு நமக்கு இருக்கும் என்று மூன்று, நான்கு வருடங்கள் காத்திருக்கக் கூடாது. காலம் தாழ்த்திய அல்லது பருவம் கடந்த திருமணம் என்றால் ஆண், பெண் இருவருமே உரிய மருத்துவ சோதனை செய்து கொள்வது பின்னால் சில பிரச்சனைகள் வராது தடுக்க உதவும். திருமணத்திற்கு முன் தெரிந்தோ, தெரியாமலோ முறையற்ற உறவுகளில் ஈடுபட்டிருந்தால் பால்வினை நோய்கள் தாக்கம் இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆண்கள் உயிரணு எண்ணிக்கையை சோதித்து பார்த்துக் கொள்ள வேண்டும். தாமதமாக திருமணம் செய்து கொள்பவர்கள் ஏதேனும் குறைகள் இருப்பதை நிவர்த்தி செய்து கொண்ட பின்னரே, இல்லறத்தில் ஈடுபட வேண்டும் அப்போது தான் இனிய மணவாழ்க்கை அமையும்.
நாகரிகம் என்ற பெயரிலும் பெண் சுதந்திரம், பெண் விடுதலை என்ற பெயரிலும், திருமணத்திற்கு முன்பே ஆண்களுடன் "டேட்டிங்" வைத்துக் கொள்ளல் மற்றும் பிற ஆண்களுடன் உறவு ஏதேனும் வைத்திருந்தால் பால்வினை நோயின் தாக்கம் இருக்கிறதா என்று பெண்கள் சோதனை செய்து கண்டறிந்து கொள்வது நல்லது. இன்னமும் சொல்லப்போனால், எந்தத் தவறும் செய்யாத ஆணும், பெண்ணும் கூட, திருமணத்திற்கு முன் உயிரணு சோதனை, கருக்குழாய் சோதனை ஆகியவைகளைச் செய்து கொள்வது நல்லது.
அண்மைக் காலமாக பல பெண்கள் என்னிடம் வந்து "டாக்டர் என் பெற்றோரை எனக்கு திருமணம் செய்து வைக்கச் சொல்லுங்கள்" என்று சொன்னபோது உள்ளபடியே உடைந்து போகிறேன். ஆனால் பெற்றோர்களைக் கேட்டால் "என் மகள் திருமணம் செய்து வையுங்கள்" என்று கேட்கவில்லையே, இன்னமும் சொல்லப் போனால் திருமணம் வேண்டாம் என்றும், கூறுகிறாரே என்கிறார்கள்.
ஆனால் உண்மை நிலையோ ரத்தத்தைக் கொதிக்க வைக்கும். சம்பாதிக்கும் தன் மகள் திருமணம் செய்து கொண்டு போய் விட்டால் வருமானம் போய் விடுமே என்ற பயத்தில் பல பெற்றோர்கள் வேலை பார்க்கும் பெண்களின் திருமணப் பிரச்சனையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்கள். இது மிகவும் கொடுமையான போக்கு. பெண்ணின் கனவுகளை பெற்றோர்களே கருக்கி விடுகிறார்கள். எந்த பெண்ணும் பெற்றோரிடம் வந்து "எனக்கு திருமணம் செய்து வையுங்கள்" என்று கேட்க மாட்டாள்.
சில குடும்பங்களில் உரிய வயது கடந்தும், ஆண்களுக்கு திருமணம் செய்து வைக்காமல் இருக்கிறார்கள். "அவனது தங்கைக்கு திருமணம் முடித்த பிறகே அவனுக்கு திருமணம்" என்று முடிவெடுதது விடுவார்கள். இதன் விளைவு ஆண்கள் தங்கள் ஆசைகளை தவறான வழிகளில் சென்று நிறைவேற்றிக் கொள்கிறார்கள். இதன் காரணமாக எய்ட்ஸ் போன்ற பயங்கர நோய்க்கும் ஆளாகிறார்கள்.
குறித்த வயதில் திருமணம் ஆகவில்லையென்றால் பொருளாதார பிரச்சனைகள், தாம்பத்ய வாழ்வில் நாட்டம் குறைவு, பெண்மைக்குறைவு, மலட்டுத்தன்மை போன்ற விபரீதங்கள் நிகழ்ந்து விட வாய்ப்புண்டு. கணவன்-மனைவிக்கிடையே தாழ்வு மனப்பான்மை தோன்றி கருத்தொருமித்த மணவாழ்க்கை அமையாமல் போய்விடக்கூடும்.
மனைவி வேலைக்கு போக வேண்டும் என்பது பெரும்பாலான ஆண்களின் எதிர்ப்பார்ப்பு. வேலை பார்க்கும் பெண்களுக்கும், வேலை பார்க்காத பெண்களுக்கும சினை முட்டை கருத்தரிப்பதில் கூட வேறுபாடு இருப்பதை பல்லாண்டு காலமாக நான் கண்டு வருகிறேன். மனசு, உடல், கருமுட்டை சினைப்பு இம்மூன்றுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. என்னிடம் வரும் பெண்களில் வேலை பார்க்காத பெண்களுக்கு சிகிச்சை அளித்து குழந்தை பாக்கியத்தைக் கொடுப்பதில் வெற்றி கிடைப்பது அதிகம். காரணம் எந்த டென்ஷனும் இல்லாமல், மனசு லேசாகி, உடலும் லேசாகி உறவில் ஈடுபடும் போது கருமுட்டை சினைப்பது எளிதாகிறது.
Donnerstag, Juli 08, 2004
Abonnieren
Posts (Atom)