Sonntag, Februar 08, 2009

மாதவிடாய் நிற்றல்

- டொக்டர்.எம்.கே.முருகானந்தன் -

அந்தப் பெண் பயந்தடித்துக் கொண்டு ஓடி வந்தாள். மாத விடாய் வர வேண்டிய தினத்துக்கு வரவில்லையாம். 10 நாட்கள் பிந்திவிட்டதாம். பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள். தங்கினால் வெட்கக் கேடு.

இன்னொரு பெண்ணின் பிரச்சனை மிகவும் அந்தரங்கமானது. கணவனுடன் சேர்ந்திருக்க விருப்பமுள்ள போதும், சேர்ந்திருக்கும் போது அவளுக்கு முடிவதில்லை. சற்று வேதனை. பொறுத்துக் கொண்டாலும், கணவனுக்கு இதமாக இல்லை என அதிருப்திப்படுகிறான்.

மற்றொருத்திக்கு மேலெல்லாம் எரிவு, படபடப்பு, பதற்றம், சினம், காரணம் சொல்ல முடியாத வியர்வை, உடல் உழைவு.

இவர்களுக்கெல்லாம் என்ன பிரச்சனை?

இவர்கள் வயது 50க்கு சற்று கூட அல்லது குறைய. மாதவிடாய் முற்றாக நிற்பதோடு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்.

முதற் பெண்ணுக்கு சிறுநீர்ப் பரிசோதனை செய்தபோது கர்ப்பம் தங்கவில்லை என்பது உறுதியாகிற்று.

மாதவிடாய் முற்றாக நிற்பதற்கு முந்தைய காலங்களில் இவ்வாறு பிந்தி வருவது சகசம். நாற்பது வயதை அண்டிய காலங்களிலேயே மாதவிடாய் குழப்பங்கள் சிலரில் ஆரம்பித்து விடும்.

ஆரம்பத்தில் 8 நாள் 10நாள் என முந்தி முந்தி வரும். ஆயினும் நாட் செல்லச் செல்ல பிந்தத் தொடங்கும். 10, 15 நாட்கள் என ஆரம்பித்து 2,3 மாதத்திற்கு ஒரு தடவையென தாமதமாவதுண்டு.

ஆனால் எல்லோருக்கும் அப்படித்தான் நடக்கும் என்று சொல்ல முடியாது. திடீர் என எவ்வித ஆர்ப்பாட்டம் இன்றி நின்று விடுவதும் உண்டு. மோசமான நிலையில் குருதி இறைத்து சத்திரசிகிச்சை வரை போவதும் உண்டு.

எவ்வாறாயினும் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களில் 24 மாதங்களுக்கும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 12 மாதங்களுக்கும் தொடர்ந்து வராதிருந்தால் மட்டுமே மாதவிடாய் முற்றாக நின்று விட்டதென நிச்சயமாகக் கூறலாம். சாத்தியங்கள் குறைவாயினும் அதுவரை கரு தங்காது என அறுதியாகக் கூற முடியாது. இவ்வயதில் கருத்தடை முறையாக ஆண் உறை பாவிப்பது பொருத்தமாக இருக்கும்.

இரண்டாவது பெண்ணுக்கு மாதவிடாய் முற்றாக நின்றுவிட்டதால் உறுப்பின் மென்சவ்வுகள் முதிர்ந்து அவளது பிறப்புறுப்பு சற்று இறுகிவிட்டது. அத்துடன் அதற்கு ஈரலிப்பையும் வழவழுப்பையும் தரும் சுரப்பிகளின் செயற்பாடு குறைந்ததால் வரட்சியாகி விட்டது. இதனாலேயே உறவு சுகமாக இருக்கவில்லை.

இதற்காக கணவனும் மனைவியும் கடுகடுப்பாகி சினத்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை. வரட்சியையும், இறுக்கத்தையும் தணிக்கக் கூடிய கிறீம் வகைகள் இருக்கின்றன. இவற்றை உபயோகிப்பதின் மூலம் குடும்ப வாழ்வில் மீண்டும் வசந்தம் வீசவைக்கலாம்.

மூன்றாவது பெண்ணுக்கு ஏற்பட்ட வியர்வை, பதற்றம், படபடப்பு, தூக்கக் குறைவு, முதலானவை மாதவிடாய் நிற்கும்போது நிகழும் ஹோர்மோன் குறைபாடுகளால் ஏற்படுவது. நோயாளிக்கு மிகுந்த துன்பத்தைக் கொடுக்கும் இவ்வறிகுறிகள் வீட்டில் உள்ள ஏனையவர்களால் பொதுவாக உணரப்படாதவை.

'என்ன சின்ன விசயங்களுக்கெல்லாம் பெரிய Fuss பண்ணுகிறா' என அவர்களை எண்ண வைக்கும்.

தினசரி உடற்பயிற்சி, தியானம், சுவாசப் பயிற்சி, குளிர்ச்சியான சூழல் போன்றவை இவ்வறிகுறிகளைத் தணிக்க உதவும். Evening primrose oil, Soya, மற்றும் சில கிழங்கு வகைகளிலிருந்து பெறப்படும் இயற்கை பொருட்கள் அவ்வறிகுறிகளைத் தணிக்கின்றன என நம்பப்படுகிறது.

இவற்றால் முடியாதபோது ஹோர்மோன் மாத்திரைகளை சில காலம் உட்கொள்ள வேண்டி வரலாம்.

மாதவிடாய் முற்றாக நிற்றல் என்பது ஒரு நோயல்ல. வாழ்க்கைச் சக்கரத்தின் தவிர்க்க முடியாத ஒரு பகுதி. ஆயினும் அதன் போது ஏற்படும் உடல் ரீதியானதும், உளரீதியானதுமான பல மாற்றங்கள் சில பெண்களுக்கு மிகுந்த துன்பத்தை அளிக்கின்றன.

மேற்கூறிய மாற்றங்களைத் தவிர சிறுநீர் சம்பந்தமான சில பிரச்சனைகளும் மிகுந்த இடைஞ்சலை ஏற்படுத்துகின்றன.

அடிக்கடி சிறுநீர் கழித்தல், இரவில் இதற்காக அடிக்கடி எழும்புவதால் தனதும், வீட்டில் உள்ளவர்களினதும் தூக்கத்தையும் குழப்பல், சிறுநீரை அடக்க முடியாமல் தன்னிச்சையின்றிச் சிந்துதல், இருமும்போதும், தும்மும்போதும், முக்கும்போதும் தன்னையறியாது சிறுநீர் சிந்துதல் போன்றவை சில்லறைப் பிரச்சனைகள் போல் தோன்றினாலும், நோயாளிக்கும் வீட்டினருக்கும் சிரமங்களையும் மனவிரிசல்களையும் ஏற்றபடுத்தக் கூடியளவு சிக்கலானது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

எலும்புத் தேய்வு (Osteoporosis), இருதய நோய்கள் போன்ற வேறு சில பாதிப்புகளும் மாதவிடாய் முற்றாக நின்றபின் பெண்களுக்கு வருவதற்கான சாத்தியங்கள் அதிகம்.





தலை முடி உதிர்ந்து மென்மையாகி சோபை இழப்பது மாதவிடாய் நின்ற பின் ஏற்படும் மற்றொரு பிரச்சனையாகும்.


'வயதாகிவிட்டது. என்ன செய்வது? போறமட்டும் இவற்றையெல்லாம் பொறுத்துக் கொள்ள வேண்டியதுதான்' என விரக்தியோடு வாழ வேண்டியதில்லை. பெண்ணாய்ப் பிறந்த பாவம் என கழிவிரக்கம் கொள்ள வேண்டியதில்லை.

நீங்களும் மற்றவர்கள் போல மகிழ்வோடு வாழலாம். வசந்தங்கள் மீண்டும் வரும்.

இவற்றைக் குணமாக்க மருத்துவம் இருக்கிறது. ஒரு சிலவற்றை முற்றாகக் குணமாக்க முடியாவிட்டாலும் பிரச்சனைகளின் தாக்கங்களைத் தணித்து நலமாகவும் மகிழ்வாகவும் வாழ வழிகள் இருக்கவே செய்கின்றன.

நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான். தயக்கத்தை விட்டு உங்கள் பிரச்சனைகளை மருத்துவருடன் வெளிப்படையாகக் கலந்துரையாடுங்கள். வெளிப்படையாக என்பதை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

Quelle - டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

1 Kommentar:

Inilan hat gesagt…

மிகவும் உபயோகமான விஷயங்கள்
நண்றி
-இனிலன்
http://inilan.blogspot.com/